
கொலு (Golu) என்பது நவராத்திரியின் ஒரு முக்கிய அங்கம். பட்டறிவு, நுண்ணறிவு, கலைத்திறன், ஓவியத்திறன், ஆராய்ச்சி என்று பற்பல துறைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் மிக நுட்பமான கலை வடிவம். கொலுவானது, இந்த செயற்கை நுண்ணறிவு காலத்திலும் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கலைச்செல்வங்களையும் மீள் பார்வை செய்யக் கூடிய மாபெரும் வாய்ப்பை தனக்கு நல்குவதாகச் சொல்கிறார், அமெரிக்கா, வட கரோலைனாவில், சார்லட் நகரில் வசிக்கும், மகாலக்ஷ்மி ரமணி.
கோலம் வரைதல், ஓவியம் தீட்டுதல், வீட்டு உட்புற வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்தவர் மகாலக்ஷ்மி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர், 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் கொலு வைத்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருள் சார்ந்தும், முற்றிலும் மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் இருந்தும் இவர் வைக்கும் கொலுவிற்கு சார்லட் நகரில் தனி ரசிகர் கூட்டமே உண்டு.
கிட்டத்தட்ட 3 மாதங்கள் அயராத உழைப்பில், பேப்பர், 50 கிலோ எடையுள்ள மொத்த அட்டைகள், பழைய துணிமணிகள், வண்ணப்பூச்சு, சிமெண்ட் கலவை, ஸ்டைரோஃபோம், பசை என்று சாதாரண பொருட்களில் இருந்து அசாதரணமான படைப்புகளைச் செய்து கொலுவில் வைத்து அசத்தி வருகிறார்.
இந்த ஆண்டு, ஹிந்துக்களின் புனித யாத்திரை தலங்களின் முதன்மையான, யமுனை ஆறு பிறக்கும் யமுனோத்ரி, பாகீரதி ஆறு பிறக்கும் கங்கோத்ரி, மந்தாகினி ஆறு பிறக்கும் கேதர்நாத், அலக்நந்தா ஆறு பிறக்கும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களை, தன் வீட்டு கொலுவில் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
செங்கையில் மான் தூக்கி,
சிவந்த மழுவும் தூக்கி,
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி,
கங்கையை, திங்களை கதித்த சடைமேல் தூக்கி நிற்கும்
சிவபெருமானின் திருத்தலம் ஒவ்வொன்றையும், அதன் தோற்றம் மாறாமல் தத்ரூபமாக வடிவமைத்திருப்பதோடு மட்டுமல்லாமல்,
கோவில் அமைந்துள்ள உத்தரகாண்டு மலைப்பிரதேசத்தையும்,
அங்குள்ள பனி படர்ந்த மலைகளில் வெவ்வேறு உயரங்களில் காணப்படும் மரங்கள் மற்றும் செடிகள்,
பனிமலையிலிருந்து பிறந்து சூரிய ஒளியில் மின்னும் நீரோடைகள்,
கோவிலை ஒட்டி அமைந்திருக்கும் பூக்கடைகள்,
உணவு விடுதிகள்,
ஹெலிகாப்டர் இறங்கும் தளம்
என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார்.
பூக்கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் மலர் மாலைகள்,
மப்ளர் அணிந்த பணியாளர்கள்,
தேநீர் கடைகளில் காணப்படும் குளிர்பான பாட்டில்கள்,
சமோசா, நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்
என்று நுண்ணிய விடயங்களை கூட பேப்பர், அட்டை மற்றும் வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்தி அவரே கைப்பட தயாரித்துள்ளது இந்தக் கொலுவின் சிறப்பம்சம்.
கொலுவின் நடுநாயகமாக, 12 அடி நீளமும், 5 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நான்கு கோவில்களும் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, பக்திப் பரவசத்திலும் நம்மை ஆழ்த்துகிறது. கிட்டத்தட்ட 150க்கும் அதிகமானோரை கொலுவிற்கு அழைத்து அறுசுவை உணவளித்து இதை ஒரு மாபெரும் உற்சவமாக கொண்டாடுவதோடு, கொலு செய்முறை காணொளி தயாரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பல்லாயிரம் இணைய ரசிகர்களையும் பெற்றுள்ளார் மகா.