
"உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே" - என்பதுண்டு அல்லவா! ஆனால் நாம் நாற்பதுகளைத் தாண்டும்போது பி.பி. மற்றும் ஹார்ட் பிராப்ளம் என்று ஒன்று ஒன்றாகத் தலைகாட்டுவதால் இத்தனை வருடங்களாக பழகிவிட்ட ருசியான சமையலில் உப்பைக் குறைக்கும்படி டாக்டர்கள் கூறும்போது 'பாதி உப்பை’ குறைக்கக் கடும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது அல்லவா?
முடிந்தவரை ருசியைக் கெடுக்காமல் உப்பைக் குறைக்க சில எளிமையான வழிகள் உண்டு. நாம் சாப்பிடும் உப்பு தினமும் ஒரு பங்கு வேர்வையாக வெளியேறுகிறது! இப்போதைய நடைமுறையில் வேர்வை வெளியேறும் படியான வேலைகளை (முக்கியமாக வாக்கிங் செல்வதை) எந்த சாக்கு சொல்லி தவிர்க்கலாம் என்பதே குறி. வீட்டு வேலைகளான வீட்டைப் பெருக்குவது, துணி துவைப்பது, அரைப்பது, இடிப்பது போன்றவைகளை நாம் செய்வதும் அரிதாகிவிட்டது.
கால் வீக்கம், கைவீக்கம் என்று டாக்டரிடம் செல்வதைவிட உப்பைக் குறைத்து ஒரு மாதம் சமைத்துச் சாப்பிட்டு பின் தானாகவே பலன் கிடைத்ததை அறியலாம்.
உலகிலேயே இந்தியர்கள்தான் உப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அறிய வந்துள்ளது. இரவும் பகலும் ஃபேன் மற்றும் ஏ.சி.யிலும் கழிக்க முயல்கிறோம். நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்ததைவிட அதிக வெரைட்டியான உணவுகளை நாம் உட்கொள்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.
ஃபாஸ்ட் புட் தயார் செய்யும்போது, சிப்ஸ் வகையானவை களைச் சாப்பிடும்போது உப்பை மேல் தூவி பரிமாறுவதால் அதிகமான உப்பு நாம் உட்கொள்ள நேருகிறது.
இவைகளைத் தவிர்க்க முடியாமல் போகும்போது வீட்டில் நாம் சமைப்பதில் முடிந்த அளவு உப்பைக் குறைக்க சில வழிகள்:
1. முதலில் கறிகாய்களை வேகவைக்கும்போது உடன் உப்புப் போடாமல் வெந்தபின் இறக்கிவைத்து உப்பு தூவி தேங்காயுடன் பரிமாறினால் உப்பு குறைவாக பிடிக்கும், ருசி மாறாது.
2. உப்பை டேபிள் மேல் வைக்கும்போது ஸ்பூனில் எடுத்துக்கொள்வதைவிட சின்னச் சின்ன ஓட்டையுள்ள மிளகு உப்பு பாட்டிலில் வைத்தால் குறைவாக உபயோகிக்க வாய்ப்பு உள்ளது.
3. காய்கறிகளை வதக்கும்போது உப்புப் போடாத, வேர்க்கடலைப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி தூவி பரிமாறினால் உப்பையும் குறைக்கலாம். ருசி மாற்றமும் இருக்கும். காய் அளவுக்கு மட்டும் உப்பு சேர்ப்பதால் நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு குறையும்.
4. தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்பது நம் எல்லோருக்குமே ஒரு வீக்னஸ். தயிர் சாதத்தில் மிளகாய், கொத்துமல்லி, வெள்ளரிப் பிஞ்சு, திராட்சை, மாதுளம் என்று சேர்த்து கடுகு தாளித்து சாப்பிட ஆரம்பித்தால் ஊறுகாய் என்று நாக்கு கேட்பதைத் தவிர்க்கலாம்.
5. வருடத்திற்கு என்று போடும் ஊறுகாய்களில் சாதாரணமாகவே உப்பை அதிகம் சேர்க்கிறோம். அதனால் உடனுக்குடன் உபயோகிக்கும்படி உப்பு குறைவாகப் போட்டு ஊறுகாய் தயாரிக்கலாம். காரட், தக்காளி, வெங்காயம், முள்ளங்கி என்று அந்த சீசனுக்கேற்ப உடனுக்குடன் செலவழிக்கும்படியான ஊறுகாய் தயாரிக்கலாம்.
6. காரட், வெள்ளரி பொடியாக நறுக்கி உப்பு சேர்ப்பதற்கு பதில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிட உடலுக்கும் நல்லது.
7. டயாபடிக் இல்லாதவர்கள் சிறிது வெல்லம், சிறிது சர்க்கரை சேர்ப்பது உப்பைக் குறைத்துவிட்டு ருசி கெடாமல் சமைக்கலாம்.
8. சப்பாத்தி பூரிக்கு மாவு கலக்கும்போது, நாம் எப்படி சாதத்திற்கு உப்பு போடாமல் சமைக்கிறோமோ அதேபோல் உப்பு இல்லாமல் மாவு கலக்கவும். தேவையான உப்பு தொட்டுக்கொள்ளும் க்ரேவியில் இருப்பதால் அதுவே போதுமானது.
9.வெய்யிலில் கிலோ கணக்காக வடாம் இட்டு டப்பிகளை நிரப்பி இருப்பீர்களே! வத்தல், உப்பு, மிளகாய் போடுவதை முதலில் நிறுத்தி கடையில் அளவாக ஒரு பாக்கெட் என்று வாங்கி பொரிக்கவும்.
10.மாத பட்ஜெட்டில் உப்பு வாங்கும்போது உப்பு ஜாடியில் உப்பை நிறைக்கும்போது ஒவ்வொரு மாதமும் அளவு அதிகமாக உபயோகிக்கவில்லை என்பதை கண்டிப்பாக கவனிக்கவும்.
நிருபமா மோஹன்
நன்றி : மங்கையர் மலர்