

தமிழகத்தில் ஆடி மாதத் தள்ளுபடி விற்பனை ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் 10% முதல் 50% வரை சலுகைகளுடன் களைகட்டுகிறது. தங்க, வைர நகைகளுக்கு சேதாரம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் திட்டங்கள், இலவசப் பரிசுகள், காய்கறி, பழங்கள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் தளங்களும் EMI வசதியுடன் விற்பனையை உயர்த்தி, வணிக மந்தநிலையைத் தடுக்கின்றன.
பிரபல ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் 10% முதல் 50% வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில நகைக் கடைகளில் தங்க நகைகளின் சேதாரத்தில் 1% தள்ளுபடியும், பழைய தங்கம் மாற்றும்போது கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
தங்க நகைகள் மட்டுமன்றி வைர நகைகளுக்கும் காரட்டுக்கு ரூபாய் 6,000 சிறப்பு தள்ளுபடி வழங்கப் படுகிறது. இது தவிர சேதாரம் இல்லாமல் பழைய நகைக்கு அதே எடையில் புதிய நகை பெற்றுக் கொள்ளும் சிறப்பு 'எக்ஸ்சேஞ்ச்' திட்டமும் உள்ளது.
தொடங்கியாச்சு ஆடித்தள்ளுபடி:
தமிழ் மாதமான ஆடி (ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை), திருமணம் போன்ற சுபகாரியங்கள் குறைவான மாதமாக இது இருப்பதால், வியாபாரிகள் தங்கள் விற்பனையை அதிகரிப்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்துகின்றனர். பழைய சரக்குகளை காலி செய்யவும், புதிய பண்டிகைக் கால தயாரிப்புகளுக்கு இடமளிக்கவும் இந்தத் தள்ளுபடி விற்பனை உதவுகிறது.
ஆரம்பத்தில் நகை, புடவைக் கடைகளில் மட்டுமே இருந்த இந்தத் தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - ஆடித்தள்ளுபடி தொடக்கம்
முன்பெல்லாம் ஆடி மாதத்தில் விவசாயிகள் கையில் பணம் இருக்காது. ஆடி மாதத்தில் கரும்பு, நெல் நடவு பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையில் உள்ள பணம் அனைத்தையும் செலவு செய்து விடுவார்கள். அத்துடன் ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த சுப விசேஷங்களும் நடைபெறாது என்பதால் ஜவுளிக் கடைகளில் விற்பனை இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.
அந்த மாத சம்பளத்தைக் கூட ஊழியர்களுக்கு சில சமயம் கொடுக்க முடியாமல், பல ஜவுளிக்கடைகள் திணறிக் கொண்டிருந்தன. இந்த சமயத்தில் தான் 'ஆடிக்கழிவு' என்ற பெயரில் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த துணிகளை சிறிது லாபம் குறைத்து தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். அதற்கான விளம்பரங்களும் அதிகம் கொடுக்கப்பட்டது. வியாபாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
'ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்' என்று சொல்வார்களே, அதுபோல் ஜவுளிக் கடைகளில் விற்பனையும் அமோகமாக நடந்தது, தேங்கிக் கிடந்த துணிகளும் விற்பனையானது. இப்படித்தான் ஆடித்தள்ளுபடி ஜவுளி விற்பனைத் தொடங்கியது.
ஆடித் தள்ளுபடியில் நடக்கும் சில ஏமாற்று விஷயங்கள்:
ஆனால் இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சில கடைகளில் ஆடித்தள்ளுபடி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதும் நடைபெறுகிறது. வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது துணிகளில் சில சேதாரங்கள் இருப்பது மனதை வருத்தப்படச் செய்கிறது. சில சமயம் தரமற்ற துணிகள், நீண்ட நாட்கள் உழைக்காமல் இருப்பதும், சாயம் போவது போன்ற பல் இளிக்கும் வேலைகளைச் செய்வதும் மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது.
'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' போன்ற சலுகைகளில் இலவசமாகத் தரப்படும் பொருளின் விலையையும் சேர்த்துதான் முந்தைய பொருளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தள்ளுபடி அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன் அந்தப் பொருளின் அடிப்படை விலையை (MRP) செயற்கையாக அதிகரித்து, பின்னர் அதிலிருந்து தள்ளுபடி தருவது போல் கணக்குக் காண்பிப்பதும் நடைபெறுகிறது. சில கடைகளில் தள்ளுபடி விலையில் வாங்கும் ஆடைகளை மாற்றவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ அனுமதிப்பதில்லை.
சலுகைகள் தள்ளுபடிகள்:
கொடிகட்டிப் பறக்கும் இந்த ஆடித்தள்ளுபடி விற்பனையில் நிறைய சலுகைகள், தள்ளுபடிகள், இலவசப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. சில துணிக்கடைகள் ஒரு படி மேலே போய் 5% முதல் 50% வரை தள்ளுபடி வழங்குவதுடன், குறிப்பிட்ட பில் தொகைகளுக்கு இலவசக் காய்கறிகள் மற்றும் பழங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளையும் வழங்குகின்றன. சில பாத்திரக் கடைகள் புதுமணத் தம்பதிகளுக்கான கல்யாண சீர் வரிசைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடி விலைகளை அறிவித்துள்ளன.
சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிகம் விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்கள் கூட்டம் ஒவ்வொரு கடைகளிலும் நிரம்பி வழிகிறது. தேவை இருக்கோ இல்லையோ, அவசியமோ அவசியமில்லையோ மக்களும் வாங்கிப் போடுகின்றனர். அனைவரது கையிலும் எப்போதும் பணப்புழக்கம் இருக்கிறது. பணம் இல்லை என்றாலும் கவலை இல்லை. மாதத் தவணையில் வாங்கிவிட முடியும். அதற்கான வசதிகளையும் தான் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர் களுக்கு வழங்குகின்றனவே!
ஆன்லைன் தளங்களிலும் சலுகைகள் நிறைந்திருப்பதால் கடைகளின் கூட்ட நெரிசலில் சிக்காமல் வீட்டிலிருந்தே ஷாப்பிங் செய்து தள்ளுகிறார்கள். வணிக மந்தநிலையைத் தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த ஆடித்தள்ளுபடி விற்பனை இன்று அனைத்து வியாபாரத் தளங்களிலும் கொடிகட்டிப் பறக்கிறது.
ஆடி அனுபவம் - தாய் வீட்டு சீர்:
3 வருடங்களுக்கு முன்பு என் அண்ணன் வீட்டில் நடந்த விசேஷங்களுக்காக ஒரு துணிக்கடையில் ஆடி மாதத்தில் துணிகள் வாங்க, அதற்குப் பரிசாக ஒரு மாமரக் கன்றையும், ஜாதி மல்லிச் செடியையும் வழங்கி உள்ளனர். அதனை வீட்டில் வைத்து வளர்க்க அடுத்த வருடமே சுவரைப் பற்றிக் கொண்டு ஜாதிமல்லி நெடுநெடுவென்று வளர்ந்து பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டது.
இந்த வருடமோ அந்த மாமரம் காய்த்துத் தள்ளிவிட்டது. பெரிய பெரிய கிளி மூக்கு மாங்காய்களைத் (ஒட்டு ரகம் என்று என் அண்ணன் சொன்னார்) தந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. மறக்காமல் என் அண்ணன் எனக்கு பை நிறையக் காய்களைக் கொடுத்தனுப்ப என் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்? வித்தியாசமான தாய் வீட்டு சீரை என்னால் என்றும் மறக்க இயலாது.
இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், போலியான தள்ளுபடி விளம்பரங்களை எளிதில் அடையாளம் கண்டு, தரமான பொருட்களைச் சரியான விலையில் தேர்வு செய்து, உங்களின் கடின உழைப்புப் பணத்தை முழுமையாகச் சேமிக்கும் தெளிவான முடிவெடுக்கும் திறனைப் பெறுவீர்கள்.