ஆடி மாதம்: வழிபாடு முதல் கூழ் செய்வது வரை... தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!

ஆடி மாத வழிபாடுகளும் கூழ் செய்யும் முறையும் முழுத் தகவல்கள்
ஆடி வெள்ளி - ஆடிப் பெருக்கு - ஆடி கூழ்
ஆடி வெள்ளி - ஆடிப் பெருக்கு - ஆடி கூழ்AI Image
Updated on
MM strip
MM strip

ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி கூழ் திருவிழா போன்றவை இயற்கை, விவசாயம், பக்தி, சமூக ஒற்றுமையை இணைக்கும் பாரம்பரியமாக விளங்குகின்றன. இந்த மாதம் தொடங்கும் காரியங்கள் பெருகும் என்ற ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டின் சிறப்புகளும் பலன்களும்

வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். சிங்கத்தின் மீது பவனி வரும் அம்பிகையை வெள்ளிக்கிழமையன்று நாம் வழிபடும்போது வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற வழி பிறக்கும்.

ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடுAI Image

ஆடி மாத சிறப்பு:

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம்தான் ஆடி. ஆடி வெள்ளிக்கிழமையன்று மாலையில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் பலன்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கை துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும்.

பொருளை அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமியை திருமகள் என்கிறோம். எட்டு வகை லட்சுமிகளின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கையை நடத்த இயலும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் வருகிறது.

அம்மனுக்கு மாவிளக்கு:

ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாம். அம்மனை குளிர்விக்க தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து அம்மன் முன் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்க வேண்டும். இதனால் நோய் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.

ஆலயங்களில் வழிபாடு:

ஆடி வெள்ளிக்கிழமையன்று சில ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். சில கோயில்களில் நாக தேவதைக்கு பால் எடுத்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களையும் ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒரு சமயத்தில் அர்ச்சிக்கும் நவசக்தி அர்ச்சனை நடைபெறும்.

ஆடி வெள்ளிக்கிழமையன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீவித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீசக்கரமே தாடங்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் மகாலட்சுமியாகவும், உச்சிகால வேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சி தருவாள்.

புதுச்சேரியில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் தேவியின் வீதி உலாவும் நடைபெறும்.

ஆடி வெள்ளியன்று செய்ய வேண்டியவை:

ஆடி வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியை வரவேற்று வீட்டில் பூஜை செய்து உபசரித்தால் மகாலட்சுமி அருள் கடாட்சம் கிடைக்கும் என்பது உறுதி.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை செந்தாமரை மலரை கொண்டு பூஜிக்க வேண்டும். வீட்டு பூஜையறையில்  ஹ்ருதய கமலம் தாமரை பூ போன்ற மகாலட்சுமிக்கு பிடித்தமான கோலங்களைப் போட வேண்டும். கோலம் போடும்பொழுது மகாலட்சுமியே வரவேண்டும் என்று ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே போட வேண்டும்.

குத்து விளக்கை முந்தைய நாள் இரவே தேய்த்து குங்குமம் வைத்து ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து பூமாலை கொண்டு அலங்கரித்து பஞ்சு திரி போட்டு குளம் போல எண்ணெய் அல்லது நெய் விட்டு தீபச் சுடர் கிழக்கு முகமாக இருக்குமாறு விளக்கை ஏற்ற வேண்டும்.

மகாலட்சுமி படத்திற்கு பொட்டிட்டு பூக்கள் அலங்கரித்து உதிரி பூக்களால் மகாலட்சுமி அஷ்டோத்திரங்களைக் கூறி அர்ச்சனை செய்து அம்மனுக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். ஆடி வெள்ளிக்கிழமையன்று உங்கள் வீட்டிலும் வழிபாடு செய்து, அருகிலுள்ள அம்மன் ஆலயம் சென்று வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஆடி பெருக்கு விழா!

ட்சிணாயத்தின் முதல் மாதமாகிய ஆடி மாதத்தில் மிக சிறப்புக்குரிய நாட்களில் ஒன்று ஆடி 18வது நாளில் வரும் ஆடிப் பெருக்கு பண்டிகை. இதை, ‘பதினெட்டாம் பெருக்கு’ என்றும் சொல்வர். இந்த நாளில் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நீர் கரை புரண்டோடும்.  விவசாயிகள் மிக்க மகிழ்ச்சியுடன் வேளாண்மைப் பணிகளில் ஈடுபடுவர். தென்மேற்கு பருவத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். 

ஆடி பெருக்கு விழா
ஆடி பெருக்கு விழாAI Image

ஆடிப் பட்டத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்த விவசாயிகள் ஆற்றில் பொங்கி வரும் நீரால் பாசன வசதி பெறுவதால், தை மாதத்தில் நம்பிக்கையாக அறுவடை செய்ய இயலும்.

மக்களும் ஆற்றங்கரையில் அன்றைய தினம்  கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். நதிகளை பெண்களாக பாவித்து வழிபடும் வழக்கமுள்ள மக்கள் ஆடிப் பெருக்கன்று நீர் நிலைகளுக்குச் சென்று  காவிரித் தாயைப் போற்றி பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

காவிரித் தாய்க்கு தங்கள் நன்றியை தெரிவிகும் விதமாக வாழை இலைகளில் அல்லது தொன்னைகளில் அகல் விளக்கை ஏற்றி வைத்து காவிரி தாயைப் போற்றி வணங்கி பயபக்தியோடு ஆற்றில் விடுவார்கள்.

பெண்கள் காவிரி அம்மனை அன்று வழிபாடு செய்ததை குறிக்கும் வகையில், தங்கள் வலக்கையில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள். அன்று வீட்டிலிருந்து கலந்த சாத வகைகளான தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை கட்டி எடுத்துச் சென்று அதை காவிரி அம்மனுக்குப் படைத்து வழிபட்டு பிறகு அங்கேயே அமர்ந்து குடும்பத்தோடு உண்டுவிட்டே வீட்டுக்குத் திரும்புவார்கள். காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் புகழ் பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி அம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.  ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உத்ஸவர் நம்பெருமாள் புறப்பாடாகி அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கே சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். பெருமாள் கொடுக்கும் சீதனமாக காவிரி அம்மனுக்கு தாலிப்பொட்டு, பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்கள்:

பொதுவாக, ஆடி மாதத்தில் கல்யாணம், புது வீட்டு கிரஹபிரவேசம் போன்ற சுப காரியங்கள் எதுவும் செய்வது வழக்கமில்லை. ஆனால், ஆடிப் பெருக்கன்று புதிய தொழில் துவங்குவது, திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக பேச்சு வார்த்தை நடத்துவது போன்றவற்றை செய்யலாம். இந்த நாளில் எதைத் துவங்கினாலும் அது பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம்.

தாலிச்சரடு மாற்றல்:

முக்கியமாக, திருமணமான பெண்கள் தாலிச்சரடை மாற்றுவது ஆடிப்பெருக்கன்று செய்வார்கள். அன்று தாலிச்சரடு மாற்றினால் கணவனின் ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை. காவிரி அம்மனுக்கு பூஜை செய்து, தாலிச்சரடு மாற்றி, மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்துத் தருவார்கள்.

இந்த ஆண்டு பதினெட்டாம் பெருக்கு விழா (03.08.2026) திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது.  நாமும் அன்று காவிரியன்னையை மனதாரப் போற்றி வணங்கி துதித்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.

ஆடி கூழ் ஊற்றுவதன் கதை:

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதைகேட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி துக்கம் தாங்காமல், தன் உயிரை விட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்கிவிட, அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து, தீயை அணைத்தான். இருந்த போதிலும் சில தீக்காயங்களால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதால், வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்துள்ளார் ரேணுகாதேவி.

பசியைப் போக்க அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்க, அங்குள்ள கிராம மக்கள் அவளுக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக தந்துள்ளனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார்.

அவர் முன், சிவபெருமான் தோன்றி, "உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்" என வரம் அளித்தார்.

இதனால்தான் இதனை நினைவு கூறும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதத்தில் களைகட்டும் வண்டியூர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்!
ஆடி வெள்ளி - ஆடிப் பெருக்கு - ஆடி கூழ்

ஆடி கூழ் - அம்மனுக்கு வீட்டிலேயே சுவையான கூழ் செய்யவது எப்படி?

ஆன்மீக மாதமாக கருதப்படும் ஆடி மாதம் வங்துவிட்டாலே, விசேஷங்கள் களைகட்டும். இதில் முக்கியமானது என்றால் கூழ் தான். ஆடி மாதம் கூழ் வாங்குவதற்காகவே கோயில்களில் கூட்டம் முந்தியடிக்கும். அதுவும் குறிப்பாக ஆடி வெள்ளி - செவ்வாய்க்கிழமைகளில் தான் கூழ் ஊற்றுவார்கள். ஆடிக்கூழ் ஊற்றுதல் என்பது, எளியவர்களின் பசிப்பிணியை போக்கி, அவர்தம் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற வழிபாட்டின் தாத்பரியம்.

ஆடி கூழ்
ஆடி கூழ்AI Image

ஆடி மாத வழிபாடு வேப்பிலைக்கும், எலுமிச்சைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புண்ணிய மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது நம்பிக்கை.

இதை கோயில்களில் தான் சென்று வாங்க வேண்டுமா? வீடுகளிலேயே செய்யக்கூடாதா?

இதோ எளிமையான ரெசிபியை பார்க்கலாம்..

இதையும் படியுங்கள்:
ஆடியில் தம்பதிகளைப் பிரிப்பது ஏன்? - மூடநம்பிக்கையா? மருத்துவக் காரணமா?
ஆடி வெள்ளி - ஆடிப் பெருக்கு - ஆடி கூழ்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

பச்சை அரிசி - 1/4 கப்

தண்ணீர் - தேவைக்கேற்ப

தயிர் - 1 கப்

சிறிய வெங்காயம் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கேற்ப

ஆடி கூழ் / கஞ்சி செய்முறை:

ராகி மாவில் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, முழுமையாகக் கலந்து கட்டி இல்லாமல் கிளறி ஒதுக்கி வைக்கவும்.

பச்சை அரிசியை மிக்ஸியில் எடுத்துக் கொள்ளவும். ரவா போல் கரடுமுரடான கலவையாக அரைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில், 2.5 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசியைச் சேர்த்து, கஞ்சி போன்ற நிலைத்தன்மைக்கு வரும் வரை மென்மையாக சமைக்கவும்.

பிறகு கலந்து வைத்திருக்கும் ராகி மாவு கலவை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில், அது கெட்டியாகும் வரை மற்றும் பச்சை வாசனை போகும் வரை கலந்து சமைக்கவும். இது பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.

இதையும் படியுங்கள்:
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி - பக்தர்கள் போற்றும் புனிதத் தலம்!
ஆடி வெள்ளி - ஆடிப் பெருக்கு - ஆடி கூழ்

இந்த கட்டத்தில், அதை அணைத்து, பரந்த வாய் கொள்கலனில் பரப்பி, அதை முழுமையாக குளிர்விக்க விடவும். தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒதுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கரடுமுரடான விழுதாக அரைக்கவும். இப்போது ராகி கூழில், மோர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும். கட்டிகள் இல்லாமல் நன்றாக அடிக்கவும்; ஒரு மெல்லிய கூழ் நிலைத்தன்மைக்கு தண்ணீர் சேர்க்கவும். இது மிகவும் சரியாக இருக்க வேண்டும். வெங்காயம் மற்றும் மிளகாயுடன் ஆடி கூழ் பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com