
ராசாவே உன்னை…
எழுபத்தியொரு ஆண்டுகளே
(25-08-1952) (28-12-2023)
இவ்வுலகில் வாழ்ந்தாலும்…
நூற்றைம்பது படங்களுக்கு
மேல் நோகாமல் நடித்திருந்தாலும்…
எதிர்க்கட்சித் தலைவராய்
இனிதாய்க் கோலோச்சினாலும்…
நடிகர் சங்கத் தலைவராய்
நனி சிறந்து பணியாற்றினாலும்…
கல்லூரி நிறுவனராய்க்
காளையர்க்கு வழிகாட்டினாலும்…
எல்லாவற்றையும் தாண்டி…
இதயம் முழுவதும்
இரக்கமே மிகக்கொண்டு
மனிதநேயத்துடன் வாழ்ந்த
மகத்தான மனிதன்நீ!
உனைத்தேடி வந்தவர்கள்…
ஒவ்வொருவரும் தினந்தினமும்
திருப்தி மிகப்பெற்றே
திரும்பியதே வரலாறு!
பரோபகாரமே உன் பயணத்தின்
பெருமைமிகு தனிச்சிறப்பு!
கேப்டன் பிரபாகரானாய்….
சின்ன கவுண்டராய்…
பேராசிரியர் ரமணனாய்…
இதனைப் போலவே
இன்னும் பல பாத்திரங்களாய்…
எல்லார் இதய சிம்மாசனத்திலும்
எழிலாய் வீற்றிருப்பவன் நீ!
காற்றில் கலந்துள்ள
கவினான உன் பாடல்கள்…
உலகம் உள்ளளவும்
ஒவ்வொரு காதிலுமே…
ஊது குழலைப்போல்
உன் புகழை ஊதி நிற்கும்!
‘ராசாவே உன்னைக்
காணாத நெஞ்சு…
காற்றாடி போலாடிக்
கனவிலும் உனைத்தேடும்!’
இந்த நாளில் நீயும்
இருந்திருந்தால் உயிருடனே…
எழுபத்திமூன்றாம் பிறந்தநாளை
இதய சுத்தியுடனே…
கொண்டாடி மகிழ்ந்திருப்போம்!
கொடுப்பினைதான் எமக்கில்லை!
ஆனாலும் இந்த நாளை
ஆனந்தம் மிகக்கொண்டே
அகிலமே கொண்டாடும்!
அதற்கான முழுத்தகுதி
அத்தனையும் கொண்டவன் நீ!
பூதவுடல் நீத்தவனே!
புகழுடம்பை வாழ்த்துகிறோம்!