

பெங்களூரில் உள்ள அந்தப் பெரிய 'ஐ. டி' கம்பெனியின் மாலை 6 மணி வேலை முடிந்து, அங்கு வேலை பார்க்கும் ஊழிய நண்பர்கள் குழுவாக வந்து கொண்டிருந்தனர், .. இன்று நன்கு வளர்ந்துகொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்ப வாழ்க்கையின் ஆரம்பக்காலம் அது…. புதுமையான, நவீன வாழ்க்கை அனுபவங்களின் துவக்கம்.
கல்லூரி ‘கேம்பஸ்’ மூலமாக கிடைத்த வேலையின் 2 மாத பயிற்சிக்காலம் முடிந்து, அங்கேயே வேலையில் தொடர வந்த கம்பெனியின் உத்தரவின் பேரில், லதா சென்னை சென்று மீண்டும் பெங்களூர் வர ஆயத்தமாகி இருந்தாள். இந்த இரண்டு மாதத்தில் அவளுடன் நன்கு பழக ஆரம்பித்த சில நண்பர்களுடன் வெளியே வந்த லதா, அவளை விட மூன்று வருட சீனியரான வருண் என்பவனுக்காக காத்திருந்தாள்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே வருண் ,"லேட்டாகிடுச்சா லதா?" என்று கேட்க ," பரவாயில்லை," என்றவள் தன்னுடைய சென்னைப் பயணத்தைப்பற்றிக் கூறினாள் . பயிற்சிக்கு பெங்களூரு வந்த கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் நல்ல பழக்கமாகியிருந்தது. சிலரைப் பார்த்தவுடனேயே அவர்களிடம் மீண்டும் மீண்டும் பழக வேண்டும் என்பதுபோல் ஒரு உணர்வு தோன்றும். இருவருக்குமே அந்த ஈர்ப்பு இருந்ததுபோலும்.