

பெரியவர்கள் செய்யும் தவறு அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. திருமண வாழ்வில் மட்டுமல்ல, பொதுவாகவே புரிதலும், விட்டுக்கொடுத்தலும் இருக்கும் வாழ்வில் நிரந்தர தோல்வி என்பதே கிடையாது. ஆனால் அதற்கு நேர்மாறாக அமைந்ததுதான் மாலதி, தேவராஜனின் திருமண வாழ்க்கை. திருமணமான முதலே இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒவ்வாமை இருந்தது. அடக்கி ஆளும் குணவாளனான தேவராஜனுக்கு, பெண்ணுரிமை பேசும் மனைவி மாலதி அமைய, எதற்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தது. 'தான்' என்ற 'ஈகோ' இருவருக்கும் தலைத்தோங்கி இருக்க, என்றும் வாக்குவாதம், சர்ச்சை, போராட்டம்தான்... விட்டுக்கொடுத்தல் என்ற பண்பிற்கு நேர் எதிர் குணம்தானே இந்த 'ஈகோ'? மாலதி எப்போதும் தன் பிறந்த வீட்டின் பெருமை பேசுவதையும், அவள் அங்கு அடிக்கடி செல்வதையும் விரும்பவில்லை தேவராஜன்.