'அப்புறம்...?' - சாதாரண வார்த்தைக்குள் அடங்கியிருக்கும் தத்துவமும் சுவாரஸ்யமும்!

'அப்புறம்' என்ற வார்த்தையின் பின்னிருக்கும் தத்துவம் மற்றும் சுவாரஸ்யமான கதைகள்!
அப்புறம் | Man and woman are speaking
அப்புறம் | Man and woman are speakingImage credit: Gemini AI
Updated on
MM strip
MM strip

இந்த கட்டுரை ‘அப்புறம்’ என்ற சாதாரண வார்த்தை வாழ்க்கையின் பல கட்டங்களில் எவ்வளவு ஆழமான அர்த்தம் தருகிறது என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது. காதல், வேலை, கல்யாணம், குடும்பம், ஓய்வு போன்ற ஒவ்வொரு நிலையிலும் ‘அப்புறம்’ ஒரு புதிய முடிவு, மாற்றம், தேடல் என பல வடிவங்களில் தோன்றி மனிதனின் சிந்தனையையும் பயணத்தையும் மாற்றும் சக்தியாக காட்டப்படுகிறது.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் 'ஐ லவ் யூ' என்று சொல்லும் போது அந்த பெண் 'அப்புறம்' என்று கேட்டால் அவன் பதிலேதும் சொல்லாமல் திகைத்து நிற்பான்.

அப்புறம் என்று கேட்டால்... என்ன வரும். சில சமயம் கோபம் வரும். சில சமயம் சிரிப்பு வரும். அந்த கேள்வியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் விதத்தை பொருத்தது.

அப்புறம் என்பது திடீரென்று அணை கட்டுவது போன்றது. நீங்க நினைக்கிற அந்த அணைக்கும் இந்த அணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தற்காலிகமானது. இங்கு தேங்கி நிற்பது உரையாடல் மட்டுமே.

அழையாத விருந்தாளி யாராவது வீட்டுக்கு வந்தால்.. அவரிடம் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு 'அப்புறம்' என்றால் 'போதும் கிளம்புங்க' என்று தான் அர்த்தம். இது தினசரி நிகழ்வு.

கல்லூரி படிப்பை முடித்த ஒருவன் அப்புறம் என்று யோசிக்கும் போது அவன் கண் முன்பு நிறைய வந்து போகும். மாநில அரசுப் பணி, மத்திய அரசுப் பணி, வங்கி, காப்பீட்டுக் கழகம்... இதில் ஏதாவது ஒன்று... இல்லாவிட்டால் சுய வேலை, திரைத்துறை..

இதையும் படியுங்கள்:
அதிசயம்! அண்ணனுக்குப் பதில் மரங்களுக்கு ராக்கி கட்டும் பெண்கள்..! எங்கே தெரியுமா?
அப்புறம் | Man and woman are speaking

20 வயதில் வரும் 'அப்புறம்' அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். நல்ல வேலை கிடைத்த பிறகு வந்து சேரும் ஒரு பெரிய 'அப்புறம்' - அதுதான் கல்யாணம்.

சிந்தித்தால் அப்புறம் வாழ்க்கை என்ன ஆகும்.... அவ்வளவுதான். 'சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்...' என்றால் அப்பா அம்மா 'சொல்லுடா யாரையாவது லவ் பண்றீயா?' ன்னு கேட்பார்கள்... அப்புறம்...'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்'.

பொண்ணு பாக்க போகும் போது முதலில் பெண்ணை பாடச் சொல்வார்கள். (இதெல்லாம் முன்னொரு காலத்தில்... அப்படித்தான் சொல்ல வேண்டும். அனைவருமே இதை மறந்திருப்பார்கள்.

அப்புறம்... கேசரி பஜ்ஜி சாப்பிடுவார்கள். அதன் பிறகு வரும் 'அப்புறம்' முக்கியமானது.

பொண்ணுக்கு என்ன செய்வீங்க என்று ஆரம்பிப்பார்கள். எல்லாம் சுமூகமாக முடிந்தால் அடுத்த கட்டம் நிச்சயதார்த்தம் வரும். ஒரு வேளை வேற மாதிரி இருந்தால்... கடைசியாக ஒரு 'அப்புறம்' வரும்... அதற்கு அர்த்தம் 'நாங்க கிளம்புறோம்., லெட்டர் போடுறோம்... 90 கள் வரையில் இப்படித்தான்.

ஒரு தை அமாவாசை அன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் திருக்கடவூர் அபிராமி அன்னையை தரிசிக்க வருகிறான். அங்கு சந்நிதியில் தியான நிலையில் இருந்தார் சுப்ரமணியன் என்கிற அபிராமி பட்டர். அவரை சோதிக்க விரும்பிய மன்னர், இன்று என்ன திதி என்று கேட்க 'பெளர்ணமி' என்று சொல்லி விட்டார். தன்னிலைக்கு வந்த பட்டர், 'என்னை அப்படி சொல்ல வைத்தது அம்மன் தான்' என்றார் உடன் இருந்தவர்களிடம்.

அப்புறம் | People
அப்புறம் | PeopleImage credit: Chatgpt

தான் சொன்னதை நிருபிக்க அம்மனை நோக்கி பாட ஆரம்பித்தார். அப்புறம் நடந்தது தான் ..

"மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே

அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் பிணியே.."

என்ற புகழ்பெற்ற வரிகள் கொண்ட அபிராமி அந்தாதி உருவாக காரணமானது.

'மெளன கீதங்கள்' படம் வெளியாகும் முன்பே முன்னணி வார இதழ் ஒன்றில் தொடராக வந்து பலரைக் கவர்ந்தது. முக்கியமான இடத்தில்.. கிளைமாக்ஸ் தொடங்கும் இடத்தில் தொடரை நிறுத்தி மற்றவை வெள்ளித்திரையில் என்று முடித்தார். தொடர் படித்தவர்கள் அப்புறம் என்ன ஆச்சு... அப்புறம் என்ன ஆச்சு... தன் மனைவியின் மீது விழுந்த சந்தேகத்தை அவன் எப்படி எடுத்துக் கொண்டான்... என்ன முடிவெடுத்தான்.. என்ற கேள்விக்கு விடை தேடி தியேட்டர் நோக்கி படையெடுக்க அந்த படம் வெள்ளி விழா கண்டது.

இதையும் படியுங்கள்:
மன்னர் அக்பரையே தரையில் உட்கார வைத்த உலகின் மிகப்பெரிய சமையலறை! எங்கே தெரியுமா?
அப்புறம் | Man and woman are speaking

'அப்புறம்' என்பதும் ஒரு தேடல் போன்றது தான். ஓய்வுக்கு அப்புறம்... ஓய்வுதான் என்று யோசிக்காமல் அப்புறம்... அப்புறம் என்று அடுத்த கட்டம் நோக்கி பயணித்திருக்கிறார் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரி திருமதி சீமா அகர்வால். சென்னையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 6, 7 ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடம் தற்போது நடத்தி வருகிறார்.. சிறப்பு அனுமதி பெற்று.

'அப்புறம்' என்ற அந்த பார்வையில் பார்க்கும் போது அது நமக்குள் சுவாரஸ்யமான மாற்றத்தை கொண்டு வரும். வெறும் ஜோக் மட்டும் எழுதினால் 'ராப்பிச்சை', பூரிக்கட்டை, மன்னர், டாஸ்மாக், தலைவர் இதைத் தாண்டி செல்ல முடியாது. இங்கேயும் 'அப்புறம்' வந்தால் கவிதை, கார்ட்டூன், கதை, கட்டுரை என்று வெவ்வேறு தளங்களில் பயணம் செய்து புதிது புதிதாக சிந்தித்து எழுதலாம்.

அப்புறம்.... நீங்களும் அப்புறமா இதை பத்தி சிந்தித்து பாருங்க. அப்புறம் நீங்களும் வேற மாதிரி...

இன்றைய தமிழில் சொன்னால் 'வேற லெவல்' க்கு போயிடுவீங்க.

logo
Kalki Online
kalkionline.com