

சமத்துவம், சேவை, கருணை ஆகியவற்றின் உலகச் சின்னமாக விளங்கும் பொற்கோவிலின் ‘லங்கார்’ சமையலறையில், தன்னார்வலர்கள் மட்டுமே சமைத்து, பரிமாறி, பாத்திரம் கழுவும் பணிகளை செய்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான கிலோ கோதுமை, பருப்பு, காய்கறி, நெய் பயன்படுத்தி ரொட்டி, தால், சப்ஜி, கீர் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன; அனைவரும் தரையில் ஒரே வரிசையில் அமர்ந்து உண்ணுகின்றனர்.
ஒரு சமையலறைக்குப் பின்னே ஒரு சமூகப் புரட்சி மறைந்திருக்கிறது என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? நம்புங்கள்! சமத்துவம் மற்றும் சேவையின் மீது கட்டப்பட்ட ஒரு பாரம்பரியமான, உலகின் மிகப்பெரிய அந்த இலவசச் சமூக சமையலறையைப் பற்றி பார்ப்போம்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலில் (Golden Temple) நடக்கும் 'லங்கார்' உலகின் மிகப்பெரிய இலவசச் சமூக சமையலறை ஆகும்.
'லங்கார்' என்றால் என்ன?
அனைவரும் தரையில் வரிசையாக சமமாக அமர்ந்து யாரும் உயர்ந்தவர் அல்ல, யாரும் தாழ்ந்தவர் இல்லை என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உணவு உண்பதே லங்கார் ஆகும்.
உருவானப் பின்னணி என்ன?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. சீக்கிய மதத்தின் முதல் குருவான குரு நானக் தேவ் (Guru Nanak Dev) காலகட்டத்தில் மிகவும் பயங்கரமான சாதி அமைப்புகளின் சாதி வெறி, சாதி வேறுபாடுகள் தீண்டாமைகள் தலைதூக்கி வளர்ந்து பரவிவந்தது. இதை கண்டு ஒதுங்கிவிடாமல் சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக துணிந்து போராட களம் இறங்கினார் குருநானக் தேவ்.
மனித சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்தார். அப்போது அவர் மனதில் உருவானது லங்கார். மதம், இனம், சாதி பார்க்காமல் முற்றிலும் இலவசமாக சுத்தமான சைவம் உணவு வழங்குவதன் மூலம் மனித சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று நம்பினார்.
அது உலகின் மிகப்பெரிய இலவசச் சமூக சமையலறையாக மாறியது. பின்னர் மூன்றாம் சீக்கிய குருவான அமர்தாஸ், தன்னை சந்திக்க விரும்பும் யாவரும் முதலில் லங்காரில் அமர்ந்து மற்றவர்களுடன் சமமாக அமர்ந்து உணவு உண்ட பின்பு தான் சந்திக்க வேண்டும் என்கிற விதிமுறையாகவும் கொண்டு வந்தார்.
இங்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இங்கு சமைப்பது, பரிமாறுவது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற அனைத்துப் பணிகளையும் செய்வது தன்னார்வலர்களே! ஒரேப் பந்தியில் அனைவரும் சமமாக அமர்ந்து உண்ணும் முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முகலாயப் பேரரசர் அக்பர் கூட இங்கு வந்திருந்து சாதாரண மக்களோடு சமமாக தரையில் அமர்ந்து உணவு உண்டார் என்பது வரலாறாகும்.
பொதுவாக தினமும் ரொட்டி (சப்பாத்தி), பருப்பு (தால்), காய்கறி கூட்டு (சப்ஜி), அரிசி பாயாசம் (கீர்) ஆகியவை வழங்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 12,000 கிலோ கோதுமை மாவு, 13,000 கிலோ பருப்பு, 2000 கிலோ காய்கறிகள், 1000 கிலோ தூய்மையான நெய் சமையலுக்காக பயன்படுத்துகிறார்கள்.
பல்லாயிரக் கணக்கான ரொட்டிகளைத் தயாரிக்க நவீன தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். ஒரே நேரத்தில் டன் கணக்கில் சமைக்க கூடிய பிரமாண்டமான பாத்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன.
கடுமையான சாதி அமைப்புகளின் மூலம் மக்கள் பிளவுப்பட்டிருந்தார்கள். மக்கள் ஒன்றாக உணவு உண்பதைத் தடுத்து வந்தார்கள். இந்தப் பாகுபாட்டை எதிர்த்து போராட புயலாகப் புறப்பட்டு, யாரும் உயர்ந்தவர் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல என்பதை கற்றுக் கொடுத்து, 'லங்கார்' கருணை மற்றும் சமத்துவத்தின் உலகலாவிய சின்னமாக மாறியுள்ளது என்பதை நம்மால் நம்ப முடியாவிட்டாலும், உறுதியாக நம்புங்கள் என்று உணர்த்துகிறது வரலாறு என்பது மட்டும் மிகையல்ல, நிதர்சனம்!
மனிதநேயம் மற்றும் சமத்துவத்தின் உச்சத்தை உணர்ந்து, சாதி மத கடந்து சக மனிதர்களுடன் இணைந்து வாழும் சமூக உணர்வை உங்களது மனதுக்குள் ஆழமாக விதைத்துக்கொள்ளுங்கள்.