
மனித மனதின் ஆற்றலுக்கு ஒரு எல்லையே இல்லை. 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பது பழமொழி. ஆனால், ஒரு கால் இல்லாத போதும் மார்க்கம் உண்டு என்பதையும் அந்த மார்க்கமானது இமயமலையின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்திற்கும் இட்டுச் செல்லும் என்பதையும் நிரூபித்தார் ஒரு இருபத்தாறே வயதான இள மங்கை. அந்த வீராங்கனையின் பெயர் அருணிமா சின்ஹா (Arunima sinha).
உத்தர பிரதேசத்தில் லக்னோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்பேத் நகர் மாவட்டத்தில் 1988ம் ஆண்டு பிறந்தார் அருணிமா. அவரது தந்தை ராணுவத்தில் ஒரு எஞ்ஜினியர். தாயார் க்யான் பாலா அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு சூபர்வைஸர். தன் தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார் அவர். அவரையும் அவரது தமக்கை லக்ஷ்மியையும் தம்பி ராகுலையும் மாமனான ஓம் பிரகாஷ் வளர்க்க ஆரம்பித்தார்.
சிறுவயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வமுடன் இருந்தார் அருணிமா. சட்டம் படித்து அதில் தேர்ந்தார் அவர். அவரது பிறந்த தேதி தவறாக செண்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிடி ஃபோர்ஸின் அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததைத் திருத்த அவர் டெல்லி செல்ல வேண்டி இருந்தது.
அப்போது தான் விதி சதி செய்து அவரது வாழ்க்கையில் விளையாடியது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள். பத்மாவத் எக்ஸ்பிரஸில் அவர் லக்னோவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவில் கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கி அவரது தங்க சங்கிலியைப் பிடுங்க முயன்றனர். அந்த சங்கிலி அவருக்கு அவர் தாயார் அளித்தது. அவர்களை அவர் கடுமையாக எதிர்த்தார்.
அவரது விளையாட்டுத் துறை பயிற்சி அவர்களைத் தடுக்க உதவி செய்தது. ரயிலில் இருந்த யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அந்தக் கொள்ளையர்கள் அவரை ரயிலிலிருந்து தூக்கி வெளியே போட்டனர். எதிரிலிருந்த தண்டவாளத்தில் அவர் விழவே அப்போது அதில் வந்த ரயில் அவரது காலின் மீது ஏறியது. அவர் ஒரு காலை இழந்தார். 49 ரயில் வண்டிகள் தாண்டிச் செல்லும் வரையில் அவர் அதே இடத்தில் கிடந்தார்.
அடுத்த நாள் காலையில் தான் அங்கு வந்த சில கிராமத்தார்கள் அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையின் நிலையோ மகா மோசம்.
அவரது துண்டிக்கப்பட்ட காலை மறுநாள் காலையில் அங்கு வந்த தெருநாய் ஒன்று சுவைக்க ஆரம்பித்தது, இது எல்லா செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் பெரும் பரபரப்புடன் பேசப்பட்ட பேசு பொருளானது.
உடனடியாக அவரை ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஸயின்ஸஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஒரு காலை இழந்த அவரை இப்போது சமூகம் பரிதாபத்துடன் பார்க்க ஆரம்பித்தது. இந்த சோகத்திலிருந்து மீண்டு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஊக்கம் அவர் மனதில் பிறந்தது.
எவரெஸ்டைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தார் அவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 15 பாதைகள் உள்ளன. அதில் சிகரத்தை ஏறி வெல்லத் துடிக்கும் சாதனையாளர்களால் 14 பாதைகள் முயன்று பார்க்கப்பட்டவை. 15வது பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். செயற்கைக் கால் ஒன்றை அவர் பொருத்திக் கொண்டார்.
டாக்டர்களிடம் தனது எவரெஸ்ட் சிகரம் மீது ஏறும் எண்ணத்தைச் சொன்ன போது அவர்கள் சிரித்தனர். சிலரோ அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினர். முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய பெண்மணியான பசேந்திர பாய் என்பவர் ஜாம்ஷெட்பூரில் இருந்தார் அவரைச் சென்று சந்தித்தார் அருணிமா. அவர் ஒருவர் தான் அனுதாபத்துடன் இவர் கூறியதைக் கேட்டு ஊக்கமும் அளித்தார். அங்கேயே தங்கி பயிற்சி பெற ஆரம்பித்தார் அவர்.
18 மாதங்கள் கடுமையான பயிற்சியைப் பெற்றார் அவர். 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி தனது சாதனையை ஆரம்பித்த அவர் 52 நாட்களுக்குப் பிறகு மே 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி நின்றார். அவர் சாதனையை அறிந்து உலகம் பிரமித்தது. 2015இல் இந்திய அரசு அவரைப் பாராட்டி 'பத்ம ஶ்ரீ விருது' அளித்து கௌரவித்தது.
உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல, மனதில் தைரியம் இருந்தால் மலையையும் வெல்லலாம் என்ற வழக்கு மொழியை வாழ்ந்து காட்டி மங்கையருக்கெல்லாம் ஒரு ஆதர்ச பெண்மணியாக அவர் திகழலானார்.
இந்த வெற்றிக்குப் பின்னர் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்பராஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கொள்கியஸ்கோ மலை ஆகியவற்றின் மீதும் ஏறி அவர் சாதனை படைத்தார்.
உங்களை ஊக்குவித்தது எது என்று அவரைக் கேட்ட போது அவர் பதிலாகக் கூறியது இது தான்:
“ஸ்வாமி விவேகானந்தரே எனக்கு உத்வேகம் ஊட்டியவர். அவரது எழுமின் விழிமின், குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின் என்ற வார்த்தைகளே இந்த சாதனையைப் படைக்க வைத்தது” என்றார் அவர்.
சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டில் பயிற்சி அளிக்க ஒரு அகாடமியை இவர் நிறுவி அவர்களுக்கு இப்போது பயிற்சி அளித்து வருகிறார். அவர் தனது வாழ்க்கையை “Born Again on the Mountain: A Story of Losing Everything and Finding it Back” என்ற நூலில் விளக்கமாகத் தந்துள்ளார். உங்கள் குறிக்கோளை அடைய தளராது உழைத்து வெற்றி பெறுங்கள் என்பதே அவர் உலகத்தினருக்குத் தரும் அனுபவ மொழி!