
ஆடி பிறந்துவிட்டது பண்டிகைகளின் அணிவகுப்பு தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதமோ தெய்வீக மாதம். கோவில்களில், பால்குடம் எடுப்பது ஆடிவெள்ளி, ஆடிசெவ்வாய், ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு இப்படி பட்டியல் நீளுமே! அதோடு கொஞ்சம் நெருடலாய் ஆடித்தள்ளுபடி மோகம் அனைத்து வகை குணநலன்கள் அமைந்துள்ள இல்லத்தரசிகளை பாடாய்ப்படுத்திவிடுமே!
ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பதுபோல, அனைவர் மனதையும் தள்ளுபடி மோகம் பரிபூரணமாய் ஆட்கொண்டிருப்பதே பேசு பொருளாகும்.
திருப்பூா், மதுரை, போன்ற பல பகுதிகளில் இருந்து ஜவுளி மூட்டை வியாபாாிகள் அணிவகுப்பு வருடாவருடம் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வியாபாாிகள் இருசக்கர வாகனங்களில் புடவைகளை எடுத்து வந்து கிராமத்திலோ, டவுனிலோ வீடு கல்யாணமண மண்டபங்களில், தங்கி வீதி வீதியாய் பெண்களிடம் வந்து புடவையை விற்பனை செய்வதே தொடர்கதை.
இதில் ஒரு வீட்டில் அமர்ந்துகொண்டு அக்கம் பக்கத்திலுள்ள வீட்டில் வசிப்பவர்களுடன், கூட்டமாக கூடி தேவை இருக்கிறதோ இல்லையோ, புடவைகளை வாங்கிக்குமித்து விடுகிறாா்கள்.
புடவைக்கான தொகையை தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன்பாக கொடுத்து விடவேண்டும் இல்லாவிடில் புடவையை திருப்பிக் கொடுத்து விடவேண்டும்.
இதன் அடிப்படையில் புடவைகளை வாங்குவதில் கணவனுக்கு தொிந்து பாதி, தொியாமல் மீதி, என தொகை கொடுப்பதும் வாடிக்கையான நிகழ்வு.
அடுத்ததாக ஜவுளிக்கடைகளில் ஆடித்தள்ளுபடி சமாசாரம். தீபாவளிக்கு உதாரணமாக அறுநூறு ருபாய்க்கு விற்ற புடவை தள்ளுபடியில் முன்னூறு. அதில் அனைவரும் தேவையான சேலைகளை வாங்குவதும் மெகாதொடரே. இந்தப் பதிவானது வர்த்தகத்திற்கு எதிரான பதிவல்ல. இல்லத்தரசிகளின் தள்ளுபடி மோகத்திற்கான விழிப்புணர்வான பதிவு. எப்படி பாதிக்குப் பாதி விலையில் கொடுக்க முடிகிறது என நாம் சிந்திக்க வேண்டும்.
மகளிா் குழுவில், தவணைக்காரர்களிடம், தினம், வாரம், மாதவட்டி இப்படி பல்வேறு ரூபங்களில் கடன். திருமதிகள் திருந்தாமதிகள் ஆவது ஏன்?
ஒரு பெண் நினைத்தால் தனது சிக்கனத்தால் கட்டுக்கோப்போடு குடும்பத்தை வழி நடத்த முடியும். அதே பெண் நினைத்தால் குடும்பத்தை அதளபாதாளத்திற்கும் கொண்டு செல்ல முடியும்.
அடுத்த மூன்று மாதங்களில் தீபாவளி கலெக்ஷன், புதுப்புது ரகங்களாய் கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்ளுமே!
அதில் பல ரகங்களை வாங்காமல் காலம் ஓடுமா? ஆக எந்த நோக்கத்திற்காகவும் இந்த பதிவு மேற்கொள்ளப் படவில்லை. விரலுக்கேற்ற வீக்கம் இருந்தால் நல்லது.
அடுத்தவர் பெருமைக்காக நம்மை நாமே சிரமப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா?
அதேபோல முப்பதாயிரத்திற்கு விற்கப்பட்ட டிவி ஆடித் தள்ளுபடியில் பதினெட்டாயிரமாம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது? திருமதிகளே புடவை மற்ற துணி வகைகள் வாங்குங்கள், வேண்டாம் என சொல்லவில்லை, எதிலும் ஒரு அளவு கோல் நிதானம் சிக்கனம் கடைபிடியுங்கள்.
கடன் வாங்கும்போது யாருக்கும் தொியாது. அதை திருப்பி சரிவர அடைக்காத நிலை வந்தால், விஷயம் வீதிக்கு வருமே யாருக்கு கேவலம்!
எனவே சோ்த்த பணத்தை சிக்கனமாய் செலவு செய்ய பக்குவமாய் மனதை ஒரு நிலைப்படுத்துங்கள். சந்தோஷம், சந்தேகம், இல்லா வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளுங்கள்.
அதுவே நல்ல சிக்கனமான திருமதிகளுக்கு அழகு!