பல நோய்களை குணமாக்கும் மூலிகைகளில், அம்மான் பச்சரிசியும் ஒன்றாகும். இதற்கு சித்திரவல்லி, சித்திப்பாலாலி, சித்திரப்பாலாவி, சிவப்பு அம்மான் பச்சரிசி, பச்சரிசிக்கீரை, எம்பெருமான் பச்சரிசி என்ற பெயர்களும் உண்டு.
அம்மான் பச்சரிசி என்ற பெயரை வைத்து இது ஒருவகையான அரிசிபோல் இருக்கும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது அரிசி அல்ல, ஒருவகை மூலிகைச் செடி. இந்தச் செடியின் விதைகள், நெல்போல காட்சியளிப்பதால் இப்படியொரு பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
‘ஆஸ்திரேலியன் ஆஸ்துமா வீட்’ என்றும் அழைக்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் யூபோர்பியா ஹிர்ட்டா ஆகும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாதாரணமாக இந்த மூலிகையை காண முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்த மூலிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த மூலிகையின் மருத்துவ குணங்கள் தெரிந்தவர்கள் இதனை கீரையாக சமைத்து உண்பது வழக்கம். இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் வாய்ப் புண்கள் காணாமல் போகும்.
இதன் மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவ நூல்கள் பல்வேறு தகவல்களை கூறி உள்ளன. அதாவது, உடலில் வறட்சியை போக்குவதில் சிறந்தது. வெப்பத்தை தணிக்கும். வெப்பத்தினால் உண்டாகும் தலைவலியைப் போக்கும். இதன் இலையை மை போல் அரைத்து கைகால், மூட்டு வலிக்கு பூசி வந்தால் நாளடைவில் வலி குறையும்.
சிவப்பு நிற இலைகளை கொண்ட அம்மான் பச்சரிசியை எடுத்து கொண்டு மிதமான வெயிலில் உலர்த்தி எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின் இதனை பொடி செய்து தினமும் 5 கிராம் அளவிற்கு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி பெருகும் என்கிறது சித்த மருத்துவம். அம்மான் பச்சரிசியை அரைத்துத் தயிரில் கலந்து சாப்பிட, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நோய் கட்டுப்படும்.
பாதங்களில் உண்டாகும் கால் ஆணிக்கும், உதட்டில் தோன்றும் வெடிப்புகளுக்கும், நாவில் உண்டாகும் சிறு புண்களுக்கும் அம்மான் பச்சரிசிப் பாலை தடவலாம்.
இதன் பூக்களைச் சுத்தம் செய்து பால் சேர்த்து அரைத்து, காய்ச்சி பாலில் கலக்கி காலை, மாலை என குடித்துவர தாய்ப்பால் பெருகும்.
பருக்கள் நீங்க இந்த மூலிகையின் பாலை பருக்களின் மீது தொடர்ந்து தடவி வந்தால் படிப்படியாக பருக்கள் மறைவதை காணலாம். அதுமட்டுமில்லாமல் மரு, காயங்கள் என சருமப் பிரச்னைகளுக்கு அம்மான் பச்சரிசியை அதிக அளவில் பயன்படுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
இதன் இலையும் விதைகளும் குடற்புழுக்களை வெளியேற்ற உதவும். இந்த மூலிகையின் இலைச்சாறை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தை சுத்தம் செய்யும்.
இந்தக் கீரையில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் இருப்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
இந்த மூலிகையில் புரதம், கொழுப்பு, மாவுப்பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. செலவே இல்லாமல் உடலுக்கு வலிமை தரும் இந்த மூலிகை இலவசமாக எங்கும் முளைத்து கிடப்பதுதான் இயற்கை மனிதர்களுக்கு தந்துள்ள பரிசுகளில் ஒன்று.