
அமெரிக்காவில் மிக பிரபலமான நகரங்களில் ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது. லாஸ் ஏஞ்சல் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. தொடர்ந்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் அங்கு காற்று வீசி வருவதால் காட்டுத்தீ பரவல் அதிகரித்து உள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக அங்குள்ள பாலிசேட்ஸ், பீவர்லி ஹில்ஸ் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சொகுசு வீடுகள், பள்ளி-கல்லூரிகள், முதியோர் மையங்கள் ஆகியவை தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீ பரவல் காரணமாக அவசரநிலையை அறிவித்து அந்த மாகாணத்தின் கவர்னர் கவீன் நியூசோம் உத்தரவிட்டுள்ளார். காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில் ) இருந்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் 1400 பேர் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். தீயில் 1,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்துள்ளன. உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தங்களுடைய உடைமைகளையும், செல்லப்பிராணிகளையும் கைகளில் தூக்கி கொண்டு பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறுகிறார்கள். வானம் முழுவதும் கரும்புகை மூட்டமாக மூடியுள்ளது, அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பசிபிக் பாலிசேட்ஸில் பரவிய தீ 1,000 வீடுகள், சுமார் 16,000 ஏக்கர் நிலத்தை எரித்து சாம்பலாக்கியது. நகரின் வடக்கே அல்டோனாவைச் சுற்றி 10,600 ஏக்கர் பரப்பளவில் இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறையினர் கூறும் போது, "காட்டுத்தீயை எதிர்த்துப் போராட எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், இத்தகைய காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீயணைப்பு வீரர்கள் அனைத்து துறைகளிலும் இல்லை," என்று தெரிவித்தார்.
இந்த காட்டுத்தீக்கு எலோன் மஸ்க்கின், வீடு, கார்கள், மற்றும் மரங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இந்த வீடியோவை எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
தி பிரின்சஸ் பிரைட் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற கேரி எல்விஸ், வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அவருடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், பாலிசேட்ஸ் கடற்கரை பகுதியில் அமைந்த அவருடைய வீடு தீயில் எரிந்து போனது என வேதனையை பகிர்ந்துள்ளார்.
ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், பெர்கீ, அன்னா பாரிஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் மற்றும் ஜான் குட்மேன் உள்ளிட்டோரும் அவர்களுடைய வீடுகளை இழந்த வருத்தம் நிறைந்த செய்தியை தெரிவித்து உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லெய்டனின் ரூ.55.85 கோடி மதிப்பிலான வீடும் எரிந்து சேதமடைந்தது. அதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. இதேபோன்று, பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்ளிட்டோரும் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் குறையாததால் இன்று (வியாழன் கிழமை) வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.