விழிப்புணர்வு கட்டுரை: வலை விரிக்கும் வலை!

Lifestyle articles
Artist: Sekar
Published on

-ஆர். பாண்டுரங்கன், அகமதாபாத்

'ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமில்லை எனக் கூறுவதுண்டு. நில மோசடி, சிட் ஃபண்டு மோசடி என நிறையப் படிக்கிறோம். தொலைக்காட்சியில் பார்க்கிறோம். ஆனாலும் புதுப்புது மோசடிகள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.

செல்ஃபோன், இன்டர்நெட் அதிகமாக உபயோகிப்பதால், இவற்றின் மூலமும் மோசடி நடக்கிறது. வெளி நாடுகளிலிருந்து குறிப்பாக, நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியர்களிடம் பணம் பறிக்க ஏராளமாகப் பெருகி வருகின்றனர். பேராசை யாரை விட்டது? நாமும் இதில் தெரிந்தோ, தெரியாமலோ விழுந்துவிடுகிறோம்.

'நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி, உங்கள் செல்ஃபோன் நம்பருக்கு ஐம்பதாயிரம் டாலர் லாட்டரி பரிசு விழுந்துள்ளது... இந்த ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்' என ஒரு எஸ்.எம்.எஸ். உங்களுக்குத் தரப்படும். நீங்கள் தொடர்பு கொண்டவுடன் ‘நீங்கள் வென்ற பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்ப உங்களது விவரம் தேவை. உடனே அனுப்பவும் என வங்கி விவரம் கேட்பார்கள்.

சில வாரங்கள் கழிந்தபின், உங்களுக்குப் பணம் அனுப்ப சில விதிமுறைகள் உள்ளன. அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை (இது பத்து முதல் பதினைந்தாயிரம் கூட இருக்கும்). அவர்கள் குறிப்பிட்ட ஓர் (இந்தியாவில் உள்ள) வங்கியில் செலுத்துமாறு கூறுவார்கள். பிறகு சில வாரம் கழிந்தபின் டாலரை ரூபாயாகச் செலுத்த, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் வாங்க மேலும் சில ஆயிரம் ரூபாயை அதே வங்கியில் செலுத்துமாறு 'மெஸேஜ்" வரும். இடையே வெளிநாட்டிலிருந்து ஒருவர், நீங்கள் கொடுத்த தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களை வாழ்த்துவார்... இப்படியே நீங்கள் அனுப்பிய பணம், 'யானை வாயில் போன கரும்பு'தான் என நீங்கள் அறிய, சில மாதங்கள் ஆகும். அவ்வப்போது உங்களை தொடர்புகொண்டே இருப்பதால் அவர்கள் மீது சந்தேகம் எழவே எழாது...

இதையும் படியுங்கள்:
சிறுகதை; இன்னொரு பார்வை!
Lifestyle articles

திடீரென ஒரு நாள் உங்கள் ஈ-மெயிலில் கீழ்க்கண்டவாறு ஒரு செய்தி வரும்...

'வணக்கம். நான் நைஜீரியாவில் உள்ள ஒரு வக்கீல்... என் க்ளையண்ட் கே.கே.ஷா என்பவர் தன் வீடு, சொத்து, வீட்டுமனை உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு திடீரென இறந்துவிட்டார். மொத்த சொத்தின் தொகை, சுமார் 30 - 35 லட்சம். ஒரு வருடம் ஆகியும் அவரது உறவினர்கள் யாரும் அதைத் திரும்பப் பெற என்னிடம் விண்ணப்பிக்கவில்லை...

அவரது உறவினர் எனக் கூறி நீங்கள் என்னுடன் ஒத்துழைத்தால், அந்தச் சொத்தின் ஒரு பகுதி உங்களை வந்தடைய நான் வழி செய்ய முடியும். நீங்கள் விரும்பினால் இந்த ஈ-மெயிலில் என்னைத் தொடர்புகொள்ளவும்' என செய்தி வரும். நீங்கள் தொடர்பு கொண்டவுடன், மேற்கூறியபடி உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கப்படும். பிறகு உங்கள் விவரம் சரியாக உள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு (இந்தியாவில் உள்ள) வங்கிக் கணக்கில் சேர்க்கவும் சொல்வார்கள்.

சில வாரங்கள் கழித்து வீடு, மனை இவற்றைப் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (பல ஆயிரம் ரூபாய்) மறுபடியும் வங்கிக் கணக்கில் சேர்க்கும்படி கூறுவார்கள். பல லட்சம் ரூபாய் உங்களுக்குக் கிடைக்க உள்ளதால், சில ஆயிரம் ரூபாய் செலுத்த நீங்கள் தயங்க மாட்டீர்கள்.

சில மாதங்கள் கழித்து விவரம் கேட்க நீங்கள், ஈ -மெயில் அனுப்பினாலோ, டெலிஃபோனில் தொடர்பு கொண்டாலோ அந்த இரண்டுமே இருக்காது... அப்போதுதான் நீங்கள் முட்டாளாக்கப்பட்டதை அறிவீர்கள்...

இதையும் படியுங்கள்:
காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது?
Lifestyle articles

இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள் வலையில், சாதாரணமாக நன்றாகக் கல்வி அறிவு பெற்றவர்கள்தான் விழுகிறார்கள். உதாரணமாக அகமதாபாத்தில் ஒரு ட்ரஸ்டியாக, கன்ஸ்யூமர் எஜுகேஷன் ரிசர்ச் சென்டரில் இருந்தவர் மனுபாய் ஷா, சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற வலையில் விழுந்து தன் பல இலட்ச ரூபாய்களை இழந்ததோடல்லாமல், அந்த நிறுவனத்தின் பணத்திலும் கை வைத்ததால் வேலையிருந்தே நீக்கப்பட்டார்.

மும்பையில் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி, இதுபோன்ற பொய் செய்திகளை நம்பி, ஐந்து லட்சம் ரூபாய் வரை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று, உங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கான 'விசா'வுக்காக வங்கியில் பணி செலுத்தும்படியும் செல்ஃபோனிலும் ஈ-மெயிலிலும் உங்களுக்குத் தகவல் வரலாம். என் நண்பன் ஒருவனுக்கு, இந்தியாவில் விற்கும் தங்கத்தின் விலையில் பாதி விலையில் தங்கம் தருவதாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் செலுத்தும்படியும் செய்தி வந்தது. மொபைல் ஃபோனிலும், இன்டர்நெட் மூலமாகவும் வரும் இதுபோன்ற செய்திகளை நம்பி ஏமாறுபவர்கள் ஏராளம்.

உறவினர்களே மூதாதையரின் சொத்தில் நமக்குச் சேரவேண்டிய ஒரு பங்கைத் தர மறுக்கும் காலம் இது. முன்பின் தெரியாத யாரோ நமக்கு பணம் தருவதாகக் கூறினால், அதுபோன்ற செய்திகளை நம்பி ஏமாறுவதை இனியாவது தவிர்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு மக்களிடையே வர, இதுபோன்ற செய்திகளை உடனே மொபைல் ஃபோனிலிருந்தும், இன்டர்நெட்டிலிருந்தும் அழிக்கும் மனப்பாங்கு வரவேண்டும்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் மார்ச் 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்தி லிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com