
-கோதை நாராயணன்
"ஏலே! துரை... அங்கிட்டு என்னத்தல வேடிக்கை... நடுவையைப் பாரு... நாலு பொம்பளைக கூடியிறக்கூடாதே. உடனே அங்கேயே நோங்குதுல உன் புத்தி..." கணீரென்றது செங்கமலத்தின் குரல்.
"அடேயப்பா! கிழவிக்கு கழுகுப் பார்வை, எங்கிட்டு இருந்தாலும் கொத்திப் புடுது" முணுமுணுத்தபடியே துரை, நாத்துகளில் ஒன்றினான்.
செங்கமலம், அந்த ஊர் கிராம நிர்வாக அதிகாரி, சுந்தரத்தின் உடன்பிறப்பு. திருமணமாகி புக்ககத்தாரிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் மீண்டும் தம்பி சுந்தரத்துடனே வந்திருந்துகொண்டாள். பலமுறை செங்கமலத்தின் கணவனும் அவன் சுற்றமும் பேச்சுவார்த்தைக்காக வந்தபோதும் தீராதப் பிரச்னையாக, செங்கமலத்தின் திருமண வாழ்க்கை பாதியிலேயே நின்றது.
சிறு வயதிலேயே சுந்தரமும் செங்கமலமும் பெற்றோரை இழந்தவர்களாதலால் ஒருவருக்கொருவர் பாசத்தில் சளைத்தவர்களில்லை. சொத்துக்களும் ஏராளம். அதனை நிர்வகிப்பதில் செங்கமலத்துக்கு ஈடுஇணை கிடையாது. சுந்தரத்தின் மனைவி வள்ளியம்மை பூமா தேவிக்கு ஒப்பானவள். அவளுக்கு கணவனே கண்கண்ட தெய்வம். இவர்களது மகள் செண்பகா தேவிக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன.
தூரத்தில் சுந்தரத்தின் வேலையாள் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான். "பெரியம்மாவ்...! ஐயா, உடனே உங்கள வூட்டுக்கு வரச் சொல்லிச்சு...!"
''ஏம்ல?"
"தெரியாதுங்கோ... சின்னமா வந்திருக்காக அதானோ... என்னமோ...''
"அத சொல்லு முத, ஏ! துரை நான் அங்கிட்டுப் போகவும் இங்க வேலை சுணங்குச்சு... அப்புறம் நாளை என் வாயில விழாத ஆமா!" சொல்லியபடியே வீட்டுக்கு விரைந்தாள்.
இவளைக் கண்டதும் செண்பா, '"யத்தே!...'' என்று ஓடோடி வந்தாள்.
"செண்பா . என் கண்ணூ! எப்புடி புள்ள இருக்க? இளைச்சுருக்கியே.. மாப்பிள்ளை வந்திருக்காகளா?”
"போ... அத்த... இனிமே நான் அந்த வூட்டுக்குப் போவுறதா இல்ல, இம்புட்டு நாளும் நான் பட்டபாடு போதும்..."
அதிர்ந்தவளாய், "என்ன புள்ள சொல்லுத, ஐயா, சுந்தரம்!. என்ன இது கதையாயிருக்கு?"
"செண்பா வீட்டுல, நாம கலியாணத்துக்கு செய்றதா சொன்ன சீரை, அறுப்புக்கு அப்புறம் தர்றோம்னு சொன்னோம்ல" என.. வள்ளியம்மை முடிப்பதற்குள், "ஆமா! நாம கொடுத்த வாக்குப்படி செய்யத்தான் சுந்தரம் புதன்கிழமை நாள் பார்த்திருக்கு அதிலென்ன பிரச்னை?"
"யத்த...! அவுகளுக்கெல்லாம் பணம்தான் பெரிசா தெரியுது. நமக்கு இருக்குற வெதப் பாட்டுக்கு இது பெரிசில்ல. ஆனாலும் என்னோட அன்பு அவுகளுக்கு முக்கியமில்லையா? பணம் காசுதான் பெரிசா? அப்புறம் நாள் முழுக்க என்னைய வேலை வாங்குறாக எப்பப் பார்த்தாலும் அடுப்படியிலதான் நான் குடியிருக்கேன். அதுலயும் நான் பார்க்குற வேலையில குத்தம் கண்டுபிடிக்கறதுதான் என் நாத்திக்குப் பொழப்பே! அவருகிட்ட இதெல்லாம் சொன்னா, கண்டுக்கவே மாட்டேங்கிறாரு. நான் வளர்ந்த வளர்ப்புக்கு எனக்கென்ன தலையெழுத்தா? இனிமேலும் அங்க அடிமையாய் வாழ முடியாது யத்த" கூறியபடியே விசும்பினாள்.
''சரி! சரி அழுவாம உள்ளப் போயி உறங்கு, காலையில பேசிக்கலாம்" என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
பொழுது புலர்ந்தது. மண்வாசனையும், மாடுகளின் சத்தமும், செண்பாவைத் தட்டியெழுப்பியது. கிணற்றுப் பக்கம் நடந்தாள்.
செண்பாவின் அரவம் தெரிந்ததும் திரும்பிப் பார்த்தாள் புல்லுக்கட்டு குருவம்மா.
''சின்னம்மா... நல்லாயிருக்கீகளா? ஐயா நல்லா யிருக்காகளா?"
''ம்... எல்லாம் நலம்தான். என்ன இம்புட்டு காத்தால பம்பு செட்டு பக்கம்?"
''இன்னிக்கு எம் பேரப் புள்ளைய எடுத்துக்கிட்டு மாரி வர்றா.."
"யாரு...? மாரியக்காவா... ! அவ எப்ப புருஷன் வூட்டுக்குப் போனா? உன் கூடதான ரொம்ப காலமா இருந்தா...?"
"ஆமா தாயி, ரொம்பக் காலமா புருஷங்கிட்ட கோவிச்சுக்கிட்டு எங்கூடத்தான் இருந்துச்சு. நான் கும்புடுற அந்த மாரியாத்தா, செங்கமலத்தம்மா உருவத்துல வந்து, எம் பொண்ண வாழ வச்சிடுச்சு..."
''என்ன... சொல்றே...?"
''ஒரு நா மாரி வூட்டுக்காரரு அவளக் கூட்டிப் போக வந்தாரு, வந்த இடத்துல ரெண்டு பேருக்கும் பெரிய வாய் தகராறு, அப்போ பெரியம்மா, வயக்காட்டுக்குப் போக, அந்தப் பக்கமா வந்தாக; அவுகளைப் பாத்ததும் இதுக இரண்டும் பேச்ச நிறுத்தி அமைதியானாக, நான் பிரச்னையைச் சொன்னேன்."
"அவுக ரெண்டு பேரையும் நிக்க வச்சு பெரியம்மா, விளாசிப்புட்டாக விளாசி. எம் மருமவனை பாத்து, 'குருவம்மாவோட ஒரே புள்ள மாரி, செல்லமா வளர்ந்துருக்கா; அவளுக்கும் இடம் விட்டு மாறும்போது திகையத்தான் செய்யும். அத அன்பால பக்குவமா மாத்த தெரியாத நீயெல்லாம் என்னடா ஆம்பிளை?'ன்னு கேட்டாக பாருங்க கேள்வி... மனுஷன் பதில் பேச முடியாம்... தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டாரு
"மாரி, அதான் சாக்குன்னு பெரியம்மாகிட்ட அவுக வீட்டுல, தன்ன வேலைக்காரியவிட மோசமா நடத்துறதாவும் அடிமை வாழ்வு வாழவா எங்கம்மா என்னைய நாலு எழுத்துப் படிக்க வச்சா?ன்னு கேட்டா,
"உடனே பெரியம்மா, 'விட்டுக் கொடுத்து போறதை அடிமைத்தனம்னு எந்த அகராதியில நீ படிச்ச'ன்னதும் வாயடைச்சுப் போயிட்டா. 'நீங்க ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்கலைன்னா வீண் விவாதமும், வெறுப்பும்தான் மிஞ்சும். இன்னிக்கு மலையா தெரியுற உங்க பிரச்னை, நாளைக்குக் கடுகா தெரியும். ஆனா அன்னிக்குக் காலங்கடந்து போயிருக்கும். அப்புறம் நீங்க மனந்திருந்தி பிரயோஜனமில்லைன்னு புத்திமதி சொன்னாங்க.
''ம்ஹ்... அப்புறம் இவுக இரண்டு பேரையும் ஊருக்கு அனுப்பி வச்சாக.. இந்தா இன்னிக்கு... எம்மவ சந்தோஷமா வாழுறா.. யத்தாடி... பேசிக்கிட்டே நாழியாச்சே! தாயி. நாள் இன்னொரு நா வாரேன்" என்ற குருவம்மா அவசர அவசரமாக, துவைத்த துணிகளை அள்ளியபடி நடையைக் கட்டினாள்.
குருவம்மா சென்றபிறகு வெகு நேரம் பிரமித்து நின்றாள் செண்பா. அத்தைக்கு ராஜ உபச்சாரம் செய்தாலும், அத்தைக்குள் இருக்கும் வெறுமையும், அவளது இன்னொரு பார்வையும் செண்பாவுக்கு உறைத்தது. வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டின் முன், வண்டி மாடு நிற்பது தெரிந்தது. உள்ளே தன் கணவன், கந்தப்பனின் குரல் கேட்டது. மெதுவாகப் பின்கட்டு வழியே உள்ளே சென்றாள்.
அங்கு இன்முகமாய் வள்ளியம்மை. ''செண்பா! மாப்பிள்ளை எதையும் மனசுல வெச்சுக்காம உன்னையக் கூட்டிட்டுப் போக வந்திருக்காக, நீ எந்தக் குட்டையையும் கிளறாம கிளம்புடி என் ராசாத்தி..." என்றாள்.
"ஆமாடி, நான் வளர்த்த செல்லமே!"
என்ற செங்கமலத்தின் கால்களில் ''போயிட்டு வர்றேன் அத்தை" என்று விழுந்து வணங்கினாள் செண்பா.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜனவரி 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்