
அழகாக இருக்கவேண்டும் என்பதில் எல்லா பெண்களுக்குமே மிகவும் ஆசையும் ஆர்வமும் உண்டு. இயற்கையாக அழகாகவே இருப்பவர்களும் உண்டு. பருவத்திற்கு ஏற்ப தன்னை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்பவர்களும் உண்டு. சாதாரணமாக அழகு எப்படிப்பட்டது, அங்கங்கள் எப்படி இருந்தால் அழகு அதனால் என்னென்ன சௌகரியங்கள் ஏற்படும் என்பதை இப்பகுதியில் காண்போம்.
நெற்றியில் திரிசூலம் போன்ற நரம்புகளை உடைய பெண்கள் பலரையும் வைத்து வேலை வாங்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள்.
சரீரம், கூந்தல், பேச்சு ஆகியவை மென்மையாக இருக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நற்பயண்களை எப்போதும் ஒரே சீராக அடைந்து வருவார்கள்.
கண்கள், கழுத்து, வயிறு, கணுக்கால்கள் ஆகியவை மான்களுக்கு அமைந்ததுபோல அமையப்பெற்றவர்கள் மிகத்தாழ்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெரும் அதிர்ஷ்டகரமான மணவாழ்வை பெற்று மகிழ்வார்கள்.
கன்னங்கள், நகங்கள், நாக்கு, உதடுகள், உள்ளங்கைகள், பாதங்கள், உட்பகுதி, கடைக்கண்கள், யோனி ஆகியவை சிவந்துள்ள பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சகலவித சௌபாக்கியங்கள் சௌக்கியங்களையும், சுகபோகங்களையும் அடைந்து இன்புறுவார்கள் என்கிறார்கள்.
கண்கள், இடுப்புக்கு முன்பக்கம், மார்பகங்கள், இடை ஆகியவை அகலமாக இருக்கும் பெண்கள் உலகத்தாரால் போற்றப் பெரும் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
முழங்கால்கள், கணுக்கால்கள் ஆகியவை ஒன்றுடன் மற்றொன்று மோதும்படி அமையப்பெற்றிருக்கும் பெண்கள் தங்கள் மனதுக்கு இசைந்த மணவாளரை அடைவதோடு சுகபோக சௌக்கியங்களையும் பெற்று மகிழ்வார்கள், இவர்களை நல்ல வாய்ப்புகள் தாமாகவே நாடி வந்து நன்மை தருமாம் .
தலை, முகம், கழுத்து, கொங்கைகள், கொப்பூழ், தொடை, முழங்கால்கள், கணக்கால்கள் ஆகியவை உருண்டிருந்தால் அத்தகைய பெண்கள் நற்குணமுடைய நங்கையராகத் திகழ்வார்களாம்.
முகம், தலை, கூந்தல், தோள்கள், விரல்கள் ,ஆகியவை நீளமாக அமையப் பெற்ற பெண்களுக்கு தீர்க்காயுடன் நல்வாழ்வும், நல்ல கணவனும், புத்திரர்களும் அமைவார்கள் என்ற சிறப்பு செய்தியை பார்க்க முடிகிறது.
பொன்னிறமேனியும் பூத்துக்குலுங்கும் அழகும் மெல்லிய மிருதுவான அங்கங்கள் அனைத்தும் அழகாகவும் அமையப்பெற்ற பெண்கள் எதிலும் மிகுந்த ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
நெற்றியில் கருப்பு மச்சங்கள் இருந்தால் அத்தகைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் முதற் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும். இவர்கள் தீர்க்காயுள் உடையவர்களாகவும், தர்ம குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நெற்றி அர்த்த சந்திரனைப் போன்று இருக்கும் பெண்கள் தயாள குணம் உடையவர்களாகவும் இவர்களுடைய குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தனதானியங்களும் விருத்தி அடையும். கணவர், புத்திரர், புத்திரிகளும் இவர்களுடைய யோகத்தால் நற்பயனை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
பரந்த விசாலமான மென்மையான நெற்றியுடைய பெண் குடும்பத்தையே கோயிலாக மாற்றிவிடும் மனம்போக்கை உடையவளாக இருப்பாள். பூஜை புனஸ்காரங்கள், விரத அனுஷ்டானங்கள் ஆகியவற்றில் அதிக அக்கறையும், தெய்வீக நம்பிக்கையும், தெய்வ பக்தியும் கொண்டவனாக இருப்பாள்.
இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் கணவனுடைய ஆயுளும் விருத்தியாகும். தொழில், வியாபாரம் போன்ற எந்த துறையிலும் கணவனுக்கு முன்னேற்றமும், ஆதாயமும் கிட்டும். இவ்வாறு மங்கையரின் சிறப்புக்குரிய லட்சணங்களில் கூறப்பட்டுள்ளது.