
பூமியின் உள்ளே பல்லாயிரம் ஆண்டுகள் புதைந்து பின்னர் உருமாறி புவியன்னை தந்த வரமாக வெளிப்பட்டு மங்கையரின் மார்பிலும் மூக்கிலும் காதிலும் மின்னி அவர்களுக்குப் பேரழகைத் தந்து ஒரு கம்பீரத்தையும் கர்வத்தையும் தருவது வைரம் என்றால் அது மிகையல்ல.
கழுத்திலே நெக்லஸாக ஜொலிக்க, மூக்கிலே மூக்குத்தியாகப் பளபளக்க காதிலே வைரத் தோடாக மின்ன, ஒரு இளம் அழகியின் முன் வாலிபன் ஒருவன் மண்டியிட்டு அமர்ந்து, ‘என்னை நீ ஏற்றுக் கொள்கிறாயா’ என்று கேட்டு, அவள் அதை அங்கீகரித்ததற்கு அடையாளமாக, வைர மோதிரத்தை அவள் கையில் அணிவித்து ஏற்படுத்தும் உறவிற்கு இணை இந்த உலகில் உண்டா என்ன?
மங்கையர் போற்றும் மங்காத வைரம் மூன்று 'C'க்களால் உலகில் போற்றப்படுகிறது. Clarity, Carat, Cut என்ற மூன்று ‘C’க்களே அவை.
குறையில்லாத, மங்கல் இல்லாத, தெளிவான பிரகாசம் கொண்டதா என்பதை Clarity தெரிவிக்கிறது.
வைரத்தின் அளவைத் தெரிவிப்பது காரட். அளவு பெரிதாகப் பெரிதாக காரட்டும் கூடும். அதிகமதிகம் காரட் அளவு இருக்க இருக்க அதன் விலையும் அதிகம் தான்!
அடுத்து Cut என்பது வைரத்தின் பளபளப்பைத் தெரிவிக்கும் பட்டைகள் தாம்! பளபளக்கும் பட்டைகள் விலையை அதிகமாக்கும்.
இந்த மூன்று 'C'க்களை விட இப்போது நான்காவது 'C' முக்கியமான ஒன்றாக ஆகி விட்டது. அது தான் Certificate - சர்டிபிகேட்.
Gemological Insititute of America - GIA சர்டிபிகேட் இருந்தால், அதன் மதிப்பே தனிதான்! நம் நாட்டில், சூரத்தில் பட்டை தீட்டப்பட்ட இயற்கை வைரத்திற்கான சர்டிபிகேட்டைக் கேட்டு வாங்க வேண்டும்!
ஆனால் இப்போது அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் காண்பது என்ன?
லேபரட்டரியில் உருவாக்கப்பட்ட வைரங்கள் அதே பட்ஜெட்டில் பெரிய சைஸ் என்றும் நவீன தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இவை நீடித்து உழைத்து அழகைத் தரும் என்றும் விளம்பரங்கள் வருகின்றன!
இயற்கையான குழந்தைக்கும் டெஸ்ட் டியூப் பேபிக்கும் உள்ள வேறுபாடுகளை, இந்த இடத்தில் இந்த விஷயத்தில், ஒரு கணம் யோசிக்கலாம்.
அதே சமயம் ஹை பிரஷர் ஹை டெம்பரச்சர் (High-pressure, high-temperature (HPHT)) உத்தியினால் உருவாக்கப்படும் இவை சுற்றுப்புறச்சூழலில் சொல்ல முடியாத அளவுக்கு மாசு ஏற்படுத்துகின்றன என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கூறுவதைப் பார்க்கிறோம். இதில் உள்ள post-growth treatment மங்கலான வண்ணம் போன்ற பல குறைகளைக் கொண்டுள்ளது. பழுப்பான அடிபாகத்தைக் கொண்டு வெண்மையாகவும் காணப்படுகிறது என்பது இன்னொரு குறை!
எல்லாவற்றிற்கும் மேலாக வணிகத்தில் மறைக்கப்படும் பெரிய உண்மை இந்த லேப் வைரங்களுக்கு 'ரீ சேல் வேல்யூ' எனப்படும் மறுவிற்பனை விலையே இல்லை என்பது தான்! இயற்கை வைரங்களை போட்டி போட்டுக் கொண்டு மறு விற்பனையாக வாங்குவோர் இவற்றை வாங்குவதில்லை.
இயற்கை வைரங்களைப் பற்றிக் கூறும் ரஸ ஜல நிதி, கருட புராணம் ஆகியவை, அவற்றின் பலன்களாகக் கூறுபவை:
அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும்.
அறிவு பிரகாசிக்கும்.
மனம் எப்போதும் அலைபாயாது அமைதியுடன் இருக்கும்.
எதிலும் அதிர்ஷ்டம் வரும்.
கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும்.
செல்வம் சேரும், வளம் கூடும், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும்.
எதிரிகள் தோற்றோடுவர்.
செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும், நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.
அதிமானுஷ்ய தீய சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது.
இந்தப் பலன்களை செயற்கை வைரங்கள் உறுதி செய்கின்றனவா?
எது எப்படி இருந்தாலும் இறுதியாக முடிவு செய்வது அழகிய மங்கையைரின் கையில் தான் உள்ளது?
லேப் வைரமா? இயற்கை வைரமா?
டெஸ்ட் டியூப் பேபியா? வயிற்றில் சுமந்து பெறும் குழந்தையா?
மங்கையரே உங்கள் முடிவு என்ன? ஒரு வரி எழுதிப் போடுங்களேன்!