
103 ஆண்டுகள் வாழ்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஆக்னஸ் கெலெட்டி (Agnes Keleti).
ஜனவரி 9 1921 , ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர் சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார்.
கெலெட்டி தனது நான்கு வயதில் புடாபெஸ்டின் யூத கிளப்பில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியைத் தொடங்கினார்; மேலும் பதினாறு வயதிற்குள் தனது பத்து தேசிய பட்டங்களில் முதல் பட்டத்தை வென்றார்.
1944 இல் ஹங்கேரி மீது ஜெர்மனி படையெடுப்புடன், கெலெட்டியின் பயிற்சி திடீரென நிறுத்தப்பட்டது . ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவரை, இரண்டாம் உலகப் போரின்போது, யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களில் மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.
அவர் வைத்திருந்த சான்றிதழகளை பயன்படுத்தி, அவர் ஒரு கிறிஸ்தவப் பெண் என்று அடையாளம் காட்டி, கெலேட்டி போரில் இருந்து தப்பினார். அதன் பின்னர் பணிப்பெண்ணாகவும் வெடிமருந்து தொழிலாளியாகவும் பணியாற்றினார். அவரது தாயார் ரோசா மற்றும் அவரது சகோதரி வேரா ஆகியோரும் உயிர் பிழைத்தனர். போர் முடிந்ததும், கெலேட்டி தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கி இசை மற்றும் நீச்சல் பயிற்சிகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார். மேலும் ஜிம்னாஸ்டிக்ஸ் பக்கம் தன் முழு பார்வையை திரும்பினார்.
தனது ஜிம்னாஸ்டிக்ஸ் முயற்சிகளை மீண்டும் தொடங்கிய கெலெட்டி, 1946 இல் தனது முதல் ஹங்கேரிய சாம்பியன்ஷிப்பை வென்றார். அவர் 1948 லண்டன் ஒலிம்பிக்கிற்கான ஹங்கேரியின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போரின் காரணமாக இரண்டு முந்தைய விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர் ஒலிம்பிக்கில் சாதிக்க நினைத்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஓரங்கட்டப்பட்டார்.
1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் மற்றும் 1956 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அவர் தனது 30 களில் மிகவும் இளைய விளையாட்டு வீரர்களுக்கு எதிராக மொத்தம் ஐந்து தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
ஆக்னஸ் கெலெட்டி, ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான யூத விளையாட்டு வீராங்கனை ஆவார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பத்து ஒலிம்பிக் பதக்கங்களுடன், ஜிம்னாஸ்டிக்ஸில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற பெண்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஹங்கேரிய ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் இன்டர்நேஷனல் வுமன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் ஆகியவற்றின் உறுப்பினரான அவர், சர்வதேச யூத விளையாட்டு அரங்கில் புகழ் பெற்றார்.
இஸ்ரேலில் தஞ்சம் புகுந்தவர் அங்கு ரோபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். அங்கு, நெதன்யாவில் உள்ள விங்கேட் இன்ஸ்டிடியூட் ஃபார் பிசிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்டில் ஜிம்னாஸ்ட்களுக்கு பயிற்சி அளித்தார் மற்றும் இஸ்ரேலிய தேசிய பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணிக்கு 1990 வரை பயிற்சி அளித்தார். இந்த சேவைகளுக்காக 2017 இல் ஒரு சிறந்த குடிமகனுக்கான இஸ்ரேல் நாட்டின் பரிசைப் பெற்றார்.
2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் தனது 104ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் 103 ஆவது வயதில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் 02/01/25 அன்று காலமானார் என்பதை ஹங்கேரிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்தது.