

பண்டைய காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் இதயத்தைத் தூய்மையாக வைத்திருந்தார்கள். இந்தியாவின் சாவித்திரி அப்படிப்பட்ட பெரும் பெண்மணிகளுள் ஒருவர். மரணத்தின் பிடியிலிருந்து தனது கணவனை யமதர்மராஜனிடமிருந்து மீட்டாள் அவள்.
இறப்பிலிருந்து தங்கள் கணவனை மீட்ட பெண்மணிகளின் சரிதம் ஏராளம் உள்ளது. ஆனால் தனது மனைவியை கணவன் மீட்டதாக வரலாறு ஒரு சம்பவத்தையும் குறிப்பிடவில்லை.
பாரதத்தில் அப்படிப்பட்ட உன்னதமான குணாதிசயங்கள் கொண்ட பெண்மணிகள் பெண்மைக்கு உயரிய லட்சியத்தை முன் வைத்தனர்.
இன்றைய சமுதாயம், பெண்களுக்கு அப்படிப்பட்ட உயரிய லட்சியங்களைக் கடைப்பிடிக்க ஊக்கம் அளிக்காததால், சிதிலமடைந்திருக்கிறது.
இன்றைய சமுதாயம் மிக மோசமான நிலையில் கெட்ட எண்ணங்கள், கெட்ட உணர்வுகள், கெட்ட நடத்தைகள் கொண்ட வாழ்க்கையைக் கொண்டதாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் ஶ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் - மஹிளா விபாக் தரும் வாய்ப்புகள் மூலமாக நல்ல குணங்களைக் கொண்டு அவற்றை உலகெங்கும் பரப்ப ஊக்கமளித்து வருகின்றன.
சமுதாயத்தில் பெண்கள் மேம்பட்டால் தான் உலகம் முழுவதும் புனிதமாக ஆகும்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
பெண்களுக்கான நிறுவனங்கள் பெரும் சாதனைகளைப் படைத்திருக்கின்றன; ஆனால் ஆண்கள் அவற்றின் நற்பணிகளை உணரவில்லை. பெண்மணிகள் தேசங்களை ஆளும் திறன் படைத்தவர்கள். தங்கள் மனதில் தீர்மானம் செய்து விட்டால் அவர்கள் உலகம் முழுமையையுமே ஆள்வார்கள். பெண்களை வெறும் அடிமைகளாக ஆண்கள் கருதக் கூடாது. நாம் பெண்களை சாதாரணமாக நினைப்பதால் தான் நமது தேசம் இழிநிலையில் இருக்கிறது.
உலகில் பெண்களால் சாதிக்க முடியாத எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட பெண்களின் இயற்கையைப் புரிந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு சமவாய்ப்புகளை சமுதாயத்தில் வழங்க வேண்டும். அப்படிப்பட்ட எந்த ஆதரவும் இன்று அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு நல்ல காரியத்திற்காக பெண்கள் சேர்வதை ஆண்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுடைய சொந்த சுயநலத்திற்காக, பெண்கள் சமுதாயத்திற்குச் செய்யும் நல்ல காரியங்களை ஆண்கள் அங்கீகரிப்பதில்லை.
பொதுவாகவே பெண்கள் சுயநலமற்றவர்கள். அவர்களின் இதயம் இரக்கத்தினாலும் அன்பினாலும் நிரம்பியுள்ளது. தங்கள் குழந்தைகளை நல்ல வழியில் நடப்பதற்காக அவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இது ஆண்களுக்கு முடியாத காரியம். குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்க்க ஒரு தாயின் பங்கு மிக முக்கியமானது. தற்காலத்திய கல்வி முறையே குழந்தைகளின் நடத்தை படிப்படியாக சீரழிந்து வருவதற்கான காரணமாகும். பழைய காலத்தில் கல்விப் பருவத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை புனிதமான நாமங்களான ஓம் நமசிவாய என்றோ அல்லது ஓம் நமோ நாராயணாய என்றோ உச்சரிக்க வைப்பார்கள். ஆகவே இப்படிப்பட்ட ஆரம்ப நிலையிலேயே இந்த புனித நாமங்கள் குழந்தைகளின் இதயத்தில் பதிய வைக்கப்படும்.
ஆனால் இன்றைய நாட்களிலோ தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கல்விப் பருவத்தில் ‘பா... பா.. ப்ளாக் ஷீப்’ என்பன போன்ற ரைம்களை உச்சரிக்க வைக்கிறார்கள். இன்றைய நாட்களில் குழந்தைகளுக்கு எல்லாவிதமான தவறான பதங்களும் வார்த்தைகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
பழைய நாட்களில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை மதிப்புடனும் மரியாதையுடனும் குழந்தைகள் வரவேற்பது வழக்கம். இன்றைய குழந்தைகளோ நற்குணங்களை விட்டு விட்டு அதற்குப் பதிலாக பணம், அதிகாரம், நட்பு ஆகியவற்றையே விரும்புகிறார்கள்.
நற்குணத்தின் முன்னால் பணம், அதிகாரம், நட்பு ஆகியவற்றால் என்ன பயன்?
பணம் வரும்; போகும். ஆனால் ஒருவர் அவர்களுக்கு ஒழுக்கத்தையும் தர்மத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். முன்பு இப்படிப்பட்ட நல்ல பழக்கவழக்கங்களை அவர்களுக்குக் கற்பித்தனர். இன்றைய பெற்றோர்கள் மேற்படிப்பைப் படிக்கத் தூண்டி அவர்களை பெரிய ஆளாக்குவதையே முதன்மையாக விரும்புகின்றனர். ஆனால் பழைய காலத்திலோ பெரிய ஆளாக ஆவதை விட நல்லவர்களாக அவர்கள் ஆவதையே பெற்றோர்கள் விரும்பினர். தங்கள் குழந்தைகள் நல்லவர்களாக இருப்பதையே அவர்கள் விரும்பியதால் தான், மற்ற எல்லா தேசங்களுக்கும் ஒரு லட்சிய தேசமாக பாரதம் முன் நின்றது.