
உபரத்தின வரிசையில் ப்ளட்ஸ்டோன் (BLOODSTONE) ஒரு அபூர்வமான ரத்தினமாகும். ப்ளட்ஸ்டோன் என்ற பெயரைக் கேட்டவுடன் இது இரத்த நிறத்தில் இருக்கும் என்று நினைத்தால் அவர்கள் ஏமாந்தே போவார்கள். ஸ்படிக வகையைச் சார்ந்த ப்ளட்ஸ்டோன் பச்சை நிறமாக சிவப்புப் புள்ளிகளுடன் இருக்கும்.
ஹெலியோட்ரோப் (HELIOTROPE) என்று அறியப்படும் இது கிரேக்க மொழியில் உள்ள வார்த்தையால் அறியப்பட்டது. இதன் பொருள் சூரியகண நிலை என்பதாகும். இது தெய்வீகத்தன்மை வாய்ந்த கல்லாகும். இது மூலாதாரம், மணிபூரகம், அனாஹதம், ஸ்வாதிஷ்டானம் என்ற நான்கு சக்கரங்களில் சக்தியை எழுப்ப வல்லது.
நம்மைச் சுற்றியுள்ள சக்தி மண்டலத்தில் முன்னேற்றத்தைத் தருவதால் இதை வீட்டில் வைக்கலாம். அலுவலக மேஜையில் வைத்துக் கொள்ளலாம். எங்கு வைத்தாலும் பிராணசக்தி பெருகும். உடல்நலத்தைச் சீராக்கி பாதுகாக்க வல்ல இந்தக் கல் பொது ஜன சேவையைச் செய்யத் தூண்டும்.
விளையாட்டு வீரர்களோ இந்த வரபிரசாதக் கல்லை அணிந்து கொண்டே கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். பெயரும் புகழும் பெறுவார்கள். பண்டைய காலத்தில் எகிப்திய மன்னர்களாலும், குருமார்களாலும் போற்றப்பட்ட இந்தக் கல், மார்பில் கவசமாக அணியப்பட்ட கல்லாகும்.
இதை குளிர்ந்த நீரில் வைத்திருந்து பின்னர் உடலின் பல பாகங்களில் வைப்பது எகிப்திய குருமார்களின் வழக்கம். போர்க்காலத்தில் கிரேக்க வீரர்கள் இதை அணிந்து கொண்டு செல்வது வழக்கம். போர்க்களத்தில் முக்கியமான தந்திர முடிவுகளை எடுக்க இது வழி வகுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேஜில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கிறது. இது ப்ளட்ஸ்டோன் தானா என்பதை நல்ல நிபுணர்களின் உதவியைக் கொண்டு அறிந்து கொண்டு பின்னரே அணிய வேண்டும். ஏனெனில், கற்களில் போலிக் கற்கள் உலவுவது எங்கும் எப்பொழுதும் நிலவும் ஒரு ஏமாற்றுப் பழக்கமாகும்.
ஒரு இடத்தில் நிலையாக இருக்க விரும்புவோர் இதை அணியலாம். நிலைத்த தன்மையை அருளும் சக்தி இதற்கு உண்டு. உடலின் எடையைக் குறைக்க வேண்டுமா? இதை அணியலாம். இரத்த சோகை உள்ளிட்ட ரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கும் இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் ஒரு கல்லாகும்.
சீனர்கள் பெங் சுயி கலையில் இதை ஒரு முக்கியமான அங்கமாக வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். வீட்டில் அமைதி உருவாக, உணர்ச்சிகள் சமநிலையுடன் இருக்க, இதை அணிவது வழக்கம்.
காதணி, நெக்லஸ், ப்ரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட அணிவகைகளில் இதை பயன்படுத்தலாம். இதன் சக்தியை அனுபவிக்க விரும்புவோர் இதை தனது பாக்கெட்டுகளில் வைத்துப் பார்க்கலாம் அல்லது தனது அலுவலக மேஜையில் அல்லது வீட்டின் முக்கிய பகுதிகளில் வைத்துப் பார்க்கலாம். உடனடியாக இதன் சக்தியை உணரலாம். ஆனால், நல்ல ப்ளட்ஸ்டோனை தகுந்த நிபுணரிடமிருந்து பெற வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.