"வறுமையே நான் சந்தித்த மிகப்பெரிய சவால்" - டாக்டர் விஜயலட்சுமி!

Cancer doctor
Cancer doctor
Published on

சமீபத்தில் பத்மஶ்ரீ விருது பெற்ற டாக்டர் விஜயலட்சுமி, புற்று நோயாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர். கடுமையான வறுமையிலும் மனம் தளராமல், டாக்டர் படிப்பை முடித்து, இன்றளவும் ஏழைகளுக்குச் சேவை செய்கிறார். இதற்காக, அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஜுவர்கியின், கோபாள் கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயலட்சுமி தேஷ்மானே. (வயது 70). சம்மார சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை பாபு ராவ், மில்லில் தொழிலாளியாக இருந்தவர். தாய் ரத்னம்மா தினமும் காலை வீடு வீடாகச் சென்று, காய்கறிகளை விற்றார்.

அப்போது பள்ளியில் படித்த விஜயலட்சுமி, காய்கறி விற்பனையில் தன் தாய்க்கு உதவியாக இருந்தார். மில்லில் பணியாற்றிய இவரது தந்தைக்கு, அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல் போனது. மகள் அறுவை சிகிச்சை வல்லுனராக வேண்டும் என அவளிடம் கூறி வந்தார். கடுமையான வறுமையிலும் மகளைப் படிக்க வைத்தார். மகளை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்க, பணம் இருக்கவில்லை. அப்போது தாய் ரத்னம்மா, தன் தாலியை விற்று மகளுக்குக் கட்டணம் செலுத்தினார்.

இதையும் படியுங்கள்:
நீர் நிலைகள் கற்றுத் தரும் வாழ்க்கை பாடங்கள்!
Cancer doctor

டாக்டர் படிப்பை முடித்த விஜயலட்சுமி, கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்தார். அன்று முதல் ஏழைகளுக்குச் சேவை செய்வதை, உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார். பலரின் நோயை குணப்படுத்தி, புது வாழ்வளித்தவர்.

இவரது சேவையை அடையாளம் கண்டு, மாநில அரசு 2014ல் 'ராஜ்யோத்சவா' விருது வழங்கியது. தற்போது மத்திய அரசின், 'பத்மஸ்ரீ' விருது கிடைத்துள்ளது. சம்மார சமுதாயத்தில் இந்த உயரிய விருதை பெற்ற முதல் பெண் இவர்தான்.

உழைப்பும், மன உறுதியும் இருந்தால், எதுவுமே சாத்தியம்தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

டாக்டர் விஜயலட்சுமியின் பகிர்வு:

"என் பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள். எங்கள் குடும்பம் வறுமையானது. பெற்றோரின் படிப்பின்மை மற்றும் வறுமையையே சவாலாக ஏற்று இன்று உச்சத்தை அடைந்துள்ளேன். என் உழைப்பு விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. என் பெற்றோர் படிக்கவில்லை என்றாலும், பிள்ளைகளைப் படிக்க வைத்து உயர்ந்த இடத்தில் அமர்த்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்!
Cancer doctor

பெற்றோருக்கு நாங்கள் எட்டுப் பிள்ளைகள். ஆறு பேர் பிஎச்.டி., பெற்று, வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகின்றனர். நான் மூத்தவள். எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., முடித்துள்ளேன். புற்றுநோய் வல்லுனராகப் பணியாற்றுகிறேன். என் சகோதரர் கலபுரகியில் வக்கீலாக இருக்கிறார். நான் மருத்துவம் முடித்த பின், கித்வாய் மருத்துவமனையில் டாக்டராகப் பயிற்சியைத் துவக்கினேன்.

கடந்த 1994ல் பேராசிரியராகப் பணியாற்றினேன். அதன்பின் டீன், எச்.ஓ.டி., மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளேன். நான் ஸ்ரீ கிருஷ்ணனின் தீவிர பக்தை. எனக்குக் கிடைத்த பத்மஸ்ரீ விருதை, அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

மருத்துவத் தொழிலை, மக்களுக்குத் தொண்டு செய்வதை விரும்புகிறேன். திருமண வாழ்வு இதற்குத் தடையாக இருக்கும் என்பதால், நான் திருமணமே செய்து கொள்ளவில்லை. உயிர் உள்ள வரை மக்களுக்குச் சேவை செய்வேன்."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com