'சாலுமரத' திம்மக்கா : குழந்தை வரம் கிடைக்கவில்லை... பிள்ளைக்காக மரத்தைச் சுற்றினாள்... மரத்தையே பிள்ளையாக்கினாள்!

ரூ.1.5 கோடி மதிப்புள்ள பிள்ளைகளை விட்டுச் சென்ற தாயின் நெகிழ்ச்சிப் பயணம்; மகத்தான தியாகம்!
'Chalumaratha' Thimmakka
'Chalumaratha' Thimmakka
Published on
mangayar malar strip
mangayar malar strip

“பிள்ளைகள் கூட பெற்றவர்களை மட்டும் தான் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் ஒரே ஒரு மரத்தை வளர்த்தால் அது ஒரு ஊருக்கே நிழல் கொடுக்கும்" என்று பேட்டி ஒன்றில் நெகிழ்ந்த இயற்கையின் நிஜத்தாய் திம்மக்கா, இன்று, தான் வளர்த்த பிள்ளைகளின் மடியில் சுகமாக உறங்கச் சென்றுவிட்டார். இந்த பாக்கியம் எவருக்கு கிட்டும்? ஆனால் இது அவ்வளவு எளிதானது என நினைக்காதீர்கள்!

இயற்கையை தன் மழலைகளாக சீராட்டி தாலாட்டிய அன்னையின் வைராக்கிய வரலாறை இங்கு அவருக்கு காணிக்கையாக காண்போம்.

இயற்கையை நேசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதெல்லாம் சும்மா கதை என்று சொல்பவர்கள் அதே இயற்கையை நேசித்து வாழ்ந்த 114 வயது திம்மக்காவை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். யார் இந்த திம்மக்கா?

சாலுமரத திம்மக்கா (Saalumarada Thimmakka) என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூரின் கிராமம். பிறந்தது கிராமம் என்பதால் மண் மீதான நேசம் இவரது ரத்தத்தில் கலந்திருந்தது. அதுவே பின்னாளில் இவரது அடைக்கலம் மற்றும் அடையாளமும் ஆகியதுதான் சாதனை.

1911 ல் பிறந்த இவர் அன்றைய வழக்கப்படி மிக இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்து அந்த ஊரின் மருமகளானார். இடை நின்ற பள்ளிப்படிப்பும் எட்டாக்கனவாகியது.

திருமணம் முடிந்ததும் அடுத்து எதிர்பார்ப்பது மழலைப் பேறு என்பது எழுதப்படாத விதி. ஆனால் இவர் வாழ்வில் விதி சதி செய்தது. திருமணமாகி நீண்ட வருடங்கள் ஆகியும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அன்புக்கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது. ஆம்.. ஊரே இவரை மழலைப் பேறு இல்லாதவர் எனத் தூற்றினாலும் தன் மனைவியை விட்டுத் தரவில்லை சிக்கையா.

'Chalumaratha' Thimmakka
'Chalumaratha' Thimmakka

கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர், சிந்தித்தார். பிள்ளைக்காக மரங்களை சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன? பெற்றால் தான் பிள்ளையா? நட்டாலும் அது தன் வாரிசு தானே? அதிலும் ஆன்மீக நம்பிக்கை பேரில் பிள்ளைப்பேறு தரும் சக்திவாய்ந்த ஆலமரங்களே அவரது விருப்பமாகியது.

கணவரின் சம்மதம் பெற்று உடனடியாக செயலில் இறங்கினார். முதலில் இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி பத்து ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த வருடத்தில் பதினைந்து. அதற்கடுத்த வருடத்தில் இருபது என பெருகின ஆலமரக்கன்றுகள் இவர்களது அயராத உழைப்பில்.

தனது உழைப்பின் பலனாக தன்னைப் பார்த்து சிரித்த முதல் பிள்ளையை அகமகிழ்ந்து உச்சி மோந்த திம்மக்கா தனது பிள்ளைகள் வருங்காலத்தில் இந்த சமூகத்துக்கே உதவும் என தீர்மானித்து தனது தீர்மானம் சரி என நிரூபித்தார். ஆனால் அது அவ்வளவு எளிதான செயலாக இல்லை.

நாம், 'வீட்டுக்கு ஒரு மரம்' வளர்க்க அரசு தரும் இலவச மரங்கன்றை நட்டு சில நாட்கள் அதற்கு நீரூற்றுவோம். தொடர்ந்து அதை பராமரித்து வருவதென்பது பெரும்பாலும் ஆகாத காரியமாகும்.

ஆனால், கணவன் மனைவி இருவரும் இணைந்து தங்கள் பிள்ளைகளுக்காக அப்பகுதியில் கோடைகாலத் தேவைக்கு மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தார் திம்மக்கா.

கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காமல் அரை நூற்றாண்டு கடந்தும் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தது திம்மக்காவின் அசாத்தியமான செயல் .

சமூக ஆர்வலர்கள் கண்களில் இவரது செயல்கள் பட, அவர்களது உதவியும் கரம் கோர்க்க, இவரது அரும்பெரும் சூழலியல் பணி உள்ளூர் முதல் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்தது.

அதன் பலனாக இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதுடன் தேசியக் குடிமகன் விருது, விருஷமித்ரா விருது, கல்பவல்லி விருது, நாடோஜா விருது உள்ளிட்ட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தியது. அத்துடன் 2016ல் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.

மேலும் லாஸ்ட் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவில் மூலங்கள் என ( சான்று விக்கிப்பீடியா) இவரது பெயரில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏட்டுப் படிப்பு இல்லை எனினும், தனது சுயநலம் அற்ற சிந்தனை மூலம் தனது செயல் இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நல் எண்ணத்தாலும் உலக அளவில் இதுபோன்ற பெருமைகளை பெற்ற தும்மக்கா, முன்மாதிரியாக கொண்டாடப்படுகிறார்.

இவர் பெற்ற ஏராளமான விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் மணிமகுடமாக திகழ்கிறது கர்நாடக மக்கள் அன்புடன் இவருக்கு சூட்டிய 'சாலுமரத திம்மக்கா' எனும் பட்டம்.

இதையும் படியுங்கள்:
விஷச்செடியாகக் கருதப்பட்ட தக்காளி இன்று உலக உணவானது எப்படி?
'Chalumaratha' Thimmakka

ஆம், தான் வாழ்ந்த ஹூலிகல் கிராமத்திற்கும், கூடூருக்கும் இடையே சுமார் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான ஆலமரக் கன்றுகளை நட்டு வளர்த்ததால் "சாலுமரத" என்ற 'வரிசை மரங்கள்' எனும் பொருள் கொண்ட கன்னட வார்த்தையின் பெயர் அவருக்கு நிலைத்தது.

தற்போது இவர் வளர்த்த மரங்களின் மதிப்பு சுமார் 1.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டு இவற்றை பராமரிக்கும் பொறுப்பை கர்நாடக அரசே ஏற்றுள்ளது எனும் தகவல் பாராட்டுக்குரியது. ஆனால் இவர் சில பேட்டிகளில் கூறியிருந்த "என்னிடம் பணம் சேர்ந்த பின் தனது ஊரில் இலவச மருத்துவமனை கட்டவேண்டும்" என்ற இவரது கனவு மட்டும் கனவாகவே இருக்கிறது இன்னும்.

இதையும் படியுங்கள்:
தீயில் இறங்கி தெய்வமான பெண்! வெட்டவெளியில் காட்சியளிக்கும் பெத்தம்மாள்!
'Chalumaratha' Thimmakka

தன் பெயர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே என எண்ணாமல் நூற்றுக்கணக்கான ஆலமரங்களை பிள்ளைகளாக பேணி வளர்த்து ஒரு கிராமத்தையே சோலை வனமாக்கி, தான் பிறந்த மண்ணுக்கு மட்டுமின்றி உலக அளவில் பசுமைப் புரட்சி செய்து, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு தந்த சாலுமரத திம்மக்கா என்றென்றும் நிறைந்திருப்பார் நாம் காணும் ஒவ்வொரு ஆலமரங்கள் வீசும் காற்றில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com