
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் ஒரே ஒரு பொய்யை சொல்லி அதனால் ஏற்பட்ட விளைவை இப்பதிவில் காணலாம்.
எனக்குத் தெரிந்த அந்த தோழியின் வீட்டில் ஆறு பெண்மணிகள். அப்பொழுது என் தோழிக்கு திருமணம் செய்ய பேச்சை ஆரம்பித்திருந்தனர். மாப்பிள்ளை பெண்ணை பார்த்துவிட்டு, பெண்ணின் தந்தையிடம் பெண் என்ன படித்திருக்கிறார் என்று ஆர்வமாக கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்ணின் அப்பாவும் 'பெண் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்திருக்கிறாள். எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் வாங்கி இருக்கிறாள்' என்று கூறிவிட்டார். அவருடைய கவலை அவருக்கு. ஆறு பெண்களையும் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அதில் எப்படியாவது இந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட்டால் போதும். மாப்பிள்ளை நல்லவராக இருக்கிறார். இதை விட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால்தான் அவர் அப்படி சொன்னாராம்.
சரி என்று அவரும் சந்தோசமாக திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.
அந்த காலத்தில் மிகவும் எளிமையாகத் தான் திருமணம் நடைபெறும். அதேபோல் இவர்களுக்கும் நடந்திருக்கிறது. பிறகு தனிக் குடித்தனம் செய்வதற்கு சென்னைக்கு அவரை அழைத்துக் கொண்டு அவர் கணவர் வந்திருக்கிறார். வந்து சில நாட்கள் கழித்து உன் சர்டிபிகேட்டை எடுத்துக் கொண்டு வா பார்ப்போம் என்று கூறி இருக்கிறார். அந்த தோழியும் சர்டிபிகேட் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்திருக்கிறார். அதை பார்த்தவர் சற்றென்று அலறி அப்படியே சர்டிபிகேட்டை கீழே போட்டு விட்டாராம் .
காரணம் ஒரு பாடத்திலும் பாசாகாததுதான். அதிலும் எல்லாவற்றிலும் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பது அவருக்கு தலை சுற்றலே வந்து விட்டிருக்கிறது.
அதோடு இல்லாமல் கோபம் அதிகமாக வர அதைப் பொறுத்துக் கொண்டு, 'புதுப்பெண் உன்னை திட்டுவதோ அடிப்பதோ எனக்கு நோக்கமில்லை. உன் அப்பா பொய் சொன்னதற்கு நீ என்ன செய்வாய்? ஆதலால் இனிமேல் எக்காரணத்தைக் கொண்டும் நான் உன் அப்பா வீட்டிற்கு வர மாட்டேன். நீயே சென்று அவர்களுக்கு என்ன உதவியோ செய்துவிட்டு வா. ஆனால் என்னை அழைக்காதே. இப்பேற்பட்ட பொய்யை சொல்லி திருமணம் செய்தவர்கள் முகத்தில் விழிப்பதற்கு எனக்கு சிறிது கூட பிடிக்கவில்லை.
நீ பெயில் என்று சொல்லி இருந்தாலும் நான் உன்னைத் தான் திருமணம் செய்து இருப்பேன். அந்த முடிவோடு தான் இருந்தேன். அப்படிப்பட்ட என்னிடம் ஒருவர் இப்படி ஒரு பொய்யை சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி அதற்குப் பிறகு அவர் மாமியார் வீட்டிற்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்ல வில்லையாம்.
தோழிதான் போய் அவரின் அம்மா அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை என்றாலும், வீட்டில் திருமணம் எது நடந்தாலும் சென்று வருவது வழக்கம். ஆனால் வீட்டுக்கு என்னென்ன தேவையோ உறவு முறைக்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனைக்கும் பைசாவை எல்லாம் கொடுத்து விடுவார் தோழியின் கணவர். ஆனால் கூட போவது மட்டும் இல்லை.
இன்று பேர பிள்ளைகள் எல்லாம் எடுத்து அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் கூட அவர் அங்கு சென்றதே இல்லை.
தோழியும் அவரின் மற்ற எல்லா குண நலன்களையும் புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற் போல் அவரை கட்டாயப்படுத்தி அழைப்பது இல்லை. தோழியின் வழியில் தோழி. அவரின் கணவர் வழியில் அவர் என்று வீட்டில் எந்த வித சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக நடந்து கொள்கிறார்கள். தோழியின் பெற்றோர்களுக்கு இங்கு வர சங்கடம் என்று அவர்களும் வராமல் போய்விட்டார்கள். இப்படியாக ஒரு பொய்யினால் உறவுகள் பிரிந்து இருக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.
அப்படியும் தோழியின் கணவரை பாராட்டாமல் இருக்க முடியாது. பொய் சொல்லிவிட்டார்கள் என்று எத்தனையோ பேர் மனைவியை வாழ வெட்டியாக வைத்திருப்பதை பார்க்கும் நம் கண்களுக்கு, அவர் மனிதரில் மாணிக்கமாகத்தான் தெரிகிறார். தோழியின் கணவர் இந்த விஷயத்தை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. அதை அப்படியே விட்டுவிட்டார். ஒரு முறை தோழியே சொன்னது இது.
ஆகையால் பெண் பார்க்க போகும் பொழுது உண்மையை பேசுவோம். அதுவே உறவு மேம்பட வழி வகுக்கும்!