கார்ப்பரேட் கதை - முறையீடு!

ஒவியம்; தமிழ்
ஒவியம்; தமிழ்
Published on

-லக்ஷ்மண் சங்கர்

15வது ஃப்ளோரில் லிஃப்டை விட்டு வெளியே வந்ததும் கண்முன் தென்பட்ட கேபினுக்குள் அவள் நுழைந்தாள். படு ஆடம்பரமான அறை. நடுவில் இருந்த ஆறடிக்கு நாலடி பளபள மேஜையைச் சுற்றி 5 ஜாம்பவான்கள். 10 டிகிரி குளுகுளு ஏசி.

"வெல்கம் சுனந்தா" ஒரு ஜாம்பவான் வரவேற்றார். ராம் ரெட்டி- சட்டென்று அவள் அடையாளம் கண்டு கொண்டாள். ரொபோட்டிக்ஸ் மன்னன். அவர் பக்கத்தில் கீதா அய்யர். க்ளௌட் டெக்னாலஜி மேதை. மற்ற மூவரும் உலக அளவில் அவரவர் துறையில் சாதித்தவர்கள். ஷிவம் இன்ஃபர்மேடிக்ஸ் கம்பெனியின் டைரக்டர்கள்.

"குட் மார்னிங் எவ்ரிஒன்" சுனந்தா படபடப்பு இல்லாமல் சொன்னாள். இயற்கையிலேயே அவள் கலகலப்பானவள். கூட்டத்தில் தைரியமாகப் பேசுபவள்.

"டூ யூ ஹாவ் எனி க்வெஸ்ட்டியன்ஸ்?" கீதா கேட்டாள்.

"ஒண்ணே ஒண்ணுதான் - என்னை மாதிரி ஒரு ஜூனியரை இன்டர்வ்யூ பண்ண எதுக்கு இவ்ளோ மகா மேதைகள்?"

"ஷிவம் இன்ஃபர்மேடிக்ஸில் எந்த வேலையும் முக்கியமில்லாததில்லை" ராம் சொன்னார். "சரி, இப்ப நாங்க கேக்க ஆரம்பிக்கலாமா?"

"சுனந்தா, ஸேல்ஸுக்கு ரொம்ப முக்கியமானது எது?" அஐய் குப்தா - கணிதப்புயல் - கேட்டார்.

" நம்பிக்கை - விக்கற ப்ராடக்ட் மேல, என் கம்பெனி மேல, என் மேல - இது மூணும் ரொம்ப ரொம்ப அவசியம்"

"ஆர்டர் தரணும்னா கமிஷன் வெட்டணும்னு கஸ்டமர் சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவே?"

அஜய்யின் தீவிரப் பார்வை அவளை லேசாக சங்கடப்பட வைத்தாலும், மனதை ஒருமனப்படுத்தி பதில் சொன்னாள் " கண்டிப்பா நோ கமிஷன்னு சொல்லிடுவேன்."

"குடுத்தாப் பரவாயில்லைன்னு நாங்க சொன்னா?" அஜய் விடவில்லை. அவர் பார்வை இப்போது தன்னை சுதந்திரமாக மேய்ந்ததை அவள் உணர்ந்தாள்.

"தென் நோ ப்ராப்ளம்" அவள் லேசாக சிரித்தாள்." ஆனா என்னோட அடுத்த வேலய தேட ஆரம்பிச்சுடுவேன்"

"ஆயிரம் ஐ.டி. கம்பெனீஸ் இருக்கறச்சே ஏன் ஷிவம் இன்ஃபர்மேடிக்ஸ்ல அப்ளை பண்ணிணீங்க?"  ராம் கேட்டார்.

"பிஃபோர் ஐ ஆன்ஸ்வர் யூ சார் ஒரு ரிக்வஸ்ட் - என்ன நீங்க வாங்கன்னு கூப்பிடாதீங்க. நா ஒங்க எல்லாரயும் விட ரொம்ப ரொம்ப சாதாரணமானவ" மனப்பூர்வமாகச் சொன்னாள்.

"ராமுக்கு யாருமே சாதாரணமானவங்க கிடையாது" அஐய் கண்ணடித்தார்

" ஷிவம் இன்ஃபர்மேடிக்ஸ்ல உன்னை ரொம்பக் கவர்ந்த விஷயம் எது" கேட்டது கௌதம் கங்குலி-15 வயதிலேயே 5 பேடன்டை பதிவு செய்தவர். கேம்ஸ் சாஃப்ட்வேர் மாமன்னன்.

 "உங்க கம்பெனியோட இளமை" பளிச்சென்று சொன்னாள்.

"இளமை" அஐய் லேசாக சிரித்தார்" ரொம்ப முக்கியமானது"

அடுத்த 30 நிமிடம் சுத்தமான கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் கழிந்தது.

"ஓகே சுனந்தா, இட் வாஸ் நைஸ் டு டாக் டு யூ" கீதா கை கொடுத்தாள்." நாங்க எங்க முடிவை அடுத்த வாரத்துக்குள் சொல்லுவோம். பை ஃபார் நௌ."

டுத்த மூன்றாவது நாளே சுனந்தாவுக்கு ஃபோன் வந்தது.

"ஹலோ, ஆம் ஐ டாக்கிங் டு தி ஸ்மார்ட் அண்ட் லவ்லி லேடி சுனந்தா" கேட்ட குரலாக இருந்தது.

"யெஸ்" கஷ்டப்பட்டு குரலில் எரிச்சலைக் காட்டாமல் பேசினாள் "நீங்க?"

"அஜய் பேசறேன்"

"அய்யோ, ஜொள்ளுப் பார்ட்டி" நினைத்தபடி " சொல்லுங்க சார்"

"ஒன்னை ரெண்டாவது இன்டர்வ்யூ பண்ணனும். நாளைக்கு ஈவ்னிங் எட்டு மணிக்கு ஹில்டன் ஹோட்டல்ல மீட் பண்ண முடியுமா?"

"ஷ்யர்"

"தேங்ஸ், நாளைக்கு நல்லதே நடக்கட்டும். பை மை டியர் லேடி"

"யாருடா பேசினது?" அம்மா கேட்டாள்

"ஷிவம்லேர்ந்து ஸெகண்ட் இன்டர்வ்யூ மா"

"வெரி குட்"

"ஆனா ஒரு ப்ராப்ளம் - நான் பாக்கப்போறது அந்த அச்சுபிச்சு அஜய்ய"

"ஓ"அம்மாவின் குரல் தடக்கென்று விழுந்தது

"பயப்படாதம்மா" அவள் சிரித்தபடி சொன்னாள் " எசகு பெசகாக நடந்துக்கிட்டார்ன ஆஃபிஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணி உண்டு இல்லன்னு ஆக்கிடறேன்"

இதையும் படியுங்கள்:
சத்தான வேர்க்கடலை சுண்டல் - Bread Egg Puff செய்யலாம் வாங்க!
ஒவியம்; தமிழ்

று நாள் சாயந்திரம் அவள் ஹில்ட்டனில் நுழைந்தபோது அஜய் அங்கு காத்துக் கொண்டிருந்தார்.

"லேட்டா வந்ததுக்கு சாரி சொல்லாத" புன்சிரித்தார் " நீ வெய்ட் பண்ணத் தகுதியானவள்"

அவளுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் " வா, டேபிள் இஸ் வெய்ட்டிங்"

அமர்ந்தார்கள். "ஷல் வீ ஸ்டார்ட்?"

நல்ல வேளை, அவர் "மது" வவில்லை. டின்னர் ஆர்டர் செய்தவுடன் " இன்டர்வ்யூ ஆரம்பம் " என்று உற்சாகமாகத் தொடங்கினார்.

அடுத்த 90 நிமிடங்கள் பிரமிப்பில் கழிந்தது. அவருடைய தொழில்நுணுக்க ஞானத்தில் அவள் எல்லாவற்றையும் மறந்தாள். கடவுள் சில மனிதர்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டாள்.

"ஒகே டியர், தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் ஈவ்னிங்" சாப்பிட்டு முடிந்தது ஹோட்டலின் லாபிக்கு வந்ததும் அவளுக்குக் கைகொடுத்தார் "கடைசி கேள்வி, இதுக்கு நீ ரெண்டு நாள் கழிச்சு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு. நான் பிஸ்னஸ் டூர் போய்ட்டு நாளன்னிக்குதான் வருவேன்"

"கேளுங்க"

"உன்னை இன்னொரு இன்டர்வ்யூ பண்ணனும். வர்ற ஸண்டே. சென்னைல இல்ல. கொடைக்கானல்.  நானே எல்லா டிராவல் அரேஞ்மென்ட்ஸ் பண்ணிடறேன். இது பெர்ஸனல்"

அவள் அதிர்ந்து போனாள். பளாரென்று அறைந்துவிட்டுப் போகவேண்டும் போலிருந்தது. "இவனை சும்மா விடக்கூடாது. நாளைக்கு ஆஃபிஸ் சென்று கீதாவிடம் சொல்லலாம். ஒரு பெண்ணால்தான் இந்தக் கேவலத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும்" என்று நினைத்துக்கொண்டு அவரைப் பார்த்து "சார், நான் நாளைக்கு உங்களுக்கு பதில் சொல்லலாமா?" என்று கேட்டாள்.

அவர் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்டாள் "நோ ப்ராப்ளம். நான் வெய்ட் பண்றேன். பை பை"

"மே ஐ கம் இன் மேம்?"

கீதா தலையைத் தூக்கி உள்ளே நுழைந்த சுனந்தாவைப் பார்த்தாள். " ஹாய் நீ சுனந்தா, ஆம் ஐ கரெக்ட்?"

"யெஸ்"

"சொல்லும்மா, என்ன விஷயம்? இன்டர்வ்யூ ரிஸல்ட் சொல்லிட்டாங்களா?"

"நேத்து ரெண்டாவது இன்டர்வ்யூ நடந்தது"

"குட்"

"மூணாவது வேற இருக்கு"

"வெரி குட்."

"நாட் குட் மேம்." சுனந்தாவின் குரலின் வன்மம் அவளையே ஆச்சரியப்படுத்தியது.

"ஏன் சுனந்தா? மூணாவது தடவை கூப்பிட்டா அது நீ எங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டேன்னு அர்த்தம்"

"உங்க எல்லாரையும் இல்ல மேம். மிஸ்டர் அஜய்ய மட்டும்தான்" வன்மம் அதிகரித்தது "அவர் என்னை கொடைக்கானல்ல இன்டர்வ்யூ பண்றாராம். ஹோட்டல், ஃப்ளைட் எல்லாம் பெர்ஸனலா புக் பண்ணிட்டாராம். ஐ தாட் ஸோ ஹைலி ஆஃப் யுவர் கம்பெனி"

"நீ எதோ தப்பா புரிஞ்சுட்டிருக்க. அஜய் ஜென்டில்மேன்"

"நோ. எதுக்காக அவர் என்னத் தனியா கொடைக் கானலுக்குக் கூப்பிடணும். ஒங்க ஹெச். ஆர். டிப்பார்ட்மெண்ட் தானே இதெல்லாம் செய்யணும்?"

இதையும் படியுங்கள்:
அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்!
ஒவியம்; தமிழ்

"நீ சொல்றதிலும் லாஜிக் இருக்கு" கீதா சட்டென்று ஃபோனை எடுத்துப் பேசினாள் "ஆமாம், நம்ம நெனச்ச மாதிரிதான் நடந்துருக்கு. யெஸ், ஐ வில் ப்ரிங்க் ஹர்"

பிறகு அவளைப் பார்த்து "வா, கான்ஃபரன்ஸ் ரூமுக்குப் போலாம்" என்று கூட்டிக் கொண்டு போனாள்.

"தேங்க்ஸ் மேம்" சொல்லிக்கொண்டே கீதாவுடன் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தவள் திகைத்துப் போனாள்.

முதல் இன்டர்வ்யூவில் பார்த்த எல்லாரும் இருந்தார்கள் - அஜய் உட்பட.

"மன்னிச்சுடு சுனந்தா" அஜய்தான் பேசினார். "மொதல்ல குட் நியூஸ், இந்தா ஒன்னோட அப்பாய்ன்ட்மென்ட் லெட்டர்" கொடுத்தார்

அவள் வாங்கிக்கொள்ளவில்லை.

"சுனந்தா, அஜய் செஞ்சதெல்லாம் நடிப்புதான், அதுவும் இன்டர்வ்யூவோட ஒரு பாகம்" கீதா லேசாக சிரித்தாள்

சுனந்தா முழித்தாள்.

"ஷிவம் என்டர்ப்ரைஸ்ல நாங்க ரொம்ப முக்கியத்துவம் குடுக்கறது மாரல் வேல்யூஸ் அண்ட் எதிக்ஸ் தான். நெறிமுறைகள்தான் எங்க கம்ப்பெனியோட அஸ்திவாரம். அதுக்கு ஆபத்து வரும்போது எங்க எம்ப்ளாயிஸ் முறையீடு செய்யணும்னு நாங்க எதிர்பார்க்கறோம். அஜய் உன்னை உபயோகப்படத்த ட்ரை பண்ணினபோது நீ "சீ, இந்த கம்பெனி சுத்த மோசம்"னு டிசைட் பண்ணிட்டு பேசாமல் போயிருக்கலாம். ஆனா நீ எங்ககிட்ட முறையீடு செய்ய வந்து  அநியாயத்த எதிர்த்துப் போராடறவள்னு நிரூபிச்சுட்ட. வீ வான்ட் ஒன்லி பீப்பிள் லைக் யூ. வெல்கம்"

சுனந்தா கையை நீட்டினாள். "அஜய் சார், அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரைக் குடுங்க. ஐ ஆம் ரெடி டு ஜாய்ன்"

"வெரி குட்" அவர் முகத்தில் சந்தோஷம்" கூடவே என் டாட்டரோட மேரேஜ் இன்விடேஷனயும் வாங்கிக்கோ."

நான் இந்தக் கம்ப்பெனியை விடவே மாட்டேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் சுனந்தா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com