மாடு படுத்தால் மழை வருமா? பாரம்பரிய நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?

மாடு படுத்தால் மழை வருமா? கிராமத்து நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்!
மாடு படுத்தால் - Cows lying down rain myth
மாடு படுத்தால் - Cows lying down rain myth
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 
MM strip
MM strip

நம் முன்னோர்கள் நிறைய இயற்கை மற்றும் வாழ்வியல் நுட்பங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து அவற்றை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளனர். டெக்னாலஜி பல மடங்கு பெருகினாலும் இன்றும் சில விஷயங்களில் கிராமப்புற மக்கள் இவற்றை நம்புகின்றனர். அதில் ஒன்றுதான் 'மாடு படுத்தால் மழை வரும்' என்பதும்.

மாடு படுத்தால் மழை வரும் என்பது உண்மையா? கிராமத்து நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள அறிவியல் பற்றி இங்கே காணலாம்.

''மாடுகள் கூட்டமாகப் படுத்துக்கிடந்தால் மழை வரப்போகிறது என்று அர்த்தம்!'' என்று கிராமப்புறங்களில் இன்றும் பலரும் பேசிக்கொள்வது வழக்கம்.

வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் திடீரென ஒன்றாகப் படுத்துக்கொண்டால், ''இன்னைக்கு மழை பெய்யும் போலிருக்கே!'' என்று பெரியவர்கள் சொல்வதை கிராமத்திற்கு சென்றால் பார்க்கலாம்.

பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கையில் உண்மை இருக்கிறதா? மாடுகளால் மழை வருவதை முன்கூட்டியே உணரமுடியுமா? இதற்குப் பின்னால் அறிவியல் என்ன சொல்கிறது என்பது குறித்து திரட்டிய தகவல்கள் இதுதான்.

இதையும் படியுங்கள்:
வயிற்றுக்குள் குஞ்சு பொரிக்கும் பாம்புகள்: இயற்கையின் மர்ம இனப்பெருக்கம்!
மாடு படுத்தால் - Cows lying down rain myth

மாடு படுத்தால் மழை வரும் என்பது உண்மையா என்றால் இதுவரை இதற்கு அறிவியல் ரீதியாக இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாடுகள் படுத்துக்கொள்வதற்கும் மழை பெய்வதற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. குறிப்பாக இங்கிலாந்தின் வானிலை ஆய்வு நிறுவனமான Met Office கூட, மாடுகள் படுத்தால் மழை வரும் என்ற நம்பிக்கைக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று விளக்கியுள்ளதாக தெரிகிறது.

மாடுகள் படுத்துக்கொள்வதற்கான உண்மையான காரணங்கள் பல உள்ளன.

பெரும்பாலும் ஓய்வெடுப்பதற்காக படுக்கலாம். ஆம், மனிதர்களைப் போலவே மாடுகளுக்கும் ஓய்வு அவசியம். நீண்ட நேரம் நின்று மேய்ந்த பிறகு கால்களுக்கு ஓய்வு கொடுக்க ஓரிடத்தில் படுத்துக்கொள்கின்றன.

அடுத்து மாடுகளின் செரிமானத்தில் அசைபோடுதல் முக்கியமானது என்பதால் அசை போடுவதற்காக படுக்கிறது. உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து மென்று விழுங்கும் இந்தச் செயலின்போது மாடுகள் படுத்திருப்பதைக் காணலாம்.

உடல் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மாடுகள் படுத்துக் கொள்கின்றன. குறிப்பாக வெப்பமான சூழலில் மாடுகள் நின்றுகொண்டு உடல் வெப்பத்தை வெளியேற்ற உதவுகின்றன என்றும் குளிர்ச்சியான சூழலில் ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

மேலும் தரையின் தன்மை, சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு போன்றவற்றைப் பொறுத்து படுப்பதற்கான வசதியான சூழலைத் தேர்ந்தெடுத்து அதன்படி மாடுகள் படுக்கும் இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து படுக்கிறது.

அப்படி எனில் மழை வருவதை மாடுகளால் உணர முடியாதா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் உள்ளது. அது என்ன?

சில விலங்குகளால் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணரமுடியும்.

உதாரணமாக காற்றின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள். வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள்.

காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை சில உயிரினங்கள் முன்னரே அறிந்து கொள்ளும் சக்தி கொண்டுள்ளது என்கின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு விலங்குகள் தங்களுடைய நடத்தை மூலம் எதிர்வினை காட்டலாம்.

மாடு படுத்தால் - Cows lying down rain myth
மாடு படுத்தால் - Cows lying down rain myth

விலங்குகளின் செயல்பாடுகள் உண்மையில் வானிலை மாற்றத்தைக் காட்டும் விதமாக அமையுமா?

நிச்சயமாக. சில விலங்குகளின் நடத்தைக்கும் வானிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது. உதாரணமாக வளிமண்டல அழுத்தம் குறையும்போது சில பறவைகள் தாழ்வாகப் பறக்கலாம். இது புயல் அல்லது மோசமான வானிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எறும்புகள் மழைக்கு முன்பாகத் தங்கள் கூட்டின் நுழைவுப் பகுதிகளை மாற்றியமைக்கலாம்.

தேவாங்கு மற்றும் சில தவளை இனங்கள் ஈரப்பதம் அதிகரிக்கும் சூழலில் அதிகமாகச் செயல்படலாம்.

ஆனால் இவை எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் மழையைத் துல்லியமாகக் கணிக்கும் அறிகுறிகள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

இது போலவே மாடுகள் இந்த மாற்றங்களை உணர்ந்து, மழை பெய்யப்போகிறது என்பதற்காகவே படுத்துக் கொள்கின்றன என்றும் நிரூபிக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
மழை வருவதை பூச்சிகளால் முன்கூட்டியே அறிய முடியுமா? நம் முன்னோர்கள் கண்டறிந்த அறிவியல்!
மாடு படுத்தால் - Cows lying down rain myth

அப்படியானால் இந்த நம்பிக்கை எப்படி உருவானது என்று தெரியுமா?

பழங்காலத்தில் வானிலை அறிக்கைகள், செயற்கைக்கோள் வசதிகள் இல்லாத காலத்தில் விவசாயிகள் இயற்கையையும் விலங்குகளையும் உன்னிப்பாகக் கவனித்தனர்.

மாடுகள் படுத்துக்கிடந்த சில நேரங்களில் மழை பெய்திருக்கலாம். அந்தச் சம்பவங்கள் நினைவில் பதிந்து, தலைமுறை தலைமுறையாக அதை ஒரு நம்பிக்கையாக மாற்றியிருக்கலாம்.

மேலும், மாடுகள் அடிக்கடி படுத்து ஓய்வெடுப்பதால், சில நேரங்களில் தற்செயலாக மழை பெய்யும் நேரமும் அதனுடன் ஒத்துப்போவதால் இந்த நம்பிக்கை தொடர்ந்து நிலைத்திருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆகவே பழங்கால நம்பிக்கைபடி மாடுகள் படுத்திருக்கிறதா, நிற்கிறதா என்பதை மட்டும் வைத்து மழையைக் கணிக்க முடியாது.

மாறாக, வானிலை ஆய்வு மையத்தின் மழை முன்னறிவிப்பு. வானிலை ரேடார் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள். காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதம். போன்ற அறிவியல் தகவல்களை அறிந்து கொள்வதே நல்லது.

ஆகவே ''மாடு படுத்தால் மழை வரும்'' என்பது சுவாரஸ்யமான கிராமத்து நம்பிக்கை. ஆனால் அதற்கு இதுவரை அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை. நம் முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உருவாக்கிய பல நம்பிக்கைகளில் சிலவற்றுக்குப் பின்னால் அறிவியல் இருக்கிறது. சிலவற்றுக்கு ஆதாரம் இல்லை. நமது முன்னோர்களின் நம்பிக்கைகளை மதிப்போம்; அதே நேரத்தில் அறிவியலின் துணை கொண்டு அவற்றை ஆராய்வோம்.

இதையும் படியுங்கள்:
விலங்குகளுக்கு மரணத்தை முன்கூட்டியே அறியும் சக்தி இருக்கிறதா? அறிவியல் உண்மைகள் இதோ!
மாடு படுத்தால் - Cows lying down rain myth