

வழக்கமாக மாலை 5.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு எல்லோருடன் கிளம்பும் நான், அன்று அலுவலகத்தில் என் அன்றைய அவசர வேலையை முடித்து விட்டு கிளம்ப மணி 7.00 ஆகி விட்டது. கிளம்பும் முன் அம்மாவுக்கு போன் செய்தேன். விவரம் கூறினேன், அம்மா நம்பவில்லை.
"ஏன் இதை 5.30 மணிக்கே சொல்லியிருக்கலாமே!" என்று கேட்டாள்.
அப்பா வந்தார் "என்னம்மா?" என்று அனுசரணையாக கேட்டார் போனில், விவரம் கூறினேன்.
"ரேணு நீ இரண்டு பேருந்து மாறி இங்கு வர 9.30 மணி ஆகிடுமே? எப்படி தனியா வருவே?”, என அப்பா கேட்க,
"அப்பா என்னுடன் வேலை செய்பவர் என்னுடன் வருகிறார், மற்ற விவரங்களை வீட்டில் வந்து கூறுகிறேன், கவலைப்படாதீங்க”, என்று கூறினேன்.
"அப்படியா..? சரிம்மா, எதற்கும் போனை கையிலேயே வைத்துக் கொள். ஒரு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நீ எங்கே இருக்கிறாய் என்று மட்டும் சொல்லிக் கொண்டே இரும்மா" என்று கூற, நானும் "சரிப்பா" என்று கூறினேன். அவர் கூறியபடியே அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அப்பாவிற்கு தகவல் கூறிக் கொண்டே வீடு வந்து சேர மணி பத்து ஆகி விட்டது.
வீட்டிற்கு வந்தவுடன் "ரேணு உன் கூட வேலை செய்பவர் உன்னுடன் வருவதாக கூறினாயே, எங்கே அவர்?" என்று கேட்டார் அப்பா.
உடனே அம்மா, "என்ன..? உன் கூட வேலை செய்பவர் உன்னோட வந்தாரா? ஓ.., கதை அப்படி போகுதா..?" என்று கேட்க உடனே அப்பா கோபமாக அம்மாவைப் பார்த்து, "கொஞ்ச நேரம் உன் திருவாயை லாக் பண்றீயா?" என்று கூற,
"என் வாயை நான் லாக் பண்ணிக்கிறேன், ஊர் வாயை யார் லாக் பண்றது?" என்று அம்மா, அப்பாவை பார்த்து கேட்க,
"ரேணு முதல்ல நீ போய் கை காலை அலம்பிட்டு சாப்பிட வாம்மா, பின்னர் பேசிக் கொள்ளலாம்," என்று கூறினார் அப்பா.
அதற்குள் அம்மா வீட்டின் வெளியே சென்று எட்டிப் பார்க்க,
"அம்மா யாரை தேடறீங்க?" என்று நான் கேட்டேன்.
"அதுவா.. ? உன் கூட வந்தவனைத் தான்," என்று அம்மா கூற,
எனக்கு சிரிப்பு வர, அம்மா, "என் கூட யாரும் வரல, நான் தனியா தான் வந்தேன். நான் தனியா வர்றேன்னு தெரிஞ்சா அப்பா கவலைப்படுவார். அதனால்தான் அப்படி சொன்னேன்" என்று நான் கூற,
அம்மா என்னை சந்தேகமாக பார்க்க,
"அதான் குழந்தை சொல்றா இல்ல, போய் சாப்பாடு எடுத்து வை" என்று அப்பா, அம்மாவை பார்த்து கூற, அம்மா முகத்தில், தீபாவளி பட்டாசு புஸ்வானம் ஆனது.