டிசம்பர் 11 - 'பற்றுள்ள ஞானி பாரதி' பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புக் கட்டுரை!

Subramania Bharati
Subramania Bharati
Published on

மிக மிகப் பெருமையாக இருக்கிறது.

டாக்டர் ரிது கரிதால் ஸ்ரீவத்சவா, முத்தையா வனிதா , நந்தினி ஹரிநாத், டி.கே. அனுராதா போன்ற விண்வெளி விஞ்ஞானிகளைப் பற்றி அறியும் போது,

நிலவுக்கும், செவ்வாய்க்கும் அனுப்பப்படும் மங்கள்யான், சந்திரயான் விண்கலன்களின் திட்டங்களின் வெற்றியில், இந்த புதுமைப் பெண்மணிகளின் ஆற்றல் பற்றி தெரிந்து கொள்ளும் போது…

பாரதியார் என்ற தீர்க்கதரிசியின், ஒரு மகா ஞானியின்  வாக்கு மெய்ப்பிக்கப்பட்டது என்று உணரும் போது…

“நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் “

கொண்டவர்கள் என்று பாரதி பாடிய புதுமைப் பெண்கள அல்லவா இவர்களைப் போன்றவர்கள்..

நூறு ஆண்டுகளுக்கு முன் உறுதியாய்ச் சொன்ன பாரதியின் கூற்றை, விண்வெளி சாத்திரம் பயின்ற பெண்கள் இன்று நிலவுக்கு கலன் அனுப்பி சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

"காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே..." 

என்று பாடிய  பாரதியின் காதல் மனது, இன்று காதலியின் கரம் கோர்த்து விண்ணை எட்டியிருக்கும்.

பாரதியாரை ஒரு சித்தர் என்று சிலர் கூறுவார்கள். அவரை ஞானச் சித்தராக  மற்றோரு  பரிமாணத்தில் பார்க்கலாம்.

Subramania Bharati
Subramania Bharati

நம் பாரத தேசம், தமிழ் மொழி, தலைவர்கள், குழந்தைகள், பெண் கல்வி, பெண்ணுரிமை, ஆன்மீகம், கண்ணன், இயற்கை, பராசக்தி, இளைய தலைமுறை, பிராணிகள், பறவைகள்...

இப்படி எல்லாவற்றிலும் பற்றும் நேசமும் வைத்த ஒரு சித்தர். பற்று மிக்க ஞானி. அந்த பற்று அனைத்தும் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் பிறந்து இன்று யுக புருஷராக அவரைப் போற்ற வைத்துள்ளது.

சொற்கோர்வையிலும், பொருளிலும், கருத்திலும், எதுகை மோனை அழகிலும் ஒவ்வொரு பாடலிலும் அவர் சிகரம் தொட்டிருக்கிறார். சில பாடல்களில் கோட்டையே கட்டியிருப்பார்.

எதிர்கால நன்மைகளை, நாட்டின் முன்னேற்றத்தை கவிதைகளில் சொன்ன தீர்க்கதரிசி.

பாரத நாட்டின் மீது பற்று வைத்து அவர் இயற்றிய பாடல்களைக் கேட்கும் நல்ல உள்ளங்கள் அனைத்திலுமே வீரமும் பெருமையும் பிரதிபலிக்கும் அல்லவா?

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும்  இந்நாடே அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே” 

இப்படி தம் பெற்றோர், முன்னோர், நம் தேசம் எல்லாவற்றின் மீதும் தமக்குள்ள நேசத்தை, ஆழ்ந்த பற்றை இதைவிட சிறப்பாக எளிய கவிதையில் வார்க்க முடியுமா?

பாருக்குள்ளே நல்ல நாடான நம் பாரத நாட்டின் பெருமையை அடுக்கடுக்காக அவர் சொல்லும் போது சொற்கள், எப்படி வந்து இணைகின்றன...

அவை வெறும் எதுகை மோனை மட்டுமல்ல, ஒரு யுகபுருஷரின் உள்ளத்திலிருந்து, பொங்கும் உணர்ச்சிகளாக  நம் பாரதத் தாயே அல்லவா சொல்வது போல் இருக்கிறது…

பர மோனத்திலே உயர்மானத்திலே, தானத்திலே, கானத்திலே,

தீரத்திலே, படை வீரத்திலே, நெஞ்சின் ஈரத்திலே, உபகாரத்திலே,

ஆக்கத்திலே, தொழில் ஊக்கத்திலே, உயர் நோக்கத்திலே, வண்மையிலே,

உளத் திண்மையிலே பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு அல்லவா?

மாமுனிவர் பலர் வாழ்ந்த பொன்னாடு

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

புத்தபிரான் அருள் பொங்கிய நாடு

அது மட்டுமா?

கனியும் கிழங்கும் தானியங்களும் நித்த நித்தம்

கணக்கின்றித் தரும் நாடு 

என்றும் பெருமிதம் பாரதிக்கு...

Subramania Bharati
Subramania Bharati

ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் உச்சியில் பட்டொளி வீசிப் பறக்கும் நம்

தேசியக் கொடி, தாயின் மணிக் கொடியை வணங்கும் பெருந்திருக் கூட்டம்,

நம்பர்குரியர் அவ்வீரர் தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

தேசியக்கொடிக்கு மட்டுமின்றி நம் எல்லையில்  எதிரிகளுடன் போராடி 

நாட்டைக் காக்கும் வீரருக்கும் சேர்த்தல்லவோ வீர வணக்கம் சொல்கிறார் பாரதி

பாரதியின் தேசப்பற்று, அதன் பெருமைகளை, அருமைகளைச் சொல்வதோடு, 

அடங்கவில்லை..

இந்த நாட்டில் என்னென்ன முன்னேற்றம் எல்லாம் வர வேண்டும் என்பது நாட்டு மக்களின் மீது அவர் வைத்திருக்கும் அளவில்லாத பற்றாக எல்லாம் பெருகி வருகிறது...

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் 

அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்

வானையளப்போம் கடல் மீனைஅளப்போம்.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.

காவியம் செய்வோம் காடுகள் வளர்ப்போம்..

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்.

காடுகள் அழிந்து வருவதால் உலக வெப்ப நிலை அதிகரிப்பதாக இன்று விஞ்ஞானிகள் சொல்வதை எப்படி அன்றே பாரதி உணர்ந்தார்?

காசி நகர்ப் புலவர் பேசும் உரை காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் 

என்றாரே, எப்படி இன்றைய அலைபேசியை அவர் காட்சிப் படுத்தினார்?

அவர் மகா கவியா, சித்தரா, தீர்க்கதரிசியா, மனித உருவில் வந்த கடவுளா..?

அடிமைப் பட்டுக் கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கையில், அவர்  பொங்க எழுதியிருக்கும் விடுதலைப் பாடல்களும், தாய் நாட்டின் அருமை கூறும் பாடல்களும், தமிழுக்கும் நம் நாட்டுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷம்.

பாரதியின்  தமிழ் மொழிப் பற்றும், செந்தமிழ்நாட்டின் மீது அவர் கொண்டிருந்த காதலும்  உலகம் அறிந்த ஒன்று.

கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க் கம்பன் பிறந்த நாடு

கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ் நாடு

என்றெல்லாம் மிக உயர்வாக, கம்பீரமாக தான் பிறந்த மண்ணைப் போற்றியிருக்கிறார்.

அவரது தமிழ்ப் பற்று, வானமளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழியாக   தமிழை உயர்த்துகிறது.

பதினாறு மொழிகள் அறிந்த பாரதி,

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்  

என்று மட்டும் பாடவில்லை,

இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் 

திறமையான புலமை யெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் 

என்றும் தம் பேராவலை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படியுங்கள்:
தேரழுந்தூர் தலத்து ஆமருவியப்பன் கோவிலில் திருமங்கை ஆழ்வாருக்கே முன்னுரிமை!
Subramania Bharati

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உணர்ச்சி பொங்க பாடல்கள் படைத்த இந்த மகா கவி, விடுதலைக்குப் பாடுபட்ட மற்ற தலைவர்கள் மீதும் பரிவுகொண்டு அவர்களைப் போற்றியும் பாடல்கள் புனைந்திருக்கிறார்.

தேசப் பற்று மிக்க தலைவர்கள் மீது பாரதிக்கு அபாரப் பற்று…

மகாத்மா காந்தியை, வாழ்க நீ எம்மான் என்று மனம் நிறைந்து வாழ்த்தியிருக்கிறார். 

வ.உ. சிதம்பரனார், பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய், போன்ற பல போற்றிப் பாடிய பாடல்கள் அவர்களது உன்னதத்தைப் பறை சாற்றுபவை.

நாட்டின் கண்கள் இளையோர்தானே..

குழந்தையிலிருந்தே ஒற்றுமை உணர்வு, கல்வியின் அவசியம், சோம்பேறித்தனம் விட்டு ஒழித்தல், நாய், கோழி ,குதிரை, பறவைகள் போன்ற மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துதல், தாய் நாடு, தமிழ் இவற்றை உயர்வாக எண்ணித் தொழுதல், அச்சம் கொள்ளாமை, பாதகம் செய்வோரை எதிர்த்து மோதி மிதித்தல் என்று அத்தனை அறிவுரைகளையும் வைத்து 

ஓடி விளையாடு பாப்பா என்று பாடி விட்டுப் போய்விட்டார் மகா கவி...   

இளைய பாரதத்து மைந்தர்களை ,

ஒளி படைத்த கண்களும், உறுதி கொண்ட நெஞ்சமும், களி படைத்த இனிய மொழியுடன், வலிமை கொண்ட தோள்களுடன், தெளிவு பெற்ற மதியுடன், சிறுமை கொண்டு பொங்கும் திறனுடன் ஏறு போல் நடக்கும் இளைஞர்களை, இளைய பாரதத்தினாய் வா வா என்று கனிவுடன் அழைக்கிறார்

இதையும் படியுங்கள்:
கோலத்தின் பாரம்பரியமும், ஆரோக்கிய சிறப்பும்!
Subramania Bharati

இறைவன் மீது பாரதி கொண்ட பக்தி, எத்தனை பாடல்களில் எத்தனை விதமாக வெளிப்படுகிறது..? ஆழ்ந்து நோக்கினால் அவையெல்லாமே ஞான மார்க்கம் என்று புரியும்...

பக்தியினாலே, 

சித்தந்தெளியும், இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் 

வித்தைகள் சேரும்,  நல்லவீரர் உறவு கிடைக்கும்

நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்.

சோர்வுகள் போகும் கல்வி வளரும் காரியம் கையுறும் வீரியமோங்கிடும்

ஆண்மை உண்டாகும், அறிவு தெளிந்திடும்

என்று அவர் சொல்லும் போது, இறைவனைத் தொழுதால், நமக்குள் கவலைகள் நீங்கும் என்ற உணர்வு வருகிறதல்லவா?

வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று தமிழ் இலக்கியத்தின் அழகான இலக்கணக் கோர்வைகளை பக்தி என்னும் நூலில் கோர்த்து விநாயகர்  நான்மணி மாலையாக நமக்குத் தருகிறார்.

திருமகளை பாரதி எங்கெல்லாம் காணுகிறார் …

வீரர்தம் தோளிலும், உடல் வியர்த்திட உழைப்பவர் தொழிலிலும்

வெற்றிகொள் படையிலும்  நற்றவ  நடையிலும் நல்ல 

நாவலர் தேமொழித் தொடரிலும் 

விளங்கும் திருமகளிடம் கருணை நல்ஓளி வேண்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
உலகளவில் செல்வந்தர்களாக உயர்ந்து அந்நிலையை தக்கவைத்துக் கொள்ளும் 4 பிரபலங்கள்! சாத்தியமானது எப்படி?
Subramania Bharati

ஊனங்கள் போக்கிடுவீர்னல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்

நல்ல தீரமும் தெளிவும் இங்கருள் புரிவீர்

என்று கலைமகளிடமும் வேண்டுகிறார்.

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் ..

காளியைப் பணியும் அதே கவி,

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னன்சிறு கதைகள் பேசி,

நரை கூடக் கிழப்பருவமெய்தி, 

கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல 

வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..

என்று காளியிடமே கேட்கவும் தவறவில்லை.

இந்த தன்மானமிக்க ஞானக் கவி.

காலன் வந்தாலும் காலால் எட்டி உதைப்பேன் என்று அச்சமில்லாமல் சொன்னவர்.

வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே தமக்கு வேலை 

என்று முருகப் பெருமானிடம் பணிகிறார்.

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேன்மை பெறவும்

பராசக்தியை வேண்டும் தன்னலமில்லாக் கவி இந்த பாரதி.

இதையும் படியுங்கள்:
என்னது கருப்பு நிறத்தில் பாலா?
Subramania Bharati

கண்ணன் மேல் பாரதி கொண்ட பற்றுக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்..

கண்ணனைத் தன் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சத்குருவாக, விளையாட்டுப் பிள்ளையாக பல தோற்றங்களில் பாடி தன்னையே மறந்தது மட்டுமின்றி, தன்னைப் பெண்ணாக பாவித்து, கண்ணனைத் தன் காதலனாகவும் எண்ணிப் பரவசப்படுவது பக்தியின் உச்ச ஞானமன்றி வேறென்ன..?

கண்ணனைக் காதலனாக எண்ணி உருகும் பாடல்கள் எத்தனை எத்தனை படைத்திருக்கிறார் பாரதி... அவையெல்லாம் சிற்றின்பமல்ல, இறைவனுடன் இரண்டறக் கலக்கத் துடிக்கும் ஒரு ஆன்ம ஒளிப் பேரின்பத்தின் வெளிப்பாடு. ஜீவாத்மா, பரமாத்மா இணைப்பின் துடிப்பு..

எத்தனை தெய்வங்களைத் தேடினும் அறிவே அதன் மூலம், உள்ளொளி என்ற ஞானத்தின் மூலம் அவரை அடைய முடியும் என்பதில் பாரதிக்கு எத்தனை உறுதி.

எங்குமுளான் யாவும் வல்லான் யாவும் அறிவான் எனவே

தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே

காவித்துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா 

பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே

இதன் மூலம் ஒவ்வொரு மதமும் காட்டும் பாதை இறைவனை நோக்கியே என்று  சொல்லும் பாரதி, மத நல்லிணக்கத்தை எத்தனையோ பாடல்களில் வலியுறுத்தும் பாரதி, ஒரு ஞானி அல்லவா?

இயற்கையை நேசிக்கும் அந்த இளகிய கவி உள்ளம், காலைப் பொழுது, அந்திப் பொழுது, நிலா, வான்மீன், காற்று, புயல், கடல், மழை... எதைப் பாடவில்லை..?

குயிலின் குரல் கேட்டு தனிக் காவியமே படைத்தவரல்லவா?

இதையும் படியுங்கள்:
பெண்கள் மட்டுமே வேலை செய்யும் வங்கி (KMUCB) பற்றித் தெரியுமா?
Subramania Bharati

மகாபாரதம் என்ற மாபெரும் காவியத்தைக் கடைந்து, 'பாஞ்சாலி சபதம்' என்ற பகுதிக் காவியத்தைப் படைத்த ஒரு காவிய நாயகர் பாரதி. பெண்மையைப் போற்றும் உன்னத படைப்பு அது. இன்று நேர்மறைச் சிந்தனை என்று நாம் பேசுவதை அன்றே சொல்லிவிட்டாரே பாரதி...

சென்றதினி மீளாது  மூடரே நீர்

எப்போதும் சென்றதையே சிந்திதனை செய்து

கொன்றழிக்கும் குழியில் வீழ்ந்து குமையாதீர்..

எந்தக் காலத்துக்கும் ஏற்ற வரிகளல்லவா ?

புதிய ஆத்திச் சூடி என்ற தலைப்பில் பாரதியின் அந்த 110 சொற்றொடர்கள்… 

ஒவ்வொன்றும் உயர்வைத் தருபவை. ஒரு மகா ஞானியின் வடிவில் அந்த இறை சக்தியே சொல்லியிருக்கும் வாழ்வியல் வேதம் அவை.

அவற்றை எல்லோரும் எக்காலமும் உணர்ந்து அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டால் மேன்மை பெற வாழலாம்.

பாரதி, உலகத்தோரின் நன்மையில் பெரும் பற்று வைத்த தன்னலமில்லா மாபெரும் ஞானி என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com