
உறுப்பு தானம் ஒரு உன்னதமான செயல். இதை செய்வதன் மூலம் பலருக்கு உயிர் கொடுக்கலாம். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், குடல், தோல் திசுக்கள் போன்ற உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும்போதே தானம் செய்யலாம். மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து இதயம், நுரையீரல், தோல், எலும்பு, கரு விழி போன்றவற்றையும் பெறமுடியும். சில உறுப்புகளை பதப்படுத்தியும் சில உறுப்புகளை உடனடியாகவும் பொருத்தலாம்.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மக்கள் விபத்துக்களால் இறக்கின்றனர். அவர்களின் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு உயிர் கொடுக்கின்றன.
உறுப்புகளை வாங்குவது அல்லது விற்பது சட்டவிரோதமானது. தானம் செய்யப்பட்ட உறுப்புக்கு ஈடாக பணம் அல்லது வேறு ஏதேனும் உறுதியான பரிசை வழங்குவது அல்லது பெறுவது குற்றமாகும். நீங்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, உங்கள் உயிரைக் காப்பாற்றுவதே முதன்மையானது. ஒரு மருத்துவரால் மரணம் அறிவிக்கப்பட்ட பின்னரே உறுப்பு தானம் பரிசீலிக்கப்படும்.
மூளைச்சாவு அடைந்து இறந்திருக்கிறார்கள் என்ற சான்றிதழானது உரிய நிபுணர்களால் வழங்கப்பட்டிருந்தால் இவர்களிடமிருந்து எல்லா விதமான உறுப்புகளையும் பெற்று கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையமானது, விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்றபின், மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்புகள் பெறப்பட்டு வந்தது.
மேலும், கடந்த 2023-ம் ஆண்டும் செப்டம்பர் 23-ந்தேதி உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, உடல் உறுப்பு தானம் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு 178 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திாியிலிருந்து 28 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உறுப்புகள், தகுதியானர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
எனவே வர்த்தக நோக்குக்காக இல்லாமல் மனித நேய அடிப்படையிலும் பரஸ்பர அன்பின் அடிப்படையிலும் உறுப்புதானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இதனால் இறப்பிக்கு பிறகும் வாழ முடியும் என்ற நிலையை உறுப்புதானம் வாயிலாக அடைய முடியும்.
மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம்தேதி உலக உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.