
“திருமணம் ஆயிரம் காலத்து பயிர்” என்பது பழமொழி இந்திய சமூகத்தில் திருமணம் என்பது வெறும் தனிப்பட்ட விஷயமல்ல. திருமணம் என்பது இரண்டு குடும்பங்களை ஒன்றிணைக்கிறது. திருமணங்கள் மூலம் உறவுகள் வலுப்படுத்தப்பட்டு சமூக ஒருமைப்பாடு பேணப்படுகிறது.
சமூக வளர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ப மணமுறைகளில் பல மாறுதல்கள் தோன்றின மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. சமகால நடைமுறைகள் தனிப்பட்ட தேர்வு மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக அமைந்துள்ளன
தற்காலத்தில் பெரும்பாலும் இணையத்தின் வாயிலாக திருமணங்கள் முடிவு செய்யப்படுகின்றன. மிகவும் ஆடம்பரமாக நிறைய செலவுகள் செய்து புதுமையான முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் விரைவிலேயே கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்தில் முடிகிறது. தேவையற்ற சிறிய பிரச்னைகள், நீயா நானா என்ற ஈகோ போன்ற அர்த்தமற்ற காரணங்களால் பெறப்படும் விவாகரத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவை.
நமது குடும்ப அமைப்பு மிக அழகானது. குழந்தைகளுக்கான நல்ல பாதுகாப்பான சூழல் இதைவிட வேறு எங்கும் கிடையாது. அதை தக்க வைத்துக் கொள்வது அவசியம். என்பதை உணர்ந்து கொண்டாலே பெரும்பாலான விவாகரத்துகள் தவிர்க்கப்படும் சமீபத்திய ஆய்வுகள் ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வெளிப்படுத்துகின்றன: விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் பிற்கால வாழ்க்கையில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 61 % அதிகமாக எதிர்கொள்கின்றனர்.
பெற்றோரின் விவாகரத்து, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாகக் கூறப்படுகிறது. விவாகரத்து பெரும்பாலும் குழந்தைகளிடையே நாள்பட்ட மன அழுத்தத்தை தூண்டுகிறது. அன்றாட வழக்கத்தில் குறிப்பிடத்தக்க இடையூறை அனுபவிக்கும்போது உடலின் மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது எனவும் கூறப்படுகிறது., பெற்றோரின் விவாகரத்தை எதிர்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பை அனுபவிக்கிறார்கள்.
மன அழுத்தம் நாள்பட்டதாக மாறும்போது உடல் வீக்கம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிற நீண்டகால சுகாதார பிரச்னைகளைத் தூண்டுகிறது. அவை இதயநோய்கள், பக்கவாதம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் வரக் காரணமாகலாம். கார்டிசோலின் அளவு அதிகரிக்கும்போது அது இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். தொடர்ந்த மனஅழுத்தம் குழந்தைகளின் தூக்க முறையை பாதிக்கலாம். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். .
ஆய்வுகளின்படி, விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் கவலை, மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையின்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இது உணர்ச்சி மன உளைச்சல் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்னைகள் இரண்டிற்கும் பங்களிக்கிறது. உதாரணமாக மனச்சோர்வு, இதயநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நாட்பட்ட நோய்களுடன் நேரடியாக தொடர்புடையது.
சிறந்த மருத்துவ நிபுணர்களிடம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகள் குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை ஆரோக்கியமான வழியில் வழிநடத்த உதவும் என்பது மருத்துவர்கள் கருத்து.. சரியான சிகிச்சை, மன அழுத்தம் தொடர்பான நோய்களுக்கு காரணமான நீண்டகால உணர்ச்சி அடக்குமுறையைத் தடுக்கிறது.
கடினமான சூழ்நிலைகளை சிறப்பாக நிர்வகிக்கவும் அவர்களால் முடியும். குழந்தைகள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளில் எதிர்கொண்ட கஷ்டங்கள் இருந்தபோதிலும் ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ முறையான சிகிச்சை முறைகளால் சாத்தியமாகலாம்
பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஆதரவு தந்து அவர்கள் தங்களால் நேசிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்தவேண்டும். தியானம் போன்றவை மன அழுத்தத்தின் விளைவுகளைத் தணிக்க உதவும். பெற்றோர்கள் விவாகரத்து செய்ய தீர்மானிக்கும் முன் குழந்தைகளின் உடல் நலனை கருத்தில் கொண்ட பின் முடிவெடுப்பது நல்லது.