
மந்திரம் போல மீண்டும் மீண்டும் மகன் ரகுவரனிடம் அதையே சொல்லிக் கொண்டிருந்தாள் சகுந்தலா. “நான் சொன்னதெல்லாம் மனசுல பதிச்சுக்கோ. கவனமா இரு..! அங்கே போனதும் மாமனார் குடும்பத்தோட ஐக்கியம் ஆகிடாதே. விரைப்பாவே இரு. உன் கெத்தை விட்டுக் கொடுக்காதே. மாப்பிள்ளை.. மாப்பிள்ளைன்னு ரெண்டு பேரும் கவனிப்புலேயே கண்கலங்க வெச்சுடுவாங்க, அதுல உருகிடாதே. எச்சரிக்கையா இரு!”
தலையாட்டினான் ரகுவரன்.
மகனைக் கவலையுடன் பார்த்தாள். இப்படி விவரமில்லாமல் இருக்கிறானே. வெளுத்ததெல்லாம் பால் என நம்பினால் இந்த உலகில் எப்படிப் பிழைப்பது?
“பாரு, உன் கல்யாணத்துக்கு அவங்க செய்யறதா சொன்ன சீருல பாதி அப்படியே மிச்சம் இருக்கு! அதைப் பத்தி இதுவரைக்கும் அவங்க மூச்சே விடலை. என்ன ஒரு நம்பிக்கைத் துரோகம், அயோக்கியத்தனம் பாரு. நாமென்ன ஏமாந்த இளிச்சவாயங்களா..”
அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. இங்கே திரும்ப வரும் போது அந்த சீர்வரிசை பாக்கி அஞ்சு பவுன் நகையும், ரொக்கம் அம்பதாயிரமும் உன் கையில் இருக்கனும். நீ அவங்க வீட்டு விசேசத்துல கலந்துக்கறது கூட ரெண்டாம் பட்சம் தான்.”
“புரியுதும்மா..” தலையாட்டினான்.
அறைக்குள்ளேயிருந்து அவன் மனைவி சினேகா வெளியே வந்தாள். கையில் பேக். தூக்கலான அலங்காரம்.
இந்தப் பெண்கள் அம்மா வீட்டுக்கு கிளம்புவதாக இருந்தால் தனி அவதாரம் எடுத்து விடுகிறார்கள். மருமகளைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் சகுந்தலா. நானெல்லாம் அந்தக் காலத்தில் என் மாமியாரிடம்…
“அத்தை நாங்க கிளம்பட்டுமா...”
சினேகாவின் கையிலிருந்த பேகை வாங்கி வண்டியில் மாட்டினான் ரகு. கணவனின் தோளைத் தொட்டுக் கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்தாள் சினேகா.
“ம், நகரலாங்க...”
அம்மாவைப் பார்த்து தலையசைத்தான் ரகுவரன். ’சொன்னதெல்லாம் ஞாபகம்’ என மகனிடம் கண் ஜாடை காட்டினாள் சகுந்தலா.
வண்டியை பஸ் ஸ்டாண்டு நோக்கித் திருப்பினான் ரகுவரன்.
ரகுவுக்கும், சினேகாவுக்கும் திருமணமாகி ஆறேழு மாதங்கள் ஆகின்றன. பெரியவர்கள் பார்த்து செய்துவைத்த திருமணம்.
தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலையில் இருக்கிறான் ரகு. மாதம் பிறந்தால் கை நிறைய சம்பளம். சொந்த வீடு. கடன் இல்லை.
அதிக அலைச்சல் இல்லாமல் சரியான வயதில் அமைந்த திருமணம்.
மகனின் திருமணம் குறித்து ஏதேதோ கனவில் இருந்தாள் சகுந்தலா. ஆனால்...
பெண் பார்க்கப் போன இடத்தில் சினேகாவின் அழகில் மயங்கிவிட்டான் ரகுவரன்! ‘கல்யாணம் செய்து கொண்டால் இவளைத் தான்’ என்று அம்மாவிடம் அடம்பிடித்தான். மகனின் தொடர் வற்புறுத்தல் தாங்காது, வசதி வாய்ப்புகள் அதிகம் இல்லாத சினேகாவின் குடும்பத்தினரோடு அரைகுறை மனதுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டாள் சகுந்தலா.
சினேகாவின் அப்பா, தன் வீட்டின் முன்பகுதியில் ஹாலை ஒழித்து மெஸ் மாதிரி ஒன்றை நடத்தி வந்தார். ஓரளவு வருமானம் வந்தது. சினேகா தான் மூத்தவள். அவளுக்கு அடுத்து ஒரு தங்கை. கல்லூரி படிக்கும் ஒரு தம்பி கடைசி.
அவளது திருமணத்தின் போது தருவதாக சொன்ன சீர்வரிசைகளில் ஐந்து பவுன் நகையும், ரொக்கம் ஐம்பதாயிரமும் மீதி விழுந்துவிட்டது. சொன்ன வாக்குறுதிபடி அவர்களால் அதை தர முடியவில்லை. பிறகு தருகிறோம் என்று சொன்னவர்கள் அப்படியே மறந்துவிட்டதாக காட்டிக் கொண்டு நாட்கள் கடத்தி வந்தார்கள்.
ஆனால் சகுந்தலாவைப் பற்றி அவர்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை! ஜாடைமாடையாக பலமுறை சகுந்தலா அந்த பழைய வாக்குறுதிகளை நினைவு படுத்திக் கொண்டே இருந்தாள். ‘சூழல் சரியில்லை, கொஞ்சம் பொறுத்துக்குங்க...’ என்று ரெடிமேட் பதில் மட்டுமே அவர்களிடமிருந்து வந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் தான் குலதெய்வ வழிபாடு என வீட்டில் வைத்து பூஜை செய்வதாகவும், அதில் மகளும், மருமகனும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் போனில் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்படி விசேசத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிற தன் மகனிடம் பழைய சீர் பாக்கிகளைப் பற்றி விசாரிக்க வற்புறுத்தியிருந்தாள் சகுந்தலா.
‘கேட்கமாலேயே இருந்தா கொடுக்கமாட்டாங்கடா. சபையில, செய்யறேன்னு சொல்லி பெருமை பீத்திக்கிட்டு தராம இப்படி ஏமாத்தலாமா. தர்ற எண்ணம் இருக்கா, இல்லையான்னு வெடுக்குனு பேசிடு. கல்யாணமாகி எத்தனை மாசமாகுது... மூச்சு விடறாங்களா அதைப் பத்தி... ம்! மனுசங்க எப்படி இருக்காங்க பாரு...’ என விதம்விதமாக பேசி மகனை உசுப்பேற்றி விட்டிருந்தாள்...
நான்கைந்து நாட்கள் கழிந்திருக்கும். மகன் ரகுவரனை போனில் அழைத்தாள் சகுந்தலா.
“என்னடா போன விசயம் என்னாச்சு..? இன்னும் கிளம்பலையா நீங்க..? செவ்வாயே வர்றேன்னீங்க... இன்னும் ஆளைக் காணலையே..!”
“அம்மா இங்கே விசேசம்லாம் நல்லபடியா முடிஞ்சுது. நீங்க கேட்கச் சொன்ன பழைய சீர் பார்க்கியைப் பத்திக் கேட்டேன். எதை எதையோ சொல்லி மழுப்பறாங்கம்மா. கேட்ட இடத்திலிருந்து பணம் புரட்ட முடியலையாம்.”
“பொய். அத்தனையும் பொய். எல்லாம் நடிப்பு! நமக்கு கொடுக்க மனசில்லை அவங்களுக்கு.” போனிலேயே கொதித்தாள் சகுந்தலா.
“அதானே. ‘எத்தனை நாள் இப்படிக் காத்திருக்கிறது... ஏமாத்தறீங்களா என்னை’ன்னு சத்தம் போட்டேன். கூடிய சீக்கிரம் ரெடி பண்ணித் தர்றேன்னு மாமனார் உருட்டறாரு...”
“ப்ச். அதே பழைய பாட்டு! நம்பாதே”
“நான் தெளிவா சொல்லிட்டேன்... நீங்க பணம் தந்தாத் தான் நானும், சினேகாவும் ஊருக்குக் கிளம்புவோம்! எத்தனை வாரமானாலும் சரி, மாசமானாலும் சரி அதுவரைக்கும் இங்கே தான் இருப்போம்ன்னு கண்டிசனா சொல்லிட்டேன்ம்மா. நீ கவலைப்படாதேம்மா, பணம் வாங்காம நான் ஊருக்குத் திரும்பி வரமாட்டேன்.”
”என்னது..?”
மகனின் குரலில் ஒலித்த உறுதியைக் கண்டு அதிர்ச்சியானாள் சகுந்தலா. அவன் சொல்வதைப் புரிந்து கொள்ளவே சில வினாடிகள் ஆனது. 'நாம் ஒன்று நினைத்தால் வேறொன்று நடக்கிறதே..! இவன் வேண்டுமென்றே சொல்கிறானா... இல்லை நிஜமாகவே இப்படி நடந்து கொள்கிறானா' எனத் தெரியாமல் குழம்ப ஆரம்பித்தாள்..!
”சரிம்மா, நான் போனை வைக்கிறேன், இங்கே எல்லோரும் சினிமாவுக்குக் கிளம்பிட்டு இருக்கோம். ராத்திரி ஃப்ரீயா பேசறேன்.”
அவன் சொல்ல சொல்ல மயங்கி விழும் அச்சத்தில் சுவரைப் பிடித்துக் கொண்டாள் சகுந்தலா.