
பரசுராமன் என்ற தன் பெயரை, பரசு… பரசு என்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஆக்கி விட்ட ஆதங்கம் பால்கார பரசுராமனுக்கு அதிகமாகவே உண்டு. 16 வயதினிலே சினிமாவில் கமலஹாசனிடம் ஶ்ரீ தேவி, ‘உன்னை எல்லாரும் பேரைச் சொல்லிக் கூப்பிடறாங்களா?’ என்று கேட்க, அவரோ ‘ம்! எவன் பேரைச் சொல்றான்?எல்லாரும் சப்பாணி… சப்பாணின்னுதான் கூப்பிடறாங்க' என்று பதில் சொல்ல, ஶ்ரீதேவியோ ‘இனிம அப்படி யாரு கூப்பிட்டாலும் சப்புன்னு அறைஞ்சிடு!’ என்று சொல்வார்! அதை அடிக்கடி நினைத்து, பரசு சிரித்துக் கொள்வதுண்டு! தன் மனைவி பவித்ராவே கூடக் கோபத்தில் சில சமயம் பரசு என்று கத்தும்போது அவன் சிரிப்பதா? வெறுப்பதா? என்று தெரியாமல் தவித்திருக்கிறான்! கோபம் அதிகமாகும்போது, தரையில் காலால் உதைத்து கோபத்தைத் தணித்துக் கொள்வது பரசுவின் பழக்கம்!
பால் விற்கும் தொழில் அவன் அப்பாவிடமிருந்து அவனுக்கு வந்தது! அவர் காலத்தில் காலையில் 4 மணிக்கே எழுந்து பால் கறந்து சைக்கிளில் எடுத்துச் சென்று விடுவார். பள்ளியில் படிக்கும்போதே அவனையும் அந்த அதி காலையிலேயே எழுப்பி விட்டு விடுவார், அவருக்கு உதவிட. நாளடைவில் பால்தான் அவனைக் கவர்ந்ததே தவிர படிப்பு பின் தங்கி விட்டது. அப்பாவின் அடிச் சுவட்டைப் பின் பற்றினான். என்ன? அவர் 10 மாடுகள்தான் வைத்திருந்தார். இவன் அதை 40 ஆக்கினான். அவர் சைக்கிளில் கேனைக் கட்டிக்கொண்டு சுற்றினார். இவன் மொபட், வேன் என்று வியாபாரத்தைப் பெருக்கி விட்டான்.
பரசுவுக்கு, சோறு போடும் விவசாயத்திற்கு அடுத்தபடியாகப் பால் வியாபாரந்தான் உயர்ந்தது என்ற எண்ணமுண்டு. ஏழை, எளியவர்கள் அதிகப் பணம் கொடுத்து மதியம் சாப்பிட முடியாதபோது, டீயுடன் பன்னையோ, வடையையோ மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் என்று எண்ணி, அவன் தனக்குள்ளாகவே திருப்திப் பட்டுக் கொள்வான். அந்த ஏழைகளுக்காகத்தான் தான் தொழில் நடத்துவதாகவே எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்வான்.
கடந்த வாரந்தான் அவருடைய இருபத்தைந்தாவது கல்யாண நாளை விமரிசையாகக் கொண்டாடினார் பரசுராமன். ஆமாம்! வசதி வாய்ப்புகளும் வயதும் அதிகப்பட்டு விட்ட அவரை அவன்… இவன் என்று அழைப்பது மரியாதை ஆகாதே. தன் மகனும் மகளும் நன்கு படிக்க வேண்டுமென்ற எண்ணத்திலும், தன்னைப் போலவே தன் மகன் பால் வழியில் போக வேண்டாம் என்று கருதியும் அவர்கள் இருவரையும் நகரத்தில் உள்ள விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைக்கிறார்.
கல்யாண நாளன்றுதான் லெச்சுமி மூன்றாவது ஈற்றுக் கன்றைப் போட்டது. லெச்சுமி வந்த பிறகுதான் அவர் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. லெச்சுமி என்று அவர் குரல் கொடுத்தாலே அது எங்கிருந்தாலும் எதிர்க்குரல் கொடுக்கும்! அவருக்கு ‘முதல் மரியாதை’யில் சிவாஜி எசைப் பாட்டு குறித்துப் பேசுவதுதான் ஞாபகத்திற்கு வரும். லெச்சுமியின் முதல் காளைக் கன்று அவரை ஜல்லிக் கட்டுக்கு அறிமுகப் படுத்தி வைத்தது. எவரிடமும் பிடி படாமல் அவர் புகழை ஊர் அறியச் செய்தது. அதனால்தான் அவர் தினமும் லெச்சுமியிடம் பால் கறப்பதை வழக்கமாக வைத்திருந்தார்!
மார்கழிக் குளிரில் அதிகாலையில் எழும்புவது அவருக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. உடம்பு முன்பு போல அவருக்கு இப்பொழுதெல்லாம் ஒத்துழைப்பதில்லை. தண்ணீரில் கை வைத்தாலே சில சமயம் சளி பிடித்துக்கொண்டு தொல்லை தருகிறது. வேனில் பாலை டவுனுக்கு அனுப்ப மட்டுமே ஆட்களை நியமித்திருந்தார். லெச்சுமியிடம் பால் கறப்பதையும், உள்ளூரில் பால் ஊற்றுவதையும் அவர்தான் செய்து கொண்டிருந்தார்!
அன்று பனி அதிமாகவே படர்ந்திருந்தது. சற்று தாமதமாகத்தான் எழுந்தார். அதுவும் லெச்சுமி கத்தி கூப்பாடு போட்டே அவரை எழுப்பி விட்டது. அவசரமாக எழும்பி பாத்ரூம் சென்றார். பவித்ரா என்றைக்கும் போல ஹீட்டர் போட்டிருப்பார் என்ற எண்ணத்தில் டேப்பைத் திறக்க, அது குளிர்ந்த நீரை வேகமாகப் பீய்ச்ச, திடீரென ஒரு கோபம் தலைக்கேறியது! ஏனெனில், ஹீட்டர் போடப்படவில்லை. ஏறிய கோபம் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பவித்ராவின் மீது திரும்ப, வேகமாக ஓடிப் போய் அவள் கையிலிருந்த கோல மாவை ஆவேசத்துடன் தட்டி விட்டார். எதிர்பாராத அந்தத் தாக்குதலில் அவள் கீழே விழ, பக்கத்தில் கிடந்த கல் தலையில் குத்தி ரத்தத்தை வரவழைத்து விட்டது! காரணத்தை அறிந்த அவள், ’மறந்துட்டேங்க!’ என்று பரிதாபமாக அழுதாள்!
பால் கேனுடன் லெச்சுமியை நெருங்கிக் கறக்க ஆரம்பித்தார்! ஒரு லிட்டர்தான் கறந்திருப்பார். லெச்சுமி பின்னங்காலால் விட்ட உதையில் கேன் கை நழுவிக் கீழே விழ, அந்தப் பாலும் பூமியில் ஓட, ’என்னவாயிற்று இன்று?’ என்று அவர் அதிர்ந்தார்.
லெச்சுமி இப்படிச் செய்ததே இல்லையே! கேனை எடுத்தபடி லெச்சுமியின் கால்களைப் பார்த்தார். கொத்தாகக் கொசுக்கள் அந்தப் பசுவின் கால்களைப் பதம் பார்க்க, அவற்றைத்தான் லெச்சுமி உதைத்து விரட்டியிருக்கிறது என்பதை உணர்ந்தார். இப்பொழுது லெச்சுமியும் அவரிடம் மன்னிப்புக் கேட்பதைப் போல் பார்த்தபடியே, அருகில் வந்து கறக்க ஏதுவாக நின்றது!
லெச்சுமி உதைக்க நினைத்தது தன்னையல்ல என்று தெரிய வந்தபோதே, தன் மனைவி மறந்ததிலும் எந்தத் தவறும் இல்லையே என்று மனது இடித்தது! தினம் சரியாக எழும்பும் தானே தாமதமாக எழும்ப, மனைவி மறந்ததில் மட்டும் குற்றம் கண்டு பிடித்தது எவ்வகையில் நியாயம் என்று உரக்கக் கேட்டது உள்மனது!
கறந்த பாலைப் பெரிய கேனில் ஊற்றி விட்டு நேராக மனைவிடம் சென்றவர், ’என்னை மன்னித்து விடு பவி!’ என்று மனைவியின் கைகளைப் பிடித்தபடி கெஞ்சினார்!