இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் சோகக் கதை பற்றி அறிவோமா?

ஆனந்திபாய் ஜோஷி
ஆனந்திபாய் ஜோஷி
Published on

உலகளவில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் பணியில் ஒன்றாக மருத்துவத் துறை உள்ளது. இங்கு பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலிய உதவியாளர்கள் உள்பட பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் முதல் பெண் மருத்துவராக ஆனந்திபாய் ஜோஷி உருவெடுத்த பின்னர், நாட்டின் பெண் கல்விக்கான முக்கியத்துவமும், மருத்துவத் துறையில் மகளிரின் பங்கும் அதிகரித்தது. அதற்கு அவர் ஊக்கமாக இருந்தார்.

ஆனந்திபாய் ஜோஷி:

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் 1865 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி யமுனா பிறந்தார். மிகவும் செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்ததால் சீரும் சிறப்புமாக வளர்ந்தார். அவருக்கு ஒன்பது வயதாகும் போதே கோபால்ராவ் என்ற ஒரு தபால் எழுத்தருக்கு மணமுடித்து வைத்தனர். அந்த காலகட்டத்தில் இது போன்ற திருமணங்கள் சமூகத்தில் இயல்பான ஒன்றாகவே கருதப்பட்டது. கோபால்ராவ், யமுனாவை ஆனந்தி என்று பெயர் மாற்றி கல்வி கற்க அனுப்பினார்.

அப்போதைய காலகட்டத்தில் கல்வி யாருக்கும் எட்டாக்கனியாக இருந்தது. அதிலும் பெண் கல்வி நிலை கேள்விக்குறியாக இருந்தது. ஆனந்திபாயின் கல்விக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கோபால்ராவ் அவரை மேலும் படிக்க ஊக்குவித்தார்.

அனந்திபாயின் லட்சியம்:

ஆனந்திபாய் தனது 14 வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனாலும் அக்காலத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் அவரது குழந்தையின் உயிரை பாதுகாக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் ஆனந்திபாய் பெருந்துயர் அடைந்தார். தனக்கு நேர்ந்ததை போல இனி ஒரு தாய்க்கும் நேரக் கூடாது என்று உறுதி கொண்டார். எதிர்கால இந்தியாவின் பெண்களின் ஆரோக்கியத்திற்காக பாடுபடவும், போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாமல், எந்த குழந்தையும் உயிரிழக்க கூடாது என்றும் தான் ஒரு மருத்துவராக மாற முடிவு செய்தார்.

இதையும் படியுங்கள்:
காலை நேரத்தில் இதெல்லாம் செய்யச்சொல்லி பிள்ளைகளை கட்டாயப்படுத்தாதீங்க பெற்றோரே!
ஆனந்திபாய் ஜோஷி

அதன் பின்னர் தனது இலட்சியத்திற்காக மருத்துவக் கல்வி பயில 1883 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். அங்கு பென்சில்வேனியாவில் உள்ள மகளிர் மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவக் கல்வியை தொடங்கினார். அப்போது அவருக்கு காசநோய் ஏற்பட்டு கடும் துன்பம் அடைந்தார். அந்தகாலக் கட்டத்தில் எந்த ஒரு இந்தியப் பெண்ணும் கடல் கடந்து படிப்பதற்காக அயல் நாட்டிற்கு செல்ல வில்லை. முதல் பெண்மணியாக அனந்திபாய் ஜோஷி தான் கடல் கடந்து சென்று படித்துள்ளார். அமெரிக்க பயணத்திற்கே தனது பெரும்பாலான பணத்தினை ஆனந்தி செலவு செய்திருந்தார். பிறகு ஆனந்தி படிப்பதற்காக தனது நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டார். அவரது கணவர் கோபால்ராவ் அவருக்கு உறுதுணையாக இருந்து படிக்க வைத்தார்.

1886 ஆம் ஆண்டு தனது 19 வயதில் ஆனந்திபாய் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றார். இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் (MD) பெற்ற பெண்மணி என்ற சிறப்பினை ஆனந்திபாய் பெற்றார். மேலும் நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற சாதனையும் படைத்தார். ஆனந்திபாயின் சாதனையை பிரிட்டிஷ் ராணி விக்டோரியா பாராட்டினார். இந்தியா திரும்பிய ஆனந்திபாய் கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள உள்ள ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையின் பெண்கள் பிரிவுக்குப் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றத் தொடங்கினார். இருப்பினும் ஆனந்திபாய் காசநோயால் பாதிக்கப்பட்டு 1887 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 தேதி தனது 22 வயதில் விண்ணுலகம் எய்தினார்.

ஆனந்திபாய் ஜோஷியின் கனவை நனவாக்க நாட்டில் உள்ள பெண் மருத்துவர்கள் பாடுபட்டு வருகிறார்கள். கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மருத்துவப் கல்லூரி மாணவர்களில் பெண்கள் 54.6% இருந்தனர். செவிலிய ஊழியர்களில் 80% பெண்கள் உள்ளனர்.

இவை அனைத்திற்கும் மூலக் காரணமாக ஆனந்திபாய் இருந்திருக்கிறார் என்பது பெருமிதத்துக்குரிய விஷயம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஸ்வீட் ஸிக்ஸ்டீன் ஸ்மார்ட் சிக்ஸ்ட்டி!
ஆனந்திபாய் ஜோஷி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com