
தற்போதைய காலகட்டத்தில் பிள்ளை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்றாகிவிட்டது. முன்புபோல கூட்டுக் குடும்ப அமைப்பு மாறி தனிக்குடும்பம், ஒற்றைப் பெற்றோர் என்ற அமைப்பு உருவாகிவிட்டது பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து பழக்க வளர்க்க வேண்டிய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். காலை நேரத்தில் சில விஷயங்களை செய்யச்சொல்லி பிள்ளைகளை கட்டாயப்படுத்தக்கூடாது.
1. சீக்கிரமாக எழுதல்;
குழந்தைகளை காலையில் சீக்கிரமாக எழுப்புவதைத் தவிர்க்கவேண்டும். இது குழந்தைகளுக்கு எரிச்சலூட்டும். காலை நேரத்திலேயே அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை தரும். மேலும் எழுப்பியதும், சட்டென்று அடுத்த நிமிடம் குழந்தைகள் படுக்கையை விட்டு உடனே எழுந்திருந்து அமரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. குழந்தைகள் தூக்கக் கலக்கம் விலகி மெதுவாகத்தான் எழுந்து அமர்வார்கள். அதுவரை பொறுமையாக அருகில் அமர்ந்து அவர்களை எழுப்பவது அவசியம்.
2. காலை வேலைகளை விரைவாக செய்யச்சொல்லி வற்புறுத்துதல்;.
குழந்தைகள் என்பவை இயந்திரம் அல்ல. ஸ்விட்ச் போட்டவுடன் இயங்குவதற்கு. அவர்கள் விழித்தெழுந்ததும் மெல்ல மெல்லத்தான் ஒவ்வொன்றாக செய்வார்கள். கண் விழித்ததும் ‘பாத்ரூமுக்கு ஓடு, பிரஷ் பண்ணு, டாய்லெட் போ, குளி” என்று ஒவ்வொன்றையும் அவசர அவசரமாக செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. இதனால் குழந்தைகள் மனதில் பதட்டம் உருவாகி அவர்கள் காலைப் பொழுதை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் அவர்களிடம் மிக மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
3. அவசரமாக உண்ணச் சொல்லுதல்;
குழந்தைகளை அதிகமாக சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. காலை நேரத்தில் இட்லி தோசை போன்றவற்றை விழுங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் அவர்கள் உண்ணக்கூடிய வகையில் மிகவும் எளிதான காலை உணவு இருக்க வேண்டும். பழக்கலவைகள், ஜூஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
4. பிடிக்காத செயல்கள்;
காலை நேரத்தில் குழந்தைகளை உடற்பயிற்சி செய், வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள் என்று அதிகாரமாக சொல்வதைத் தவிர்க்கவேண்டும். அவர்களாக உதவ முன்வந்தால் ஏற்றுக்கொண்டு செய்யச் சொல்லலாம். கட்டாயப்படுத்தக்கூடாது.
5. வேண்டாமே காலை நேர ஹோம் வொர்க்;
முதல் நாள் இரவே தூங்குவதற்கு முன்பு பள்ளியில் கொடுத்த ஹோம் ஒர்க்கை அவர்களை முடிக்க செய்யவேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் அவர்கள் பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் இருப்பார்கள். அப்போது அவர்களை ஹோம் ஒர்க் செய்யசொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது அவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். இதனால்தான் நிறைய சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை விரும்புவதில்லை.
குழந்தைகளை காலை நேரத்தில் திறமையாக கையாளும் விதம்;
தினமும் எட்டு மணி நேரம் தூங்குமாறு குழந்தையின் படுக்கை நேரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் காலையில் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக எழுந்திருப்பார்கள். எந்த விஷயத்தையும் அவசரமாக செய்யச் சொல்லி அவர்களுக்கு பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்கக் கூடாது. மிக மென்மையாக எடுத்துச் சொல்லவேண்டும். சாதாரணமான வேகத்தில் செயல்கள் இருந்தால் போதும்.
சில பெற்றோர் பிள்ளைகள் ஹோம் ஒர்க் செய்யாமல் இருந்தால் அல்லது புத்தகத்தை கிழித்துவிட்டால் அவர்களை முதுகில் அறைவது, திட்டுவது போன்றவற்றை செய்வார்கள். பள்ளிக்குக் கிளம்பும்போது இது போன்ற செயல்களால் அவர்கள் நாள் முழுவதும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். எனவே காலை நேரத்தை அவர்களுக்கு ரம்யமாகவும் சுவாரசியமான நாளாகவும் மாற்றவேண்டும்.
ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளைத் தரவேண்டும். பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களை பேசக்கூடாது. அப்படி இருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளை வெறுக்க தொடங்கி விடுவார்கள்.