
இன்றைய நாட்களில் நம் எல்லோருக்குமே முதுமையினால் உண்டாகக் கூடிய தோற்றத்தை ஏற்றுகொள்வதற்கு தயக்கமாகவே இருக்கிறது. அடுத்தவர்களின் முன்னிலையில் நான் எப்போதும் இளமையாகவே இருக்கிறேன் என்று பெருமையோடு காண்பித்துகொள்ள வேண்டும். இதுதான் இன்றைய நிலைமை. ஆணகளைவிட பெண்களிடம்தான் இந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது.
முதுமை என்பது இயற்கை. முதுமை அடையும்போது சருமத்தில் மாற்றம் ஏற்படத்தான் செய்யும். தலையில் உள்ள முடியும் நரைக்கத்தான் செய்யும். நாம் பிறக்கும் போது நம்முடைய சருமம் மிருதுவாக இருந்தது. வருடங்கள் செல்ல செல்ல நம்முடைய உடல் நடையிலும் குரலிலும் சிந்தப்பதிலும் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆகவே மாற்றம் என்பது நிரந்தரமானது.
வயதானாலும் வெளித்தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்? என்னதான் நீங்கள் தலைக்கு சாயம் பூசிக் கொண்டாலும் பத்து நாளைக்கு பிறகு அந்த சாயமானது, நீலச் சாயம் வெளுத்து போச்சு டும்... டும்..ராஜா வேஷம் கலைந்து போச்சு டும்..டும்..டும் என்ற கதையாகிவிடும்.
வீட்டில் நாம் ஒரு பொருளை வைத்திருக்கிறோம், வருடங்கள் செல்ல செல்ல அந்த பொருளின் மேல் நிறம் எல்லாம் போய், சரியாக செயல்படாமலும் இருக்கும். நாம் என்ன செய்வோம் பெயின்ட்டை முடிந்தால் மேற்புறத்தில் அடிப்போம். அந்த பொருள் repair ஆகி விட்டால் கடையில் கொடுத்து எந்த பகுதி repair ஆகி இருக்கோ அதை சரி செய்தோ அல்லது அந்த பகுதியை மாற்றித்தரும்படியோ கடைக்காரரிடம் கேட்போம் இல்லையா...
அதைப் போலத்தானே நம்முடைய உடலும். நமக்கு உடலில் எதாவது பிரச்சினைகள் வந்தால் அதை சரி செய்து கொள்ளலாம். ஆனால் இப்போதோ பெண்கள் 35 வயதை தாண்டிய உடனேயே anti aging என்ற பெயரில் ஊசிகளையும் மருந்துகளையும் உட் கொள்கிறார்கள். அவ்வாறு உட்கொள்வதால் நம் உறுப்புகள் இயற்கையாக செயல்படாமல் செயற்கை முறையில் செயல்பட ஆரம்பிக்கும். பிறகு விளைவு விபரீதமாக இருக்கும். அடுத்தவர்கள் நம்மை என்ன சொன்னாலும் சொல்லட்டுமே...வயதை ஏன் மறைக்க வேண்டும்.
உங்களுக்கு வேண்டுமானால் இயற்கையான முறையில் முகத்தையும் உடலையும் பராமரிக்கலாமே. மஞ்சள், வெள்ளரி, பால், வேப்பிலை போன்றவற்றை உபயோகப்படுத்தலாமே. அதுவும் இல்லை என்றால் வெளிப்புற கீரிமையோ எண்ணெயையோ உபயோகப்படுத்தலாமே.. எதற்காக தேவை இல்லாமல் முதுமையின் தோற்றத்தை தவிர்க்க மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
ஒரு மரத்தை எடுத்துகொள்ளுங்கள். நாம் கன்றுகளை நடுகிறோம். அது வளர்ந்து வளர்ந்து பெரிய மரமாகி விடுகிறது. அங்கங்கே அந்த மரத்தில் உருண்டை வடிவத்தில் தடிப்புகளும் contour என்று சொல்லக்கூடிய முட்டை வடிவ கோடுகளும் இருக்கும். உங்களுக்குத் தெரியுமா?? முட்டை வடிவத்தில் வரிசையாக ஒன்றுக்கு மேல் ஒன்று இருக்கும் contiur line ஐ எண்ணித்தான் அந்த மரத்தின் வயதைக் கூறுவார்கள். வருடம் அதிகமானால் மரத்தில் வரும் தடிப்பை நிறுத்த முடியுமா?? அந்த தடிப்பை நீக்குகிறேன் என்று மரத்தை வெட்டினால் மரம் செத்து தானே போகும்.
அடுத்தவர்களுக்காக அழகாக இருக்க முயற்சிக்கிறேன் என்று பல விதமான முறையை கையாண்டீர்களேயானால், கடைசியாக அந்த அடுத்தவர்களே உங்களை நிரந்தரமாக பார்க்க இயலாமல் போய்விடும்.
உண்மையான அழகு என்பது எது தெரியுமா? வயதானாலும் நம்முடைய அகமானது சுத்தமாக இருக்க வேண்டும். நம்முடைய உண்மையான அழகு அதில்தான் இருக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
ஆகவே அகத்தை அதாவது உங்களது மனத்தை சுத்தமாகவும் களங்கமில்லாமலும் வைத்திருந்தாலே முகத்தில் அழகு தானாகவே வரும். நீங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு உங்களுடைய செயல்பாட்டின் மூலமாக நிரூபியுங்கள். மனதை ஆரோக்கியமாக வைத்திருங்கள். வேண்டாத மற்றும் டாக்டரின் ஆலோசனை இல்லாத மருந்துகளை எல்லாம் எடுத்துக்கொண்டு உங்கள் உயிரை நீங்களே மாய்த்து கொள்ளாதீர்கள்.