தாய்க்கு தாயான ஒரு தனயன்!

18 வயதிலேயே ஒரு தாய்க்குத் தாயாக மாறி நாராயணன் செய்த பணி, அவனை ஒரு சாதாரண மனிதனாக அன்றி ஒரு 'நிஜ ஹீரோவாக' (Real-life Hero) உயர்த்திக் காட்டுகிறது. (உண்மை சம்பவத்தின் அடிப்படையில்...)
Son taking care of his bedridden mother
Son taking care of his bedridden motherAI generated
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

நம் பெற்றோர்களை அவர்கள் ஆரோக்கியமாகவும், தங்களை தாங்களே பணரீதியாகவும், உடல் ரீதியாகவும் கவனித்துக் கொள்ளும் வலுவுடன் இருக்கும் வரை நேசிப்பது எளிது. அவர்கள் மேல் இருக்கும் அன்பும் பக்தியும், வயது அல்லது நீண்ட கால நோயின் காரணமாக அவர்கள் படுக்கையில் விழும் போது மட்டுமே சோதிக்கப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

என் வாழ்நாளில் இந்த சோதனையில் இருந்து வெற்றியோடு வெளியே வந்த ஒருவரை பற்றி சொல்கிறேன். நாராயணன் (பெயர் மாற்றியுள்ளேன்) என் கல்லூரி தோழன். வயது பதினெட்டு. நாங்கள் B.Com படித்து கொண்டிருந்தோம். அவனது தாயாருக்கு மூளை புற்றுநோயின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் மூளை மற்றும் இதய சம்பந்தமான அறுவை சிகிச்சைகளில் தொண்ணூறு சதவீதம் தோல்வி தான்.

பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தும் அவர் உடல்நிலை முன்னேறவில்லை. அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி நாராயணின் தந்தையிடம் மருத்துவர்கள் கூறினர்.

இதையும் படியுங்கள்:
தாய் தந்தையைக் கைவிடுதல்: மகாபாவம் - உணர்வதே நல்ல வாரிசுகளுக்கு அழகு!
Son taking care of his bedridden mother

அவர்கள் அவரை மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த போது அவரால் உடலிலுள்ள ஒரு தசையை கூட அசைக்க முடியவில்லை. நாராயணின் தந்தை திருமணத்திற்கு சமையல் செய்பவர். அவருக்கு ஒத்தாசையாக நாராயணனும் உடன் செல்வான். அவர் தந்தை சமைக்கும் போது காய்கறிகளை நறுக்கி கொடுப்பது அவன் வேலை.

நோய்வாய்ப்பட்ட தாய்மார்கள் என்று வரும்போது, பொதுவாக அவர்களைப் பார்த்துக் கொள்வது மகள்கள்தான். ஆனால் நாராயணின் இரண்டு திருமணமான சகோதரிகள் வட இந்தியாவில் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வந்ததால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. நாராயணின் தந்தையோ ‘இவள் ஆபரேஷன் டேபிளில் இறந்திருக்க கூடாதா’ என்று புலம்புவதோடு சரி.

ஆனால் என் நண்பர் நாராயணன், நோய்வாய்ப்பட்ட தனது தாயாரின் பராமரிப்பு பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டான். அவன் ஒரு பதினெட்டு வயது சிறுவன் என்பதை இங்கே மறந்துவிடக் கூடாது. அவன் தனது தாயின் 24/7 செவிலியரானான். தினம்தோறும், பொறுமையாகவும், மெதுவாகவும் திரவ உணவை அவருக்கு ஊட்டிவிடுவான். ஒருநாள் விட்டு ஒருநாள் அவருக்கு டவல் பாத் கொடுப்பான். அவரால் பாத்ரூமுக்கு போவதென்பது முடியாது என்பதால் அவன் அவரை முகம் கோணாமல் சுத்தம் செய்வான்.

சுருக்கமாகச் சொன்னால், நாராயணன் தன் தாயினை ஒரு குழந்தையைப் போல நடத்தினான். இதையெல்லாம் கடமை உணர்ச்சியுடன் செய்தான்.

நோய்வாய்ப்பட்ட அவனது தாயாருக்கு அவன் உணவு ஊட்டும் போது நான் பார்த்து வியந்திருக்கிறேன், சுமார் ஒரு வருடம் படுத்த படுக்கையாக இருந்த பிறகுதான் நாராயணின் தாயார் இறந்தார். நீண்டகாலமாக படுக்கையில் இருந்து ஒருவர் இறந்தால், அவரது நெருங்கிய உறவினர்கள் துக்கத்தை விட அதிக நிம்மதியை உணர்வது ஒரு உண்மை. ஆனால் நாராயணன் அப்படி இல்லை.

அம்மா போன போது ஒரு குழந்தையைப் போல அழுதான். நாராயண் தன் தாய்க்கு மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும், பொறுமையுடனும் அவளது இறுதிவரை சேவையாற்றினான். வகுப்புகளுக்கு சரியாக போகாததாலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாததாலும் தேர்வில் தோல்வி அடைந்தான்.

இதையும் படியுங்கள்:
தாய் தந்தை கூட மகன் …மகள் வீட்டுக்கு வரும்போது விருந்தாளிகள் ஆகி விடுகிறார்கள்
Son taking care of his bedridden mother

ஆனால் அதே நேரத்தில் அவன் வாழ்க்கையின் கடினமான பரீட்சை ஒன்றில் நூற்றுக்கு நூறு மார்க்குகள் வாங்கி தேர்ச்சி பெற்றான் என்பது தான் எனது கணிப்பு. அம்மா, அப்பாக்களை கடைசிவரை பார்த்துக்கொள்ளுதல் என்ற பரீட்சையில் நம்மில் பலர் தோற்றுப் போய் விடுகிறோம்.

ஒன்று மட்டும் உண்மை. நான் என் வாழ்நாளில் சந்தித்த ஒரு சில நிஜ -வாழ்க்கை ஹீரோக்களில் நாராயணனும் ஒருவன். எங்கிருந்தாலும் அவனுக்கு கல்கி மூலம் ஒரு சல்யூட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com