
நாகரீகம் என்பது தூய்மையையும் அடிப்படையாகக் கொண்டது! ’சுத்தமே சுகந்தரும்!’ என்ற பழமொழி நம்மூரில் அத்துபடி. ஆனாலும், நமது கிராம மற்றும் நகர்ப்புறங்கள் இப்பொழுதுதான் கொஞ்சங்கொஞ்சமாக தூய்மையாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது. மேலை நாடுகளின் தூய்மைக்கு இயற்கையும் ஒரு முக்கியக் காரணம்.
நமது நாடு வெப்ப மண்டலப் பிரதேசம் என்பதால், அதிகக் காற்றும் அதனோடு சேர்ந்து பறக்கும் தூசும், நமது தூய்மைக்குச் சவாலாக அமைந்து விடுகின்றன. எனவே, நாம் நாட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகமான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே அக்டோபர் 2, 2014 முதல் தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) தொடங்கிச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திறந்த வெளியைக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் முறை மாறி வருகிறது. இருந்தாலும் நூறு சதவீத வெற்றியைச் சாதிக்க இன்னும் சில காலம் ஆகுமென்றே தோன்றுகிறது. ஏனெனில் இதன் வெற்றி என்பது, அரசு மற்றும் மக்களின் ஆதரவோடு மட்டுமே சாதிக்கக் கூடியது.
போதுமான கழிப்பிடங்களைப் பொருத்தமான இடங்களில் பற்றாக்குறை இல்லாத நீர் வசதியுடன் ஏற்படுத்திப் பராமரிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அவ்வாறு ஏற்படுத்தித் தரப்படும் கழிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றைத் தக்க முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது, பயன்படுத்தும் ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.
அதைப் போலவே, மக்கள் கூடும் இடங்களில் போதுமான குப்பைத் தொட்டிகளை, அவர்கள் எளிதில் அணுகும் இடங்களில் அமைக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் இவற்றையெல்லாம் முறையாகச் செய்து விடுவதால் மக்களும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நமது நாட்டில் சில தேவையற்ற குளறுபடிகள் இடையில் புகுத்தப்படுவதால், சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றன. உதாரணமாக, ஏற்கெனவே மது பாட்டில்கள், ஊறுகாய் பாட்டில்கள் போன்ற கண்ணாடியினால் உருவாக்கப்பட்டவற்றை, வாசலில் வருகின்ற சிறு வியாபாரிகளும் வாங்கிச் செல்வர். பழையவற்றை எடுக்கும் கடைகளிலும் வாங்கிக் கொள்வர். அதைப் போலவே பால் கவர்கள், சிமெண்ட் மூட்டைகளின் கவர்கள் போன்றவற்றையும் வாங்கிக் கொள்வர்.
அதனால் அவற்றை யாரும் சாலையோரங்களில் வீசிச் செல்வதில்லை. உடைந்த பாட்டில்களால் கால் நடைகள் மற்றும் மனிதர்களின் பாதங்களும் காயப்படுவதில்லை. அவற்றை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதை நிறுத்திய பிறகு, பார்க் ஓரங்களிலும், சாலை மற்றும் கால்வாய் ஓரங்களிலும் அவற்றைப் போட மக்கள் ஆரம்பித்ததால், பிரச்னைகள் முளைக்கின்றன.
’சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது’ என்பார்களே அதைப்போல, அரசுகளின் சில நடவடிக்கைகளால் மக்களுக்குத் தீங்கே நேர்கிறது. அவ்வாறு முடிவுகள் எடுக்கும் போது மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்ய வேண்டுமல்லவா?
இங்கு நாங்கள் இருக்கும் சூரிக்கின் புறநகர்ப் பகுதியில், காலி பாட்டில்களைப் போடுவதற்கென்றே சில வசதிகளைச் செய்து வைத்துள்ளார்கள். பயன்படுத்திய கண்ணாடி பாட்டில்களையும், தகர டின்களையும் வண்ண வாரியாகப் பிரித்துப் போட தனியான தொட்டிகளை நிறுவியுள்ளார்கள். ப்ரவுன், கிரீன், ஒயிட் பாட்டில்களுக்கென்று தனியாகவும், இறுதியாகவுள்ள சிவப்பு நிறத் தொட்டியில் தகர டின்களையும் போட வேண்டும்.
அதைப்போலவே, பெரிய கடைகளில் உபயோகித்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், எண்ணை பாட்டில்கள் ஆகியவற்றுக்கென்று தனித் தொட்டிகள் வைத்துள்ளார்கள். அங்கேயே உபயோகித்த பாட்டரி செல்களைப் போடவும் பெட்டிகள் உண்டு. இது போன்ற வசதிகள் இருப்பதால் பொதுச் சுகாதாரம் சீரிய முறையில் பாதுகாக்கப்படுகிறது.
இவையெல்லாமே மிக எளிமையான முறைகளே! நமது நாட்டிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதே. அரசுகளும், மால்கள் நடத்துபவர்களும் மனது வைத்தால் போதும்! மக்களும் ஒத்துழைப்பார்கள்! ஏனெனில் நம்மில் பெரும்பாலானோர் சிலவற்றை எப்படி, எங்கு டிஸ்போஸ் செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்களே! அவர்களுக்கு வழி காட்டினால் போதும்! பிடித்துக் கொள்வார்கள்!