
இந்தியாவில் முகவரிகளைக் கண்டறிவது, குறிப்பாக கிராமப்புறங்கள் அல்லது புதிதாக உருவாகும் பகுதிகளில், ஒரு சவாலான காரியமாக இருந்து வருகிறது. சரியாக லேண்ட்மார்க் சொல்லி விளக்குவதிலும், குழப்பமில்லாமல் முகவரியைக் கண்டுபிடிப்பதிலும் உள்ள சிக்கல்கள், தபால் சேவை முதல் அவசர கால உதவிகள் வரை பலவற்றில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, இந்திய அரசு ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் டிஜிபின் (DIGIPIN) என்னும் டிஜிட்டல் முகவரி அமைப்பு. இது இந்திய முகவரி முறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, துல்லியமான மற்றும் எளிதான இருப்பிட அடையாளத்தை உருவாக்க வழிவகுக்கிறது.
இந்த டிஜிபின் அமைப்பு, நகரங்கள், கிராமங்கள், ஏன் கடல் பகுதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது. இதன் மூலம், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள், கொரியர் சேவைகள், மற்றும் தபால் அலுவலகங்கள் ஆகியவை பொருட்களை நேரடியாக பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க முடியும். இனி “அந்த மரத்தடியில், இந்த வீட்டுக்கு அடுத்து” என்று லேண்ட்மார்க் சொல்லி சிரமப்படத் தேவையில்லை. மேலும், காவல்துறை, தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ் போன்ற அவசர மருத்துவ சேவைகளுக்கும் இந்த டிஜிபின் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிபின் அமைப்பின் சிறப்பம்சங்கள்:
இந்த டிஜிபின் என்பது 10 இலக்க எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஒரு தனித்துவமான குறியீடாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஆகியவை இணைந்து இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. வீடுகள், அலுவலகங்கள் என 4x4 மீட்டர் பரப்பளவிலான ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனிப்பட்ட டிஜிபின் உருவாக்க முடியும். இந்த அமைப்பு தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது, மாறாக இருப்பிடத்தை மட்டுமே அடையாளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு Open Source தொழில்நுட்பமாக இருந்தாலும், பயனர்களின் தனியுரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் டிஜிபின் எண்ணை போன் மூலம் எப்படி பெறுவது?
உங்கள் சொந்த டிஜிபின் எண்ணைத் தெரிந்து கொள்வது மிகவும் எளிது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எந்த ஒரு இணைய உலாவியையும் திறந்து, https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற இணைய முகவரிக்குச் செல்ல வேண்டும். இந்தச் செயல்முறையை மேற்கொள்ளும் போது, உங்கள் போனில் Location Service ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இணையப் பக்கம் திறந்ததும், இருப்பிடத்தை அணுக அனுமதிக்கும் "Allow" என்ற பாப்-அப் தோன்றும். அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக "I Consent" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சில நொடிகளில், உங்கள் திரையில் உங்கள் இருப்பிடத்திற்கான தனிப்பட்ட டிஜிபின் எண் காட்டப்படும்.
இந்த டிஜிபின் எண், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 6 இலக்க பின்கோடுகளுக்கு மாற்றாக இருக்காது. மாறாக, இது ஏற்கனவே உள்ள அமைப்பை மேம்படுத்தி, இருப்பிடத்தை மேலும் துல்லியமாக அடையாளம் காண உதவும் ஒரு கூடுதல் கருவியாகும். குறிப்பாக, தெளிவான முகவரிகள் இல்லாத கிராமப்புறங்கள், வனப்பகுதிகள், மற்றும் புதிதாக வளர்ச்சியடையும் புறநகர்ப் பகுதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த புதிய டிஜிட்டல் முகவரி முறையைப் பற்றி அறிந்து கொண்டு, உங்கள் டிஜிபின் குறியீட்டை இப்போதே தெரிந்து கொள்வது எதிர்காலப் பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.