

மனதுக்குப் பிடித்தமான மாம்பழ சீசன் மள மளவென்று ஓடிக்கொண்டிருக்கிறது. அனைவரும் மாம்பழத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அதன் தோலை குப்பையில் எறிந்திருப்பீர்கள். இனி அந்த தவறை செய்யாதீர்கள். மாம்பழத் தோல் உங்களுக்கு ஐந்து வழிகளில் பிரமாதமாக உபயோகிக்க பயன்படும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1. இயற்கை முறையில் ஃபேஸ் மாஸ்க்: மாம்பழத் தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், வைட்டமின் சியும் உள்ளன. மாம்பழத் தோலை மிக்ஸியில் அரைத்து மிருதுவான பேஸ்ட் ஆக்கி அதனுடன் சிறிது தேன் அல்லது யோகர்ட் சேர்த்து முகத்தில் மாஸ்க்காகப் போட்டு 10-15 நிமிடம் வைத்திருங்கள். பிறகு கழுவி விட்டால், டல்லான சருமம் பளபளப்புப் பெறும்.
2. சரும பொலிவிற்கு உதவும் மாம்பழத் தோல்: மாம்பழத் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதைப் பவுடராக்கி அதனுடன் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்துக் கலந்து, கலவையை சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து மெதுவாகப் பிரித்தெடுங்கள்.
அது மிருதுவான உரிப்பானாக (Gentle Exfoliating Scrub) செயல் புரிந்து இறந்த செல்களை அழகாக பிரித்தெடுத்து சருமம் பளபளப்பும் புத்துணர்ச்சியும் பெற உதவி புரியும்.
3. இயற்கை உரமான மாம்பழத் தோல்: சத்துக்கள் அடங்கிய மாம்பழத் தோல்களை இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்தும் கொள்கலனில் (Compost Bin) சேர்த்து விட்டால், அவை குறிப்பிட்ட கால அளவில் நன்கு மக்கி, மேலும் பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உரமாக உருவெடுக்கும். இந்த உரத்தை வீட்டுத் தோட்டத்து மண்ணுடன் கலந்து விட்டால், அது மண்ணின் தரம் உயரவும், செடிகள் செழித்து வளரவும் உதவி புரியும்.
4. தொட்டிச் செடிகளுக்கு நேரடி உரம்: மாம்பழத் தோல்களை தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். பின் தோல்களைப் பிழிந்து நீரைப் பிரித்தெடுக்கவும். அந்த நீரில் தோலிலிருந்து பிரிந்து வந்த கனிமச் சத்துக்கள் கலந்திருக்கும். அதை அப்படியே உங்கள் மாடித் தோட்டத்து தொட்டிச் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும்.
5. இயற்கை முறையில் பூச்சிகளை விரட்டும் மாம்பழத் தோல்: மாம்பழத் தோல்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வீட்டுத் தோட்டத்து செடிகளின் அடியில் போட்டு வைத்தால் அவை செடிகளுக்கு தீங்கு விளைவிக்க வரும் பூச்சிகளிலிருந்து செடிகளைப் பாதுகாக்கும். மேலும் சில நாட்களில் அவை மக்கிப் போய் உரமாக மாறிவிடும். சுற்றுச் சூழல் சமநிலைக்கு உதவும் இந்த வழியை முயன்று பார்ப்பதில் தவறேதுமில்லை.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் செலவில்லாமல் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதோடு, வீட்டிலேயே நச்சுத்தன்மையற்ற இயற்கை உரத்தை தயாரித்து உங்கள் செடிகளை செழிப்பாக வளர்க்கும் சூழலியல் ஆர்வலராக மாறுவீர்கள்.