

ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டது. பள்ளிக்கூட குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்தவர்கள் வரை யாரைக் கேட்டாலும் ஸ்ட்ரெஸ் ஆ இருக்கு என்று சொல்வதைக் கேட்கிறோம். சரி, இதை எப்படிக் கையாள்வது? இந்த ஸ்ட்ரெசில் இருந்து மீள வழியே இல்லையா?
இருக்கிறதே. எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு என்ற ஒன்று உண்டல்லவா? மாறிவரும் வாழ்க்கை முறையால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது உண்மை என்றாலும், அதிலிருந்து மீண்டுவர, வெளியேறி சகஜமாக இருக்க சில சின்னச்சின்ன வழிகளைக் கடைபிடித்தாலே போதும்.
ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் ஏற்பட பலவிதக் காரணங்கள் இருக்கலாம். பள்ளி, கல்லூரி படிப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், வேலைக்குச் செல்பவர்களுக்கு வரும் மன அழுத்தம் வேறுவிதமாக இருக்கிறது. வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளின் மன அழுத்தத்தை (Women stress) எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
பெண்களுக்கு, குறிப்பாக திருமணம் முடிந்து குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான பிரச்னைகள் தலைதூக்கி மன அழுத்தம் தரும். ஆனாலும் நாற்பத்தைந்து வயதுக்குமேல் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் சார்ந்த சிக்கல்கள் வேறுவிதமானவை.
நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பெண்களின் மாதச் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. மெனோபாசை நோக்கி நகரும் அந்த சமயத்தில் மிக அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் பெண்கள். எப்போதுமில்லாத ஒரு தனிமை உணர்வு அவ்வப்போது தோன்றி அழுத்தும். காரணமே இல்லாமல் அழுகை வரும். அடிக்கடி கோபம் வரும். "என்ன வாழ்க்கை இது?, நமக்கென்று யாருமே இல்லையே!" என்ற வெறுமை, சுயபச்சாதாபம் தோன்றி அச்சுறுத்தும்.
அநேகமாக, இந்த காலகட்டத்தில் அவர்களின் குழந்தைகள் பதின்பருவ வயதின் கடைசி காலக்கட்டத்திலோ அல்லது அதைக் கடந்தோ இருப்பார்கள். எனவே, அவர்களின் சிந்தனை வேறுபடும். நட்பு வட்டம் பெருகும். வெளி உலகில் அதிக நேரம் செலவிடுவார்கள். வீட்டில் அம்மாவுடன் செலவிடும் நேரம் குறையும். இத்தனை வருடங்கள் தன் கைக்குள் இருந்தவர்கள் இப்போது விலகிச் செல்வதுபோல் ஒரு உணர்வு பெண்களுக்கு வரும். இனிமேல் தன் குழந்தைகளுக்கு தன் உதவியும், அன்பும் தேவையில்லையோ, நம் குழந்தைகள் நம்மைவிட்டு விலகிப் போய்விடுவார்களோ என்ற பாதுகாப்பின்மையும், பய உணர்வும் மேலோங்கி அழுத்தம் தரும்.
அதுமட்டுமல்ல, கணவரின் வேலையில் பொறுப்புகள் அதிகரித்து, அவரும் மனைவியுடன் செலவிடும் நேரம் குறையும். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், கணவன்-மனைவி அன்யோன்னியம் மற்றும் தனிமையில் செலவிடும் நேரமும் குறையும். இதனால் தன் வாழ்க்கைத் துணையும் தன்னை நிராகரிப்பதாக, கண்டுக் கொள்ளாததாக கவலை தொற்றிக்கொள்ளும்.
அடிக்கடி வந்துபோன அல்லது பேசி, தொடர்பில் இருந்த உடன்பிறப்புகள், உறவுகள், நட்புகள் எல்லாருமே தன்னிடமிருந்து விலகி நிற்பதுபோலவும், தன்னை ஒதுக்கிவிட்டது போலவும் தோன்றும். இது எல்லாம் சேர்ந்து தனிமை உணர்வை அதிகமாக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டுச் சூழலில் இருந்து வெளியே வந்து, உடன் பணிபுரிபவர்களுடன் பழகி, வேலையில் கவனம் செலுத்தி என இந்தச் சிக்கலை ஓரளவுக்குக் கடந்துவர முயல்வார்கள். ஆனால், குடும்பப் பொறுப்பை மட்டுமே சுமந்து, வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு இதை யாரிடமும் எளிதில் பகிரவும் தயக்கமாக இருக்கும். தனிமையில் அழுவார்கள்.
சில நேரங்களில் இந்த அழுத்தம் கண்ணீராக வெளிவருவது போல், சில சமயம் கோபமாகவும் வெடிக்கும். விவரம் அறியும் வயதை எட்டிய பிள்ளைகள், முதுமையின் வாசலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கணவன் இவர்களால் இந்தக் காரணமில்லாக் கோபத்தைப் புரிந்துகொள்ள முடியாது. பதில் பேசாமல் நகர்ந்து விடுவார்கள். இது இன்னும் அழுத்தத்தைத் தந்து தனிமை உணர்வை அதிகப்படுத்தும்.
இதிலிருந்து மீள என்ன செய்யலாம். மருத்துவ ஆலோசனைகள் அவசியம் என்றாலும், நாமாக செய்யக் கூடியது நிறைய உள்ளன.
1. நமக்கான நேரத்தை ஒதுக்குதல் (ME TIME)
இந்த நேரத்தில் நமக்குப் பிடித்த புத்தகம் வாசிப்பது, பாடல் கேட்பது, பாடுவது, ஓவியம் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது, ஆன்மீகத்தில் ஈடுபாடு, யோகா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இப்படி ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவது மனதை லேசாக்கும். தினமும் இதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். இத்தனை வருடங்களில் குடும்பப் பொறுப்புகளில் உழன்று நமக்குப் பிடித்ததைச் செய்ய நேரமில்லாமல், வாய்ப்பில்லாமல் மறந்தே போயிருக்கலாம். அவற்றை இப்போது மீட்டெடுத்து உயிர் கொடுக்கலாம்.
2. நட்பு வட்டத்தைப் புதுப்பித்தல்
பள்ளி, கல்லூரி நட்புகளைத் தேடிக் கண்டறிந்து, அவர்களைச் சந்தித்து மகிழலாம். ஒத்த வயதுடையவர்கள் என்பதால் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவர்களுக்கும் இருக்கும். அவர்களுடன் இதுகுறித்து பேசினால் தெளிவு கிடைக்கும். இது நமக்கு மட்டும் ஏற்பட்டுள்ள சிக்கல் கிடையாது, அனைவரும் எதிர்கொள்ளும் சவால் என்ற புரிதல் தேவையற்ற பயத்தை நீக்கும்.
3. குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுதல்
பதின்பருவத்தைக் கடந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக நம் நிலையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வந்திருக்கும். வாழ்க்கைத் துணையும் பக்கபலமாக இருப்பார். அவர்களிடம் நம் உடலில் நிகழும் மாற்றங்களையும், அதனால் மனதளவில் ஏற்படும் போராட்டங்களையும் பொறுமையாக எடுத்துச் சொன்னால் புரிந்துகொண்டு ஆறுதலாக இருப்பார்கள்.
4. பழைய தேவையற்ற விஷயங்களை ஒதுக்குதல்
குடும்பத்தில் அல்லது உறவுகளுக்குள் எப்போதோ நடந்த சண்டை, எதிர்பாராத தோல்வி, இழப்பு, வார்த்தைகள் தந்த வலி போன்றவற்றை மீண்டும் மீண்டும் மனதில் அசைபோட்டு வலியை அதிகரிக்க வேண்டாம். ஆறிக் கொண்டிருக்கும் புண்ணைக் கிளறி ஆழமாக்காமல் இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.
இப்படி சின்னச்சின்ன மாற்றங்களை நம்முள் கொண்டு வந்தால் மன அழுத்தத்தைத் துடைத்துப் போட்டு நிம்மதியாக இருக்கலாம். கடினமான இந்த காலகட்டத்தைப் பக்குவமோடு கடந்துவிட்டால் நம் மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். குடும்பத்திலும் அமைதி நிலவும். முயற்சி செஞ்சு பார்க்கறீங்களா தோழிகளே...
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)