எச்சரிக்கை: பளபளக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நம்பி வாங்காதீர்கள்...!

Sweet Potato
Sweet Potato
Published on

குளிர்காலம் வந்தாலே தெருவோரக் கடைகளிலும், சந்தைகளிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனை களைகட்டத் தொடங்கிவிடும். இனிப்புச் சுவை நிரம்பிய இந்த கிழங்கு வகையைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது வழக்கம். குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக அவித்த கிழங்கைக் கொடுக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. 

நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த உணவுப் பொருள், தற்போது கலப்படத்தின் பிடியில் சிக்கியுள்ளது என்பது வேதனையான செய்தியாகும். சந்தையில் விற்கப்படும் சில கிழங்குகள் இயற்கையானவை அல்ல, அவை செயற்கை சாயங்களால் அலங்கரிக்கப்பட்ட போலிகள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆபத்து! 

பொதுவாகக் கடைகளுக்குச் செல்லும்போது, காய்கறிகள் பளபளப்பாகவும், நல்ல நிறத்துடனும் இருந்தால் மட்டுமே நாம் அதைத் தேர்ந்தெடுப்போம். நமது இந்த மனநிலையை வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கையாக விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு லேசான நிறத்துடனும், மேலே மண் ஒட்டியவாறும், சற்று கரடுமுரடான தோற்றத்துடனும் தான் இருக்கும். 

ஆனால் பழைய கிழங்கைப் புதியது போலக் காட்டவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் சில வியாபாரிகள் அதன் மீது அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ரசாயனச் சாயத்தைப் பூசுகிறார்கள். இந்தச் செயற்கை நிறங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உடலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடியவை.

உடல்நல பாதிப்புகள்!

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைப்படி, இது போன்ற சாயம் பூசப்பட்ட கிழங்குகளை உண்பது கடுமையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும். தோலின் மீது பூசப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள், கிழங்கை வேகவைக்கும்போது உள்ளே இறங்க வாய்ப்புள்ளது. 

இது வயிற்று வலி, செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகளை உடனடியாக ஏற்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இது ஒவ்வாமையை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

இதையும் படியுங்கள்:
கோடையில் சரும அரிப்புகளைத் தடுக்க 10 எளிய வழிகள்!
Sweet Potato

கண்டறியும் எளிய சோதனைகள்!

நாம் வாங்கியது நல்ல கிழங்கு தானா என்பதை உறுதி செய்ய ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே சில எளிய வழிகளில் அதைக் கண்டறியலாம். ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் நீங்கள் வாங்கிய கிழங்கைப் போட்டுச் சிறிது நேரம் ஊற வையுங்கள். சிறிது நேரத்தில் தண்ணீர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமாக மாறினால், அந்தக் கிழங்கில் சாயம் பூசப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இயற்கையான கிழங்காக இருந்தால் தண்ணீரின் நிறம் மாறாது.

சில நேரங்களில் பச்சையாக இருக்கும்போது கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வேகவைக்கும்போது கவனிக்கலாம். கிழங்கு வேகும் நீர் வழக்கத்திற்கு மாறாகக் கருமையாகவோ அல்லது நிறம் மாறியோ காணப்பட்டால், அதில் ரசாயனக் கலப்பு உள்ளது என்று அர்த்தம். மேலும் சாப்பிடும்போது கிழங்கின் சுவை இயல்பான இனிப்பு இல்லாமல், லேசான கசப்புத் தன்மையுடனோ அல்லது தொண்டையில் எரிச்சலை ஊட்டும் வகையிலோ இருந்தால், அதைத் தொடர்ந்து சாப்பிடாமல் குப்பையில் வீசிவிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
'புதுமைப்பெண்' போல் இனி 'தமிழ் புதல்வன்' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Sweet Potato

இனி கடைக்குச் செல்லும்போது அதிக நிறமுள்ள, பளபளப்பான கிழங்குகளைத் தேடி வாங்காதீர்கள். பார்ப்பதற்குச் சற்று அழுக்காகவும், மண் ஒட்டியவாறும், வெளிர் நிறத்தில் இருக்கும் கிழங்குகளே பெரும்பாலும் இயற்கையானவை. வெளிப்புறத் தோற்றத்தை விட உட்புற ஆரோக்கியமே முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com