
இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில்களைப் போலவே அறிவியல் துறையும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே உள்ளது. ஒரு இந்திய விஞ்ஞானியின் பெயரைக் கேட்டால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சீனிவாச ராமானுஜர் அல்லது ஏபிஜே அப்துல் கலாம் மட்டுமே சட்டென்று நினைவுக்கு கொண்டு வர முடியும். இந்தியப் பெண் விஞ்ஞானியின் பெயரை பெரும்பாலும் யாரும் சொல்வதில்லை. அறிவியல் துறையில் பெண்களின் பங்கு அதிகம் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் உண்மை அப்படியில்லை. பல பெண்கள் அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர். அவற்றில் சிலரைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
1) அண்ணா மணி Anna Mani (1918-2001):
சிவி ராமனுடன் பணிபுரிந்த ஒரே பெண் விஞ்ஞானி இவர். வளிமண்டல இயற்பியல் மற்றும் கருவியியல் துறையில் தனது பணிக்காக நன்கு அறியப்பட்டவர். சிறப்பு ஒலி நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்பரப்பிலும் மேல் காற்றிலும் கதிர்வீச்சு, ஓசோன் மற்றும் வளிமண்டல மின்சாரம் பற்றிய ஆய்வுக்கு பங்களித்தவர். உலகின் மிக முக்கியமான வானிலை விஞ்ஞானிகளில் ஒருவராகவும், சுற்றுச்சூழலை புரிந்து கொள்ள உதவும் கருவிகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றியவர். 1948 இல் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் சேர்ந்த அவர் டெல்லியில் உள்ள ஆய்வகங்களின் துணை இயக்குனர் ஜெனரலாக ஓய்வு பெற்றார்.
2) ராஜேஸ்வரி சட்டர்ஜி (Rajeshwari Chatterjee):
இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி ராஜேஸ்வரி சட்டர்ஜி நுண்ணலை மற்றும் உணர் பொறியியலில் முன்னோடியாக இருந்தவர். அவரது விருதுகளில் UK ன் மின் மற்றும் வானொலி பொறியியல் நிறுவனத்தின் சிறந்த ஆய்வறிக்கைக்கான மவுண்ட் பேட்டன் பரிசு, பொறியாளர்கள் நிறுவனத்தின் சிறந்த ஆராய்ச்சி ஆய்வறிக்கைக்கான JC போஸ் நினைவு பரிசு ஆகியவை அடங்கும். IISc ல் முதல் பெண் ஆசிரிய உறுப்பினரான இவர் 1982ல் பேராசிரியராக ஓய்வு பெற்றார். மைக்ரோவேவ் பொறியியல் மற்றும் ஆண்டெனா பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.
3) அசிமா சாட்டர்ஜி (Asima Chatterjee):
இந்தியாவின் மிகவும் பிரபலமான பெண் வேதியியலாளர்களில் ஒருவராகவும், பல பெண்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்தார். இந்திய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர். கல்கத்தா பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர். பத்ம பூஷன் விருது பெற்றவர். இவர் ஏராளமான விருதுகளை வென்றவர்.
யு.ஜி.சி. யின் சி.வி. ராமன் விருது, பி.சி. ராய் விருது மற்றும் எஸ்.எஸ்.பட்நாகர் விருது என பல விருதுகளைப் பெற்றவர். அறிவியல் ஆராய்ச்சியை மேற்பார்வையிடும் முன்னணி நிறுவனமான இந்திய அறிவியல் காங்கிரஸின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கரிம வேதியியல் மற்றும் தாவர மருத்துவத் துறையில், குறிப்பாக (வின்கா) ஆல்கலாய்டுகள், டெர்பெனாய்டுகள் மற்றும் கூமரின்கள் போன்ற துறைகளில் தனது பணிக்காக அறியப்பட்டவர்.
4) கிருத்திகா சுப்பிரமணியன்:
வளிமண்டல இயற்பியல் மற்றும் கருவிகள் துறையில் பணி புரிந்தவர். ராமாயணத்தின் வளிமண்டல ஆய்வு தொடர்பான பணிகளுக்காக அறியப்பட்டவர்.
5) அதிதி சென் தே (Aditi Sen De):
இந்தியாவின் பிரபல குவாண்டம் இயற்பியல் விஞ்ஞானியான அதிதி சென் தே, குவாண்டம் தகவல் மற்றும் கணக்கீடு, குவாண்டம் கிரிப்டோகிராஃபி போன்ற துறைகளில் முன்னோடி ஆராய்ச்சி செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இயற்பியல் அறிவியலில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசைப் பெற்ற முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர். இவர் தற்போது பிரயாக்ராஜ் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். குவாண்டம் தகவல் மற்றும் தகவல் தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து விருது பெற்ற விஞ்ஞானி இவர்.
6) ஈ.கே.ஜானகி அம்மாள் (1897-1984):
தாவரவியலாளரான இவர் சைட்டோ ஜெனெடிக்ஸ் மற்றும் தாவர இனப்பெருக்கம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை செய்து, பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை இனப்பெருக்கம் செய்தார். இவர் தாவரங்களின் குரோமோசோம்களைப் பற்றிய முக்கியமான ஆய்வு நூலான குரோமோசோம் அட்லஸ் ஆப் பிளான்ட்ஸ் (Chromosome Atlas of Plants) என்ற நூலை சிரில் டீன் டார்லிங்டனுடன் இணைந்து எழுதியுள்ளார்.
கரும்பு வளர்ப்பில் இவரது பணிக்காகவும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் விஞ்ஞான ஆராய்ச்சியில் பங்களித்ததற்காகவும் நினைவு கூறப்படுகிறார். இந்திய அறிவியல் அகாடமியின் நிறுவனர் உறுப்பினர். பத்மஸ்ரீ விருதை வென்றவர். மரபியல், பரிணாமம், தாவர புவியியல் மற்றும் இன தாவரவியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்த புகழ்பெற்ற தாவரவியலாளர் மற்றும் தாவர உயிரியல் நிபுணர் இவர்.
7) டெசி தாமஸ் (Tessy Thomas):
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் டிஆர்டிஓ (DRDO) வின் ஏவுகணைத் திட்டத்தின் முதல் பெண் இயக்குனர். அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர். நாட்டின் ஏவுகணை திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானியான இவர் இந்தியாவின் 'ஏவுகணைப் பெண்'(Missile Woman)என அழைக்கப்படுகிறார்.
இவர் அக்னி-III, அக்னி-IV மற்றும் அக்னி-V போன்ற ஏவுகணைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். ஏவுகணை திட்டப்பணி இயக்குனர் மற்றும் ஏரோநாட்டிகல் அமைப்புகளுக்கான இயக்குனர் ஜெனரல் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த ஏவுகணை திட்டங்களில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்.
8) சந்திரிமா சாகா(Chandrima Saha):
இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி இவர். இவர் செல் உயிரியலில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் காலா அசாரை ஏற்படுத்தும் 'லீஷ்மேனியா' ஒட்டுண்ணி பற்றி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். 80க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் மேற்கு வங்காளத்தின் முதல் பெண்கள் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவராகவும், அகில இந்திய வானொலியின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்தார்.
9) அனுராதா டி.கே:
இந்திய விண்வெளித்துறையின் அறிவியலாளர். 1982ல் விண்வெளி நிறுவனத்தில் இணைந்த இஸ்ரோவின் மூத்த பெண் விஞ்ஞானியான இவர் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய முதல் பெண்ணும் ஆவார். 2011 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பியதும், 2012 செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-10 தலைமையேற்று அனுப்பியவர். திட்ட இயக்குனராக ஜிசாட்-9, ஜிசாட்-17 மற்றும் ஜிசாட்-18 தொடர்பு செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தியவர்.
1982ல் இஸ்ரோவில் இணைந்து 38 ஆண்டுகள் பணியாற்றியவர். விண்வெளித் துறையில் ஒரு மூத்த விஞ்ஞானியாகவும், பல பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறார்.
இந்திய பெண்கள் விஞ்ஞானிகள் சங்கம் (IWSA):
இந்திய பெண் விஞ்ஞானிகள் சங்கம் என்பது 1973 ல் உருவாக்கப்பட்ட, இந்திய பெண் விஞ்ஞானிகள் பணிபுரியும் ஒரு தன்னார்வ, அரசு சாரா, லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம். இதில் கணினி பயிற்சி மையம், சுகாதார மையம், அறிவியல் நூலகம் போன்ற வசதிகள் உள்ளன. இது பெண்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) கல்வியை மேம்படுத்துவதோடு, சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபடுகிறது.