
“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது..
இதில் அர்த்தம் உள்ளது.”
கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் வரிகளை நாம் அனைவருமே ரசித்திருப்போம். ஆனால் இது உண்மையிலேயே நடந்ததாகப் புராண நிகழ்வொன்று தெரிவிக்கிறது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் நாகம், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனைப் பார்த்து, “கருடா சௌக்கியமா?” என்று கேட்டது.
“யாரும் அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியமாகத்தான் இருப்பார்கள்,” என்று கருடன் பதில் சொன்னது.
எல்லாம் வல்ல இறைவனான சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் வரைதான் நாகத்தை கருடன் தீண்டாமல் இருக்கும். அதே நாகம் கீழே இறங்கி வந்தால் கருடனால் தாக்கப்படும். இந்த உள்ளர்த்தத்தோடுதான் கருடன் இத்தகைய பதிலைச் சொன்னது.
நாகம் அதோடு பேச்சை நிறுத்தியிருக்கலாம். ஆனால் என்ன நேரமோ, கருடனை அவமதிக்கும் விதமாகப் பேசியது.
“உன் அன்னை வினதை ஒரு காலத்தில் என் அன்னை கத்ருவிடம் அடிமையாக இருந்தாள்,” என்று கேலி பேசியது நாகம். (கத்ரு சூழ்ச்சியால் நயவஞ்சகமாக வினதையை தன் அடிமையாக வைத்திருந்தாள்)
நாகத்தின் இந்தப் பேச்சால் வெகுண்ட சிவபெருமான், “என்னிடமிருந்து விலகி பூமியில் விழுவாயாக,” என்று சபித்தார். பதறிய நாகம் சாப நிவர்த்தி வேண்டி சிவனிடம் கெஞ்சியது. “ககோளபுரி சென்று தவம் செய்,” என்று அருளினார் ஈசன்.
அதன்படி ககோளபுரி (இப்போது திருக்கோளக்குடி) வந்து தவம் செய்கிறது சர்ப்பம். ஒரு நாள் அருகில் இருந்த தேன் சுனையிலிருந்து தவளைகளின் அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்த நாகம் கவலையடைந்தது. அந்தச் சுனையில் இருந்த தவளைகளை, பறவைகள் கொத்தி ரணமாக்கிக் கொண்டிருந்தன. இது தினமும் தொடர்ந்தது.
வேதனையுடன் சிவபெருமானிடம் இது குறித்து முறையிட்டுப் பிரார்த்தித்தது நாகம். “இன்று முதல் இந்தச் சுனையில் தவளைகள் வாழாது,” என்று ஈசன் அருளினார்.
அப்போதிலிருந்து இன்று வரை இந்தச் சுனையில் தவளைகள் வாழ்வதில்லை. மீன்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால் இந்தச் சுனைக்கு 'தவளை படா சுனை' என்ற பெயர் ஏற்பட்டது.
சரி, இந்தச் சுனைக்கு 'தேன் சுனை' என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? அதையும் தெரிந்து கொள்ளலாம்.
ககோளபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யத் தீர்மானித்த அகஸ்தியரும், அவரின் சிஷ்யரான புலஸ்தியரும், அபிஷேகம் செய்ய கங்கையிலிருந்து நீர் எடுத்து வர முடிவு செய்தனர். சிஷ்யர் வான் வழியே சென்று கங்கை நீர் எடுத்து வரக் கிளம்பினார். அவர் வரவிற்காக பூஜை செய்யாமல் காத்திருந்தார் அகஸ்தியர்.
புலஸ்தியரின் வழியில் எதிர்ப்பட்ட சப்த கன்னியர் அவரை வம்புக்கிழுத்தனர். ஆனால் புலஸ்தியருக்கு, நேரமாகிறதே என்ற கவலை தொற்றிக் கொண்டது.
“பூஜைக்கு நேரமாகிறது, குரு காத்திருப்பார்,” என்று புலஸ்தியர் கலங்க, “இன்றைய பூஜைக்குத் தடங்கல் ஏற்படுமோ,” என்று அகஸ்தியரும் கலங்கித் தவித்தார்.
பக்தர்கள் கலங்கினால் இறைவன் தாங்குவாரா? இறைவனும் கலங்கி கண்ணீர் விட்டார். அவரின் கண்ணீர் விழுந்த இடத்தில் வற்றாத நீரூற்று பெருகியது. அங்கு ஒரு பெரிய சுனை உருவாகியது.
சப்த கன்னியர் தங்கள் தவறை உணர்ந்து நடுங்கினர். தவறுக்குப் பரிகாரம் செய்ய விழைந்தனர்.
“எனக்கு தேன் அபிஷேகம் மிகவும் விருப்பமானது. என் விழி நீர் விழுந்த இடத்து ஊற்றுக்கு மேலே நீங்கள் ஏழு பேரும் தேன்கூடு கட்டி, சுனையில் தேனைச் சொரிந்து கொண்டிருங்கள்,” என்று அருளினார் ஈசன்.
அதன்படி, சிவபெருமானின் விழி நீர் விழுந்து தோன்றிய வற்றாத சுனைக்கு மேலே உள்ள பாறையில் பெரிய பெரிய தேனடைகள் தோன்றின.
இப்போதும் இங்கே தேனடைகள் உள்ளன. தேனீக்கள் சுற்றுகின்றன. சுனை நீர் தேன் சுவையுடன் உள்ளது. யாரும் இந்தத் தேனீக்களைத் தொந்தரவு செய்வதில்லை. இந்தச் சுனை நீரால்தான் ககோளபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். சிவபெருமான் சன்னதி அருகே சப்த கன்னியரும் அருள்புரிகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே திருக்கோளக்குடியில் இந்தக் கோவில் உள்ளது. இது ஒரு மலைக்கோவில். பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று நிலைகளில் உள்ளது. பூமியில் பொய்யாமொழீஸ்வரர் கோவிலும், அந்தரத்தில் சிவதர்மபுரீஸ்வரர் கோவிலும், சொர்க்கத்தில் ககோளபுரீஸ்வரர் கோவிலும் உள்ளன.
ககோளபுரீஸ்வரர் குடைவரை லிங்கமாக அருள்கிறார். இவரின் சன்னதியில் அகஸ்தியரும், புலஸ்தியரும் புடைப்புச் சிற்பங்களாக அருள்கின்றனர்.