

பூக்கள் மட்டுமே அழகா. இல்லவே இல்லை காய்களும் கனிகளும் கூட அழகுதான். ரோஜாவை பார்த்து மயங்குகிறோம். தாமரையை பார்க்கையில் தடுமாறுகிறோம். செம்பருத்தியை போல நம் இதயத்தை கிள்ளும் பூ உண்டோ உலகில்! இப்படி நமது ஈடுபாடு எல்லாம் மலர்களோடு மட்டும் தான். காய்களையும் பழங்களையும் ரசிப்பதே இல்லை, புசிக்க மட்டுமே செய்கிறோம்..
காய்களை எடுத்துக்கொள்வோம்.
என்ன ஒரு அழகு கரு நீல கத்திரிக்காய். என்ன ஒரு அழகு அதன் வளைந்த காம்பு.. கத்திரிக்காயை யார் ரசிக்கிறார்கள் பச்சையாய்.. அதை நாம் பார்க்க விரும்புவது எண்ணெய் காய் வடிவில்...
வெண்டைக்காயை பார்த்திருக்கிறீர்களா செடியில்...? ஏன் என்றால் அதை நாம் காண விரும்புவது வாணலியில் வதங்கி கிடக்கையில்...
தக்காளி என்ன ஒரு சிவப்பு என்ன ஒரு வனப்பு. அதை பார்க்கும் போதெல்லாம் நமக்கு வரும் நினைப்பு ரசமும் சாம்பாரும், மட்டுமே!
காலையில் சென்று பாருங்கள் ஏதேனும் ஒரு காய்கறி கடையில். அடுக்கி வைத்திருப்பார்கள் தண்ணீர் தெளித்து வகை வகையாய் காய்கள். கண் கொள்ளா காட்சி தான் அது. விரல் விரலாய் வெண்டை , கொழு கொழு குழந்தைகள் போல கத்திரி, குவித்த கூழாங்கற்கள் போல உருளைக்கிழங்குகள், கொண்டை வைத்த கேரட்டுகள், பிறை பிறையாய் மஞ்சள் பூசணி பத்தைகள், குடைமிளகாய் குண்டலங்கள்...
நிஜமாகவே காய்கறிகளின் அழகை பார்க்க வேண்டும் என்றால் நாம் வட இந்தியாவிற்கு போக வேண்டும். நான் சில மாதங்கள் ஹரித்வாரில் தங்கி இருந்த போது காய்கறி கடைக்கு வாங்க மட்டுமல்லாது பார்க்கவும் போய் வருவேன். இங்கு நாம் காய்கறிகளை கொட்டி வைக்கிறோம். அங்கு அவர்கள் கலைநயத்தோடு அடுக்கி அழகு படுத்தி வைக்கிறார்கள். கண்ணைக் கவரும் காய்கறி கடைகள் தான் அவை.!
காய்களே கொள்ளை அழகு என்றால் கனிகளை பற்றி சொல்லவே தேவை இல்லை.
மயக்கும் மல்கோவா மாங்கனி முதல் அசர வைக்கும் மலையாள அன்னாசி வரை நம்மை கவராத கனிகள் இல்லை.
உள்ளும் புறமும் அழகான மாதுளை பழத்தை எடுத்து கொள்ளுங்கள். பழமல்ல அது; பவள பந்து தான் அது.
தங்க சுளை சுரங்கம் தான் பலா.
வாழைப்பழம், எத்தனை நிறங்கள் ? மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் நீலமும் கூட. சில வகை வாழைப்பழங்கள் தங்க நிறத்தில் புள்ளிகள் விழுந்து ஜொலிக்கும்.
கடைகளில் பார்ப்பதை விட ஆப்பிள்களை பார்க்க வேண்டும் மரத்தில். சிம்லாவுக்கு போகும்போது ரயிலில் காணலாம் ஆப்பிள் மரங்களை. சாப்பிட்டால் என்ன பார்த்தாலே பறந்து போகும் நம் உடலை விட்டு வியாதிகள்..
திராட்சை குலைகள் பச்சை நிற மூன்று பரிமாண தலைகீழ் கூம்புகள்..
கமலா ஆரஞ்சு பழத்தின் உள்ளே இருப்பவை இல்லை சுளைகள். ஆரஞ் நிற நிலா பிறைகள்..
ஏன் வைக்கிறார்கள் பழ தட்டுகளை சாப்பாட்டு மேசையில் தெரியுமா?
பழங்களின் தோற்றம் நம் மனதை சாத்வீகமாக்கும் என்பதால் தான். பழங்கள் சாப்பிட மட்டுமல்ல விருந்து; கண்களுக்கும் அவை விருந்து. பார்த்தாலே பலனளிக்கும் மருந்து..
உடலுக்கு ஊட்டம் வாய் வழியென்றால் உள்ளத்துக்கு ஊட்டம் கண் வழி தான் என்பதை அறிவோம்.