மனித உடலில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பு. கல்லீரல் ஒருவருக்கு பாதிக்கப்பட்டால் சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பு, இரத்த அழுத்தம், உணவு செரிமானம் இல்லாமை போன்ற நோய்கள் எளிதில் வந்து விடும். கல்லீரல் உடலின் பல முக்கிய உறுப்புகளை ஒருங்கிணைத்து வேலை செய்ய வைக்கிறது. கல்லீரல் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் அல்லது மது அருந்துபவர்கள் மற்றும் புகைப் பிடிப்பவர்களுக்கும் கல்லீரல் நச்சு ஏற்படும். அது கல்லீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் தன் வேலையை சரியாக செய்யாவிட்டால் இன்சுலின் சுரப்பது குறையும். அதனால் சர்க்கரை நோய் உண்டாகும். கல்லீரலில் கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் சேர்ந்தால் முதலில் அவரது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இது ஏப்பம், உப்புசம், எதுக்களிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை முதலில் ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்காமல் விடுகிறது. இதனால் விரைவில் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் கல்லீரலை சிறப்பாக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு முதலில் கல்லீரலில் உள்ள நச்சு மற்றும் கொழுப்பினை நீக்கும் உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. தினமும் காலையில் எழும்போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வருவது கல்லீரலுக்கு நல்லது. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீங்கள் பல நோய்கள், தொற்றுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். எலுமிச்சை சாறுக்கு கல்லீரலில் உள்ள கொழுப்பினை கரைக்கும் சக்தியும் உண்டு.
2. தினசரி உணவில் முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது கல்லீரலை சுத்தப்படுத்த உதவும். பீட்ரூட், கேரட், கீரை போன்றவற்றின் சாறு குடித்தால் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். இந்த இயற்கை உணவின் சாறுகளை உட்கொள்வதன் மூலம், நீங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவீர்கள். இது கல்லீரலை நச்சுத்தன்மையற்றதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.
3. பொதுவாக பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக, முழு பழங்களை சாப்பிடுங்கள். அரைக்கப்படாத பழங்களில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் உடலில் இருந்து நச்சுகள் எளிதில் வெளியேறும். மேலும் பழங்கள் உண்பது மலச்சிக்கலை தடுக்கும். காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையை நிர்வகிக்கும்.
4. முளை கட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரலைச் சுத்தப்படுத்தலாம். இது கல்லீரலில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது.
5. தினமும் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். அடிக்கடி வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சுத்தமாகும்.
6. கார்போஹைட்ரேட் நிறைந்த மாவு பொருட்களை அதிகளவில் உண்ணுவதை தவிர்க்கவும்.
7. வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதை தவிர்த்தால் கல்லீரல் தானாக தன் பணியை செய்ய தொடங்கும்.
8. சிகரெட், மது, கார்பனேட் நிறைந்த குளிர்பானங்களை தவிர்ப்பது கல்லீரலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாக்கெட் மட்டும் டின்களில் அடைத்த உணவுகளை தவிர்ப்பது கல்லீரல் நச்சினை குறைக்கும். மேலும் கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது அவசியம்.