குழந்தைகளுக்கான ஓர் உலகம்! படிக்கவும் எழுதவும் ஊக்குவிக்கும் உன்னத தளம்!
- உஷா கண்ணன்
'யானையின் பலமெதிலே தும்பிகையிலே: மனிதனின் பலமெதிலே நம்பிக்கையிலே'! நம்பிக்கையும், பலமும், ஆளுமையும் கொண்ட ஒரு பெண்ணால் விதைக்கப்பட்ட பேக்கிடெர்ம் டேல்ஸ் (Pachyderm Tales) என்ற நிறுவனம் இன்று விருட்சமாகி, நாளை பெரிய ஆலமரமாக தழைத்து ஓங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பல பட்டங்களையும், விருதுகளையும் தன் பின்னே தாங்கி அமைதியாக செயல்படும் முனைவர்.ர.லஷ்மி ப்ரியா அவர்களின் செயலாக்கமும், திட்டங்களும் பற்றி ஒரு சிறிய நேர்காணல்....
நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கு வைத்த பெயரே புதுமையாக உள்ளது. அதன் பின்னணி என்ன?
பேக்கிடெர்ம் (Pachyderm) என்றால் பெரிய உருவமுள்ள யானை. யானை குழந்தைகளுக்கு பிடித்த மிருகம் இல்லையா. அதான். குழந்தைகளுக்காக, குழந்தைகளை சென்று அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டது. நான் சிறுமியாக இருந்த போது நிறைய எழுதுவேன், அதை எப்படி புத்தகமாக்குவது என்று தெரியாமல் இருந்தேன். அந்த நிலை மாற வேண்டும் என்று நினைத்து துவங்கியதுதான் இந்த நிறுவனம்.
குழந்தைகளுக்காக என்று சொன்னீர்கள். அவர்களுக்கு உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?
'ப்ரக்ரிதி' (Prakrithi) என்று ஒரு திட்டம் ஆரம்பித்து இருக்கிறோம். இது குழந்தைகளுக்கான திட்டம். இதன் மூலம் 100 புத்தகங்கள், நவம்பர் 14, குழந்தைகள் தினத்தன்று வெளியிட்டு, அநேக குழந்தைகளை சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
STEAM கல்வி முறை என்பதை அறிமுகப்படுத்த முயன்று வருகிறோம். அதாவது விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் இவை அனைத்தையும் புத்தகம், பாடம் என்று கற்பிக்காமல், ஒன்றோடு ஒன்று இணைத்து கதை வடிவிலும், புதிர் வகையிலும் கற்பிக்க முயலுவதே STEAM கல்வியின் நோக்கம்.
குழந்தைகளுக்கு பல உரையாடல்கள் மூலமும், பல படங்கள், சிந்திக்க வைக்கும் புதிர்கள் மூலமும் சிந்தனை திறனை அதிகரித்து, அவர்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முக்கியமாக நம்முடைய கலாச்சாரம், பண்பாடு இவற்றின் அருமை பெருமைகளை தமிழில் அளிக்க முயன்று வருகிறோம். சத்தியமங்கலம், கொல்லிமலை, பச்சைமலை என்ற இடங்களில் உள்ள மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்க நினைத்துள்ளோம்.
சமீபத்தில் வெளியிட்டுள்ள வனவிலங்குகள் பற்றிய உங்கள் புத்தகங்கள் பற்றி சொல்லுங்கள்?
'ஆனந்த் சீரிஸ்' என்று ஒரு 10 வன விலங்குகளை பற்றிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம். அதன் சிறப்பு என்னவென்றால், அந்த வனவிலங்குகளை ஆபிரிக்கா கண்டத்தில் நேரடியாக படம் பிடிக்க பட்டவை. அதற்கு கதைகள் எழுதி உள்ளோம். நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
'உருவம் கேலி' இதைப் பற்றி உங்கள் கருத்து?
'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்று வள்ளுவர் சொன்னது போல் எனக்கு ஒருவர் உருவத்தை பார்த்து கேலி செய்வது பிடிக்காது. என்னை அதிகம் பேர் 'நூடுல்ஸ் தலை' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள், சின்ன வயதில். ஒரு ஹிப்போ போட்டமாஸ், நீர் யானையை யாரவது கேலி செய்கிறோமா, இல்லை அதன் உருவம் நம்மில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையே. சொல்லப்போனால் அந்த விலங்கு அனைவருக்கும் பிடிக்கிறது. அதுபோலத்தான் மனித புறத்தழகும் என்று புரியவைக்க முயலுகிறோம்.
சமீபத்தில் உங்கள் மற்றொரு புத்தகமான 'திருக்குறள் காமிக்ஸ்' வெளியிடப்பட்டது. அந்த அனுபவம் எப்படி இருந்தது?
படம் பார்த்து கதை சொல்வது, படிப்பது குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. திருக்குறளை அழகான குழந்தைகள் கதையாகவே படத்துடன் செய்ய முன்வந்த போது, நினைத்த அளவு அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு கதைக்கும் இணைப்பு தொடர்ந்து சரியாக வர வேண்டும். கதைகளம் நம்ம கலாச்சாரதிற்கு பொருந்தி இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற கார்ட்டூன் படங்கள் பொருந்தி இருக்க வேண்டும். எல்லாம் முடித்து பார்க்கும்பொழுது ஏதாவது ஒரு இடத்தில் பொருந்தி வராவிட்டால், மறுபடியும் முதலிலிருந்து மாற்ற வேண்டும். எங்களுக்கு ஒரு வருடம் எடுத்தது. ஆனால் புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பு நாங்கள் பட்ட கஷ்டத்தை ஈடு செய்துவிட்டது.
நீங்கள் சீனியர் சிட்டிஸன் எழுத்தாளர்களையும் ஆதரிக்கிறீர்கள். குழந்தைகளா/ சீனியர் சிட்டிஸன்களா யாரிடம் வேலை வாங்குவது பெரிய சவாலாக உள்ளது?
கண்டிப்பாக சீனியர் சிட்டிஸன். அவர்கள் இதுவரை தன்னுடைய குடும்பம், வேலை என்று ஒரு வட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தொழில்நுட்பம் அந்த அளவு பரிச்சயம் இல்லை. வயது ஒரு காரணம். மொழி ஒரு பிரச்சனை. இங்கு எல்லாவற்றிற்கும் ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அவர்கள் கையெழுத்துப் பிரதியை டிஜிட்டல் பண்ண நேரம் இல்லை, ஆளும் இல்லை. சிலர் கற்க முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களுடன் உள்ள கருத்துக்கள், எண்ணங்கள் கண்டிப்பாக இந்த வெளி உலகத்திற்கு, அடுத்த தலை முறைக்குத் தேவை. முயற்சி செய்து வருகிறோம்.
குழந்தைகள் மிகவும் சுட்டி. டிஜிட்டல் உலகம் அவர்கள் விரல் நுனியில். பெற்றோர்கள் தலையீடு சில நேரங்களில் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.
எழுத்தாளர்களை எப்படி ஊக்குவிக்கிறீர்கள்?
"ஊன்று கோல் பிடிக்கும் வயதில் எழுதுகோல் பிடிக்க வச்சுட்டிங்க" என்று ஒரு மூத்த எழுத்தாளர் கூறினார். ஆம்! 100க்கும் மேற்பட்ட எங்கள் மூத்த எழுத்தளர்களுக்கு நாங்கள் பல வேறு தலைப்புகள் தருகிறோம்.
உதாரணத்திற்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்களில் அதிகம் பேசப்படாத பாத்திரங்கள் எடுத்து அவர்களைப் பற்றி எழுதி வெளிச்சத்திற்கு கொண்டுவர செய்தோம். இதில் பேக்கிடெர்ம் டேல்ஸ் (Pachyderm Tales) நிறுவனத்தின் துணை இயக்குனரும் என்னுடைய தாயாருமான உமா அபர்ணாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது ஊக்கத்தினால் அநேக எழுத்துக்கள் புத்தக வடிவமாக்கப்பட்டன. எழுத்தாளர்களை ஊக்குவிக்க விழா அமைத்து அநேக சான்றிதழ்கள், மெடல்கள் தருகிறோம்.
பேக்கிடெர்ம் டேல்ஸ் (Pachyderm Tales) இதுவரை 1000 மேற்பட்ட எழுத்தாளர்களை 5 வயது முதல் 90 வயது வரை அறிமுகப்படுத்தி உள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். அவர்களையும், அவர்கள் படைப்புகளையும் இணைத்து பேக்கி டெர்ம் டேலஸ் (Pachyderm Tales) வலை தளம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பிளாக் (Blog), பேக்கிடெர்ம் செய்தி போன்றவை (Pachyderm Tales News letter) அதில் இடம் பெரும். ஒரு சுண்டு விரல் சொடுக்கில் பேக்கி டெர்ம் (Pachyderm) பற்றிய முழு விவரமும் உலகத்திற்கு அறியச் செய்ய முயன்று வருகிறோம்.
வேறு ஏதாவது நாடுகளுடன் கை கோர்த்து செயல் படுகிறீர்களா?
இந்தோனேஷியா, பாலி போன்ற நாடுகளின் கலாச்சாரம் நம்முடன் ஒத்து போவதால் அவர்களுடன் கை கோர்த்து உள்ளோம். அங்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஓமனிலும் 1000 குழந்தைகளை வைத்து கதை எழுதுவது என்ற ஒரு திட்டத்தில் கை கோர்த்துள்ளோம்.
அநேகரின் படைப்புகளைப் படைத்த உங்கள் படைப்பான 'ரகசியம்' பற்றி சொல்லுங்கள்.
முதலில் சொல்லி விடுகிறேன் இது குழந்தைகளைப் பற்றிய பெரியோருக்கான புத்தகம். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் / கதைகள் பெரியவர்களும், ஆசிரியர்களும் உணர்ந்துக்கொள்ள வேண்டிய யதார்த்ததை அறிவுறுத்துகிறது. பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றும் குழந்தை உள்ளத்தில் அநேக போராட்டங்கள், வலிகள், கனவுகள், காட்சிகள் பற்றிய ஒரு எச்சரிக்கை அடங்கிய புத்தகம். என்னுடைய கன்னி முயற்சியில் உருவான புத்தகம். இன்னும் சில கூடுதல் தகவல்களுடன் வெளியிடும் எண்ணம் உள்ளது.
இந்த தொழிலில் உங்களுக்கு போட்டி இருப்பதாக நினைக்கிறீர்களா?
ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். பேக்கிடெர்ம் டேல்ஸ் (Pachyderm Tales) ஒரு literary consultancy organisation புரட்சிகரமான இலக்கிய ஆலோசனை நிறுவனம். நாங்கள் புத்தக வெளியீட்டார் இல்லை. நாங்கள் எழுத்தாளருக்கும் புத்தக வெளியீட்டாருக்கும் இடையில் செயல் படுகிறோம். எங்களுக்கு நாங்களேதான் போட்டியாளர். எங்களுடைய முக்கிய நோக்கம் நல்ல இலக்கிய தரமான எழுத்துக்களை சமூகத்திற்கு தர வேண்டும் என்பதே.
இதுவரை எவ்வளவு மொழியில் எவ்வளவு புத்தகங்கள் வெளியிட்டு உள்ளீர்கள்?
14 மொழிகளில், 1000 மேற்பட்ட எழுத்தளர்களின் 800 மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம். அதில் மலையாளம், பிரஞ்சு போன்றவையும் அடக்கம். தமிழில் அநேக புத்தகங்கள், குழந்தைகளுக்காக வெளியிடவேண்டும் என்பது எங்களது தீராத தாகம்.
Shiminent Award 2025, Woman Icon Award 2024, Yuva Shakthi Award 2023, Best Brand Award, International Social Worker Award போன்ற விருதுகளை (இவை எல்லாம் துவக்கமே , முடிவு அல்ல) தாங்கி நிற்கும் முனைவர். ர.லஷ்மி ப்ரியா மேலும் மேலும் பல விருதுகள் பெற்று தன்னுடைய முயற்சியில் சிகரம் தொட வாழ்த்துவோம்.