
உடல் நிற்பதற்கும் நடப்பதற்கும் உடலை சமநிலையாக வைக்கவும் உதவுவது பாதங்கள்தான். உடலை தாங்கும் பாதம் நன்றாக இருந்தால்தான் உடல் சமநிலை பெற்று சரியாக நடக்க, செயல்பட முடியும். உடலில் உள்ளுறுப்புகள் போன்று பாதங்களிலும் பாதிப்புகள் உண்டாகக்கூடும்.
தலைவலி, கை, கால்வலி, கழுத்து வலி உபாதைகள் போன்று பாதங்களிலும் வலி உண்டாகும். பாதங்களில் எரிச்சல் என்பது வேறு. பாதங்களில் வலி உண்டாவது வேறு. மற்ற பாகங்களைக் காட்டிலும் பாதங்களில் வலி என்பது நடை இயக்கத்தையே பாதிக்கக்கூடியது.
மனிதன் வாழ்நாளில் அவனது 50வயது வரையில் 75ஆயிரம் மைல்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. நடைபயிற்சி நல்லதே என்றாலும் தொடர்ந்து நடக்கும்போது பாதங்களில் தேய்மானம், காயம், அழுத்தம் காரணமாக தளர்வு போன்ற உபாதைகள் உண்டாகக்கூடும். இதனால் தரையில் கால் வைக்கவே பலரும் அச்சப்படுவார்கள்.
பாதங்கள் மட்டுமன்றி குதிகால், கணுக்கால், கால் விரல்களுக்கு இடையே உள்ள எலும்புகள் பலவீனமடைவதால் இந்த வலி உண்டாகிறது. கரடுமுரடான இடத்தில் ஓடுதல் குதித்தல், வெறும் கால்களில் நடத்தல் போன்றவற்றால் பாதங்களின் பின்பகுதியில் அழற்சி உண்டாகிறது. தசைநாரில் அதிக அழுத்தம் ஏற்படும்போது காயங்கள் உண்டாகும்போது இந்த பாதவலி அதை ஒட்டி குதிகால்வலி ஏற்படலாம். உரிய காலணிகள் அணியாமல் நடக்கும்போது பாதங்களின் நடுவே வலி உண்டாகும்.
கணுக்காலில் இருந்து கால் விரல்களை இணைக்கும் பாத எலும்புகளில் வலி உண்டாகும். சிலருக்கு கால் விரல்களில் ஒன்று வளைந்திருக்கும். சிலருக்கு நீரிழிவு நோய் இருந்தால் பாதங்களின் நடுவே வலி உண்டாகும். சமயத்தில் பாத எரிச்சலும் ஏற்படும். தட்டையான பாதம், வளைந்த பாதங்களும் வலியை ஏற்படுத்தும்.
உடல் பருமனால் பாதவலி வரும்போது உடல் எடையைக் குறைத்தாலே, பாத வலியும் குறையும். ஐஸ்கட்டி ஒத்தடங்கள், பிசியோதெரபி, வேக்ஸ் வைத்து பிசியோதெரபி பண்ணும்போது வலி நன்கு குறையும். பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம். ஃபிசிகல் தெரபிமூலம் பாதங்களையும், குதிகால்களையும் வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும். இரவில் தூங்கும்போது அணியக்கூடிய ஸ்ப்லின்ட் உபயோகிக்கலாம்.
ஹை ஹீல்ஸ் போடுவதை தவிர்ப்பது, குதிப்பது போன்றவற்றை தவிர்க்க குணமளிக்கும். ஷாக் அப்சார்பர் போன்ற பாதங்களுக்கு சப்போர்ட் தரக்கூடிய காலணிகளை அணியலாம்.
இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் மூன்று சொட்டு வைத்து தொப்புளைச் சுற்றி மசாஜ் செய்யும்போது பாத வலி பெருமளவு குறையும்.