நம்முடைய அன்றாட உணவு வகைகளில் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் உணவு வகைகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. இவற்றை நாம் விரும்பிய போதெல்லாம் சாப்பிட முடியாது. அந்தந்த சீசனில் மட்டுமே அவற்றை சாப்பிட முடியும். அதனடிப்படையில் தற்போது சீசன் தொடங்கியுள்ள பனங்கிழங்கில் இருக்கும் அற்புதமான நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பனங்கிழங்கில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். பனங்கிழங்கில் Low glycemic index உள்ளது. இந்த வேதிப்பொருள் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளும் பனங்கிழங்கினை சாப்பிடலாம்.
பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ரத்தசோகை மற்றும் கருப்பை பிரச்சினை. வளர் இளம் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடினால் வரும் ரத்த சோகையை தடுப்பதற்கு பனங்கிழங்கினை தாராளமாக சாப்பிடலாம். கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை பலப்படுவதை உறுதி செய்யலாம்.
பனங்கிழங்கில் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகள் பனங்கிழங்கினை சாப்பிடலாம். மேலும் பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துவதோடு எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு பனங்கிழங்கை சாப்பிட கொடுப்பதன் மூலம் எலும்பு சம்பந்தமான ஆஸ்டியோ போராசிஸ் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். பனங்கிழங்கு குழந்தைகளின் திசுக்களின் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
மாலை வேளைகளில் பனங்கிழங்கினை வேகவைத்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். இதில் புரோட்டின், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பனங்கிழங்கு மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. எனவே எப்பொழுதும் உடல் சூடாக இருப்பவர்கள் உடல் சூட்டை தணிப்பதற்காக பனங்கிழங்கினை எடுத்துக் கொள்ளலாம். ஆண்கள் பனங்கிழங்கை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ஆண்மை குறைவு பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும். பனங்கிழங்கில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் பனங்கிழங்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதிலும், ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
எப்படி சாப்பிடலாம்:
பனங்கிழங்கை நன்கு சுத்தப்படுத்தி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கை நன்கு வேகவைத்து உதிர்த்து உப்புமா செய்து சாப்பிடலாம்.
நன்கு வேக வைத்து அதனை காய வைத்து பொடித்து எடுத்துக்கொண்டு அதனுடன் வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பனங்கிழங்கை பொடி செய்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
பனங்கிழங்கை வேக வைத்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் பசும்பால் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து கொடுக்கலாம்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டங்களில் பனங்கிழங்கு தாராளமாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிழங்கு என வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் சாப்பிடலாம்.