

காலிங்கராயன் அணை தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையாகும். இது, பவானி ஆறும், நொய்யல் ஆறும் சந்திக்கும் பவானியின் கூடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. காலிங்கராயன் கால்வாய் இதிலிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டத்தைச் செழிக்கச் செய்கிறது. 2017ஆம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில், குழந்தைகள் பூங்காவும் மணி மண்டபமும், சிலையும் நிறுவி திறந்துவைத்தார். இது இன்று ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.
காலிங்கராயன் யார்? காலிங்கராயன் கால்வாய் உருவானது எப்படி?
முன்னொரு காலத்தில் ஒரு அற்புதமான சம்பவம் தமிழ்நாட்டிலே நடந்தது. காலிங்கராயன் என்று ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய படை திறமையால் பாண்டிய நாட்டின் கொங்கு மண்டலத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஆஜானுபாகுவானவர். ஆறு அடிக்கு மேல் உயரம் கொண்டவர். வலிமையான தோள்கள் உடையவர். அவர் அந்த மண்டலாதிபதியாக மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.
ஒருநாள் சகோதரியினுடைய வீட்டிலே ஒரு திருமணம். அதற்காக அவர் தஞ்சை மண்டலத்திற்குச் சென்றார். சகோதரி அவருக்கு உணவிட்டார். ஓரளவு வயிறு நிரம்பியதும் போதும் என்றார்.
சகோதரி சொன்னார், “இன்னும் கொஞ்சம் அரிசி சாதம் சாப்பிடு, உன் ஊரில் கம்பும் கேழ்வரகும்தானே. அங்கே போய் இதற்காக ஏங்காதே. இங்கேயே சாப்பிடு" என்றாள். அது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அதனால், தன் சகோதரியிடம் “என் ஊரையும் செழிப்பாக மாற்றுவேன்” என்று உறுதி எடுத்துக்கொண்டு, உடனே அங்கிருந்து வெளியேறி விட்டார்.
ஆனால், அவருடைய ஊரில் எந்த ஆறுகளும் ஓடவில்லை. அவருடைய அந்த ஊரிலிருந்து கொஞ்சம் தொலைவில் பவானியும், மோயாறும் சேருகின்ற பகுதி இருந்தது. அங்குக் கால்வாய் வெட்ட வேண்டும் என்றால் மிகவும் கடினம். ஏனென்றால், 50 அடிக்குக் குறைவான சரிவுதான் இருக்கிறது. எப்படி தண்ணீரை எடுத்துச் செல்ல முடியும் என்று சிந்தித்து சிந்தித்து பார்த்தார்.
எதையாவது ஒன்றை இடைவிடாமல் சிந்தித்தால் உங்களுக்கு நினைவிலே தீர்வு வராவிட்டாலும் கனவிலே தீர்வு வரும். அப்படித்தான் காலிங்கராயனுக்கும் தூங்குகின்றபோது ஒரு கனவு வந்தது, அதில் பாம்பு ஒன்று வளைந்து வளைந்து மேடை ஏறி செல்வதைப்போல் தெரிந்தது. அப்போதுதான் அவர் புரிந்துகொண்டார். கால்வாயை வளைந்து வளைந்து நாம் வடிவமைக்க வேண்டும் என்று. அதேபோன்று நாம் வடிவமைக்கலாம் என்று முடிவும் செய்தார்.
1271 ஆம் ஆண்டு பணியை தொடங்கினார். 1283 ஆம் ஆண்டு பணியை முடித்தார். அந்த கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. தண்ணீர் அதிலேயே துள்ளிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அப்போது அதில் ஒரு ஊர்க்காரர், "உன்னுடைய ஊருக்கு நீ நீர் கொண்டுவருவதற்காக ஊர் மக்கள் எல்லோரையும் போட்டு படாதபாடு படுத்திவிட்டாய்” என்றார். இது காலிங்கராயன் நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. அப்போது, காலிங்கராயன் ஒரு முடிவெடுத்தார். ‘இதனால், வருகிற பலனை நான் அனுபவிக்கவே மாட்டேன்’ என்று உறுதி பூண்டார். அதனால், இந்தத் தண்ணீரே இல்லாத ஊத்துக்குளி என்கிற புஞ்சை நிலத்தில் அவர் தன் குடும்பத்துடன் சென்று குடியேறினார்.