இயற்கையாகவே ஒவ்வொரு உணவுகளுக்கும் தனித்தனி ஆரோக்கியம் அளிக்கும் பண்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, சுவையைப் பொறுத்து அந்த உணவு வகைகளை நாம் பிரிக்கலாம். இனிப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு போன்ற சுவையுடைய உணவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளன.
இனிப்பு சுவை என்றாலே அது அதிக சக்தி கொண்டதாகும். இது உடம்பு தசையை வளர்க்கும் தன்மை கொண்ட சுவையாகும். எனவே, உருளைக்கிழங்கு, கேரட், பழ வகைகள், கோதுமை, அரிசி, கரும்பு போன்ற உணவுகளில் இனிப்புச் சத்து அதிகம் அடங்கியுள்ளது.
கார உணவுகள் உடலுக்கு உஷ்ணம் மற்றும் உணர்ச்சிகளை தரக்கூடியதாகும். இதில் இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, மிளகாய், வெங்காயம் போன்றவை அடங்கும். இந்த உணவுகளில் அதிகப்படியான காரச் சுவை அடங்கியுள்ளதால், உடல் சூடு உடையவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
துவர்ப்பு சுவைக்கு இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உள்ளது. இது அடிபட்டால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். மஞ்சள், அவரை, வாழைக்காய், மாதுளை, அத்திக்காய் போன்றவற்றில் துவர்ப்பு சுவை அடங்கியுள்ளதால், இவற்றை அனைவருமே உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உவர்ப்பு சுவைக்கு ஞாபக சக்தியை கூட்டும் பண்பு உள்ளது. அதேசமயம், இது உடலில் அதிகம் சேர்ந்தால் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி வீக்கத்தை உண்டாக்கும். வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய், கீரைத்தண்டு போன்றவற்றில் உப்பு சுவை அதிகம் உள்ளது.
கசப்பு சுவைக்கு உடலில் உள்ள தேவையில்லாத கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளது. அதுமட்டுமின்றி, இது உடலுக்கு அதிக ஆற்றல் கொடுக்கும் சுவையாகும். கத்தரிக்காய், வெந்தயம், பாகற்காய், எள், பூண்டு, வேப்பம்பூ போன்றவற்றில் கசப்பு சுவை அதிகம் உள்ளது.
இப்படி, ஒவ்வொரு சுவையைக் கொண்ட உணவுக்கும், தனித் தனி பண்புகளும் ஆற்றல் மூலங்களும் உள்ளன. எனவே, உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அத்தகைய உணவை எடுத்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.