

கடையில் கிடைக்கும் செயற்கை பவுடர்களை விட, வீட்டில் தயாரிக்கும் சத்து மாவு குழந்தைகளுக்கு முழு சத்தும், நல்ல புஷ்டியும் தரும் என்பதை இந்த பதிவு கூறுகிறது. பல வகை சிறுதானியங்கள், அரிசி, பருப்பு, நட்டுகள், விதைகள், கேழ்வரகு, மக்கானா போன்றவற்றை சரியான முறையில் வறுத்து அரைத்து, பயணங்களிலும் எடுத்துச் சென்று சட்டென்று கஞ்சி செய்து கொடுக்கலாம்; இதனால் தாய்மார்களின் சிரமம் குறைந்து, குழந்தைகள் சுறுசுறுப்பாக வளர முடியும்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் நாம் கடையிலிருந்து வாங்கும் செயற்கை உணவுகளைக் காட்டிலும், நமது பாரம்பரிய முறையில் வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்கும் சத்து மாவே மிகச்சிறந்தது. ஏழாவது மாதத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கக்கூடிய இந்த சத்து மாவு, நல்ல புஷ்டியுடன் வளர பெரிதும் உதவுகிறது. இந்தச் சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த மாவை எளிமையாக எப்படி தயார் செய்வது, அதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
திணை, வரகு, குதிரைவாலி, சாமை, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் தலா -100 கிராம்.
சிவப்பரிசி, கருப்பு கவுனி, பச்சரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பார்லி, ஜவ்வரிசி, சம்பா கோதுமை, ஓட்ஸ், அவல் தலா -100 கிராம்.
பச்சைப்பயிறு, பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருப்பு உளுந்து, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கொள்ளு, சிறிய சைஸ் காராமணி, ராஜ்மா, வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல், சோயா, மசூர் தால்தலா- 100 கிராம்.
பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, பூசணி விதை தலா- 50 கிராம்.
கசகசா, மிளகு, சுக்கு தலா - 20 கிராம்.
கேழ்வரகு, மக்கானா தலா - 250 கிராம்.
செய்முறை:
மேலே கொடுத்துள்ள பொருட்களை சுத்தமாக்கி எடுத்து வைக்கவும்.
இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எல்லாவற்றையும் தனித்தனியாகப் போட்டு மைல்டாக வறுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். பிறகு மெஷினில் கொடுத்து நன்றாக அரைத்து ஆறவிட்டு அதை சல்லடையால் சலித்து காற்று புகாத பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும் .
தேவையான பொழுது அதில் மூன்று ஸ்பூன் பவுடரை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக கலந்து அதை கொதிக்க விடவும்.
அதனுடன் ஆப்பிள் / வாழைப்பழம் என்று ஏதாவது ஒன்றை நறுக்கி அதனுடன் சேர்த்து வேகவிட்டு வெல்லம், பனங்கற்கண்டு, என்று தேவையான அளவு அதில் கலந்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பர். எல்லாவிதமான சத்துக்களும் இதில் அடங்கி இருப்பதால் குழந்தைகள் நல்ல புஷ்டியுடன் வளர்வார்கள்.
இதில் விதைகளை வறுக்கும் பொழுது ராகி/ அரிசிகளுடன் சேர்த்து வறுத்தால் பதமாக இருக்கும். தனியாக வறுத்தால் கருகிவிடும். மக்கானாவை வெறும்வாணலியில் வறுத்து ஆறவிட்டு ஒடித்தால் நன்றாக ஒடிக்க வரும் அதுதான் பதம். வறுத்தவுடன் ஒடித்தால் வதக்கென்று இருக்கும். அதற்காக அதிக நேரம் வறுக்கக் கூடாது.
இந்த சத்து மாவு பவுடரை வெளியூர் பயணம் சென்றாலும் எடுத்துச் செல்லலாம். போகும் இடங்களில் சட்டென்று சமைத்துக் கொடுத்து குழந்தைகளின் பசியைப் போக்கலாம். இதனால் தாய்மார்களுக்கும் சிரமம் இருக்காது. மாதம் கூட கூட பவுடரின் அளவையும், தண்ணீரின் அளவையும் அதிகப்படுத்திக் கொள்ளவும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் தாய்மார்களின் பங்களிப்பு எப்போதுமே தனித்துவமானது. வெளியூர் பயணங்களின் போதும் கூட இந்தச் சத்து மாவு டப்பாவை எளிதாக எடுத்துச் சென்று, சட்டென்று கஞ்சி தயாரித்துக் குழந்தைகளின் பசியைப் போக்க முடியும்.
இது குழந்தைகளின் உடல் எடை சீராகக் கூடுவதற்கும், நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். தாய்மார்களின் சமையலறைச் சிரமத்தைக் குறைக்கும் இந்த அரும்பெரும் சத்துமாவை இன்று இன்றே உங்கள் வீட்டில் தயார் செய்து உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளியுங்கள்!
இரசாயனங்கள் கலந்த வெளிநாட்டு உணவுகளைத் தவிர்த்து, வீட்டிலேயே தயாரிக்கும் இந்த பாரம்பரியச் சத்து மாவு கஞ்சியைத் தொடர்ந்து அளிப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் உடல் எடையும் ஆரோக்கியமும் இயற்கையான முறையில் பன்மடங்கு அதிகரித்து, அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் வலம் வருவார்கள்.